
குறள் – ௪௱௮௧ (அச்சில் உள்ளவாறு).
“பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.”
கூகை = கோட்டான், ஆந்தை.
இகல் = பகை.
“கூகையை காக்கை பகல்வெல்லும். (அதுபோல) இகல்வெல்லும் வேந்தர்க்கு பொழுது வேண்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தன்னின் வலிமையுடைய கூகையை காக்கை பகலில் வெல்லும். அதுபோல பகையை வெல்லக்கருதும் வேந்தர்க்கு ஏற்றகாலம் இன்றியமையாதது” என்பதாம்.
‘கூகையை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘காக்கை’ என்னும் பெயரொடு புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
கூகையை காக்கை பகலில் வெல்லும் என்பது ஒரு கருத்து. கருத்துமுடியுமிடங்கள் புணரா.
செம்மைவடிவம் —
“பகல்வெல்லுங் கூகையை காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.”
குறள் – ௪௱௮௨ (அச்சில் உள்ளவாறு).
“பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.”
பருவம் = ஏற்ற காலம்.
ஒட்ட = பொருந்த.
ஒழுகல் = நடத்தல்.
திரு = செல்வம்.
தீராமை = நீங்காமை.
ஆர்க்கும் = பிணிக்கும், கட்டும்.
“ஏற்ற காலத்தொடு பொருந்தி வினைசெய்து ஒழுகுதல், செல்வம் நம்மை விட்டு நீங்காமல் கட்டும் கயிறு” என்பதாம்.
’பருவத்தோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் வேற்றுமையுருபு அத்துச்சாரியைபெற்று பருவப் என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘திருவினை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘தீராமை’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
செயலையும் செயலின் பயனையும் பிரித்தறிய ‘ஒழுகல்’ என்னும் தொழிற்பெயர் புணராது நிற்கும்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“பருவத்தோடு* ஒட்ட வொழுகல் திருவினை
தீராமை யார்க்குங் கயிறு.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௮௩ (அச்சில் உள்ளவாறு).
“அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.”
அருவினை = அரிய வினை.
உளவோ = உண்டோ.
செயின் = செய்தால்.
“காலமறிந்து கருவியால் செயின் அருவினையென்ப உளவோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஏற்ற காலத்தையறிந்து செயலைச்செய்துமுடித்தற்குரிய கருவிகளால் செய்தால் அரியவினைகள் என்பது உண்டோ; இல்லை” என்பதாம்.
‘என்ப’ என்னும் இடைச்சொல் ‘அருவினை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கருவியால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘கருவி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“அருவினை யென்ப உளவோ கருவியால்
கால மறிந்து செயின்.”
குறள் – ௪௱௮௪ (அச்சில் உள்ளவாறு).
“ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.”
ஞாலம் = உலகம்.
கருதினும் = வேண்டினும்.
செயின் = செய்தால்.
“காலங்கருதி இடத்தான் செயின் ஞாலங்கருதினும் கைகூடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஏற்ற காலத்தையறிந்து பொருத்தமான இடத்தில் செய்தால் செயற்கரிய செய்யக்கருதினும் அது நிறைவேறும்” என்பதாம்.
‘கைகூடும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘காலம் கருதி’ என்பது ‘காலத்தைக்கருதி’ என்பதாக விரியும். ‘ஞாலங்கருதினும்’ என்பதுபோல் வேற்றுமைத்தொகையாக புணரும். ஞாலங்கருதினும் என்பது ‘அரியது கருதினும்’ என்னும் பொருளது.
‘இடத்தான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இடம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஞாலங் கருதினுங் கைகூடும் காலங்
கருதி இடத்தான் செயின்.”
குறள் – ௪௱௮௫ (அச்சில் உள்ளவாறு).
“காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.”
காலம் = ஏற்ற பொழுது.
ஞாலம் = உலகம்.
“ஞாலங்கருதுபவர் கலங்காது காலங்கருதியிருப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘ஞாலங்கருதுபவர்’ என்பது ‘அரியது செய்வார்’ என்னும் பொருளது.
‘அரியது செய்ய விரும்புவார் ஏற்ற காலத்தைக்கருதி அது வருந்துணையும் கலக்கமுறாமல் காத்திருப்பர்’ என்பதாம்.
இக்குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௪௱௮௬ (அச்சில் உள்ளவாறு).
“ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.”
ஒடுக்கம் = ஒடுங்கியிருத்தல்.
பொரு → பொருதல் = முடித்தல் (போரிடுதல்).
தகர் = ஆட்டுக்கடா.
பேர் → பேர்தல் → பேரும் = பின்வாங்கும்.
தகைத்து = தன்மையது.
“ஊக்கமுடையான் ஒடுங்கியிருத்தல் (காத்திருத்தல்) போரிடும் ஆடு தன்பகையை வெல்ல பின்வாங்கி தாக்கும் தன்மையது” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௪௱௮௬ (அச்சில் உள்ளவாறு).
“ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.”
ஒடுக்கம் = ஒடுங்கியிருத்தல்.
பொரு → பொருதல் = முடித்தல் (போரிடுதல்).
தகர் = ஆட்டுக்கடா.
