
“இவளோ ரேழை “
ஐம்பருப்பொருட்களுக்குக்கூட கதவடைப்புச்செய்துவிட்டு
தமிழின் கதவுகளை மட்டும் திறந்துவைத்திருக்கும் ஏழை..
எந்தவொரு உறவுகளுக்கும் இடமளிக்காமல் கடமையைச்செய்துவிட்டு
தமிழிடம் ஓடிச்சென்று அணைந்துகொள்ளும் ஏழை ..
நல்மாந்தர் கெடுமாந்தரென வேறுபாடற்று எதிர்கொண்டுவிட்டு
தமிழிடம் ஓடிச்சென்று ஒளிந்திருக்கும் ஏழை…
அன்பைக்கொடுத்தாலும் எதிர்ப்பைக்கொடுத்தாலும் வேறுபாடற்று உதறித்தள்ளிவிட்டு
தமிழின் கைகளை இறுகப்பற்றிக்கொள்ளும் ஏழை ..
சிரித்துப்பேசிப்பழகுவதையே மறந்துவிட்டு
தன்னைமறந்து தமிழையே நாடியோடும் ஏழை..
சமயம்கடந்து வகுப்புக்கடந்து இனங்கடந்து கடவுரைக்கடந்து
தமிழே யெல்லாம் எனச்செத்துக்கொண்டிருக்கும் ஏழை ..
உண்பது உடுப்பது நயப்பது வாழ்வது அனைத்தையும் மறந்து
தமிழின் காலில் வீழ்ந்துகிடக்கும் ஏழை…
உலகம் எவ்வழிச்செல்கிறதென அறியா, பிறப்பியலும் வாழ்வியலும்
தமிழொன்றே என்றுவாழும் ஏழை..
அன்பென அணைத்துநிற்பவர்களும் அன்புக்குத்தகுதியற்றவளென நினைக்கும்படி இயங்குநிலையற்ற உறைநிலைப்பொருளென அனைத்தையும் துறந்து , தமிழோடு உருகிப்போகும் ஏழை ..
தமிழைக்கண்டால் மகிழ்ந்து, தமிழுக்காகவே சண்டையிட்டு, தமிழில் ஒன்றைத்தெரிந்துகொண்டால் களிப்புற்று, தமிழே!தமிழே! என்று வாழும் ஏழை..
தமிழில்லா விடங்களில் இவள்யாக்கையில் ஓருறுப்புக்கூட ஒருமணித்துளியும் நிற்கமுடியாமல் தலைதெறிக்க வோடிவந்து ,தமிழிடமே அடைந்துகொள்ளும் ஏழை ..
இவளிடம் தமிழிருக்கிறதா என்றாலது இவளுக்குத்தெரியாது..
ஏனோ தமிழின்றி இவளால் மூச்சுவிட முடியாது ..
இந்நிலையில் இவள்வாழ்வது இன்புற்றிருக்கவன்று தமிழிற்காகவே ..
எதுவுமற்ற ஏழையிவள் ,தமிழெனும் செல்வத்தில் உருண்டுபிரண்டுதமிழ்ப்பிச்சைகேட்டு நிற்கும் யாருமற்ற தனியுலகில் இவளோ ரேழையே!
நிலா.
“வாழ்கதமிழ்”