பேர் → பேர்தல் → பேரும் = பின்வாங்கும்.
தகைத்து = தன்மையது.
“ஊக்கமுடையான் ஒடுங்கியிருத்தல் (காத்திருத்தல்) போரிடும் ஆடு தன்பகையை வெல்ல பின்வாங்கி தாக்கும் தன்மையது” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௪௱௮௭ (அச்சில் உள்ளவாறு).
“பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.”
பொள்ளென = விரைவாக.
புறம் = வெளிப்பட.
வேரார் = சினவார்.
உள் = உள்ளே (மனத்துள்ளே).
வேர்ப்பர் = சினப்பர்.
ஒள்ளியவர் = தெளிந்த அறிவுடையார்.
“ஒள்ளியவர் பொள்ளென புறம்வேறார். காலம்பார்த்து உள்வேர்ப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தெளிந்த அறிவுடையார் பகைவர் மிகை செய்தபொழுதே விரைவாக அவரறிய வெளிப்படையாக சினவார். தனது சினத்தை வெளிப்படுத்தும் காலம் வரும்வரை தம்மனத்துள் சினந்திருப்பர்” என்பதாம்.
‘ஆங்கே’ என்னும் சுட்டு புணராது தனித்து நிற்கும். வகரவுடம்படுமெய்யிட்டபின் ‘ஆங்கே’ என ஒலித்து பொருளறிவதாயின் புணர்த்த வேண்டா. ‘பொள்ளெனவாங்கே’ என்பது வேண்டாப்புணர்ச்சி.
‘உள்வேர்ப்பர்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்பது ‘உள்ளத்தில்’ என்னும் பொருளது. ‘பார்த்துள்’ எனப்புணர்த்தினால் ‘உள்’ என்பது ஏழாம்வேற்றுமைவுருபாக மயங்கும். மயங்குபுணர்ச்சி எம்மொழியிலும் இல்லை.
‘வேர்ப்பர்’ என்னும் வினைமுற்று ‘ஒள்ளியவர்’ என்னும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது
செம்மைவடிவம் —
“பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து*
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.”
* குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௮௮ (அச்சில் உள்ளவாறு).
“செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை.”
செறுநர் = (வலிய) பகைவர்.
சுமக்க = ஏற்க, பணிக.
இறுவரை = இறுதிக்காலம்.
கிழக்கு = இழிவு→ இழிதல் → நீங்கல்.
“செறுநரைக்காணின் சுமக்க இறுவரைகாணின் தலை கிழக்காம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தம்மினும் வலிய பகைவரைக்காணின் பணிக. (அவர்தம்) வலிமைக்கு இறுதிக்காலம் நேரின் அவர்தம் தலை நீங்கும்” என்பதாம்.
‘சுமக்க’ என்னும் வினையெச்சம் ‘இறுவரை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
’தலை கிழக்காம்’ என்பதே கொண்டுகூட்டு. வேறோரிடம் சென்று பொருந்திப்பொருள்தருஞ்சொற்கள் சீரமைப்பில் புணரா; புணரின் பிரியா. எனவே காணின்’ என்னும் வினையெச்சம் ‘கிழக்காம்’ (கிழக்கு ஆகும்) என்னுஞ்சொல்லுடன் புணராது.
‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.”
குறள் – ௪௱௮௯ (அச்சில் உள்ளவாறு).
“எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.”
எய்துதற்கு= அடைவதற்கு.
இயைந்தவிடத்து = கூடியவிடத்து.
செயல் = செய்க.
“அடைதற்கு அரியதான காலம் கூடிய அந்நிலையிலே செய்தற்கு அரியவற்றைச்செய்க“ என்பதாம்.
‘இயைந்தக்கால்’ என்னும் வினையெச்சம் ‘அந்நிலையே’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.”
குறள் – ௪௱௳௯௰ (அச்சில் உள்ளவாறு).
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.”
மற்று = அசைச்சொல்.
கூம்பும் பருவத்து = பொருந்தா காலத்து.
ஒக்க = ஒத்திருக்க.
குத்து = கொத்தல்.
சீர்த்த = பொருத்திய காலத்து.
“கூம்பும் பருவத்து கொக்கொக்க. சீர்த்தயிடத்து அதன் குத்தொக்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒரு வினை நிறைவேறும் காலம் வரும்வரை கொக்கினைப்போல காத்திருக்க. அக்காலம் வாய்க்கும்போது கொக்கினைப்போல தப்பாது செய்து முடிக்க” என்பதாம். ‘கொக்கு ஒக்க’ என்பது ‘கொக்கு கூம்புவதுபோல கூம்புக’ என்றும், ‘குத்து ஒக்க’ என்பது ‘கொக்கு குத்துவதுபோல குத்துக’ என்றும் உரைக்கப்படும்.
‘சீர்த்தவிடத்து’ என்பதைக்காட்டிலும் சீர்த்தயிடத்து என்னும் யகரவுடம்படுமெய்ப்புணர்ச்சி ஒலிப்பொப்புமையும் பொருள்மயங்காமையும் உடைத்து. உடம்படுமெய் உருபு வரையாமை தொல்காப்பியநெறி.
செம்மைவடிவம் —
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த யிடத்து.”
தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




