
குறள் – ௭௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு).
“உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை.”
உறுப்பு = நாற்படைப்பிரிவுகள்.
ஊறு = இடையூறு.
வெறுக்கை = செல்வம்.
தலை = முதன்மையானது.
“நால்வகைப்படைப்பிரிவுகளாகிய உறுப்புகள் அமைந்து இடையூறுகளுக்கு அஞ்சாது வெல்லும் படையானது வேந்தனது செல்வங்களுளெல்லாம் முதன்மையானது” என்பதாம்.
‘அமைந்து’ என்னும் வினையெச்சம் ‘ஊறு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘வெறுக்கையுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘வெறுக்கை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உறுப்பமைந்து* ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௬௰௨ (அச்சில் உள்ளவாறு).
“உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது.”
உலைவு = தோல்வி, அழிவு.
ஊறு = இடையூறு.
வன்கண் = மிகுவன்மை.
தொலைவிடத்து = படைவலிமை குறைந்தவிடத்து.
தொல்படை = வழிவழியாய் தொடரும் பழம்படை (பழைய படை).
அல்லால் = அல்லாது.
அரிது = இயலாது.
“உலைவிடத்து தொலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொல்படைக்கல்லால் அரிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அழிவுற்று படைவலிமை குறைந்தவிடத்தும் இடையூறுகளுக்கு அஞ்சாத மிகுவன்மை வழிவழியாக தொடரும் பழைய படைக்கல்லால் இராது” என்பதாம்.
‘உலைவிடத்து’, ‘தொலைவிடத்து’ என்பனவற்றின்கண் வந்த ‘இடத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘உலைவு’, ‘தொலைவு’ என்னும் பெயர்களுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘வன்கண்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘தொல்படைக்கல்லால்’ என்பதன்கண் வந்த ‘அல்லால்’ என்னும் இணைப்பிடைச்சொல் ‘தொல்படை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உலைவிடத்து* ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்து
தொல்படைக் கல்லால் அரிது.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௬௰௩ (அச்சில் உள்ளவாறு).
“பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.”
பொருள் = செல்வம்.
பொய்யா விளக்கம் = அணையா விளக்கு.
எண்ணிய = நினைத்த, கருதிய.
இருள் = துன்பம்.
தேயம் = நாடு.
அறுக்கும் = போக்கும்.
“பொருளென்னும் பொய்யா விளக்கம் எண்ணிய தேயத்துச்சென்று இருளறுக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செல்வமென்னும் அணையா விளக்கு செல்வமுடையார் கருதும் நாட்டிற்குச்சென்று அவர்தம் துன்பங்களைப்போக்கும்” என்பதாம்.
‘விளக்கம்’ (விளக்கு) என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘அறுக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.”
குறள் – ௭௱௬௰௪ (அச்சில் உள்ளவாறு).
“அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.”
இன்று = இல்லாது.
அறைபோகாது = தோலாது (தோற்காது).
வழிவந்த = தொன்றுதொட்டு வந்த.
வன்கண் = வலிமையான வீரம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“அழிவின்றி தோற்காததாகி தொன்றுதொட்டு வந்த வலிமையான வீரத்தை உடையதே படை” என்பதாம்.
அழிவின்றி, அறைபோகாதாகி ஆகிய இருவேறு வினைநிலைகள் தம்முள் புணராது தனித்துநின்று பொருளுணர்த்தும். பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்த வேண்டா.
செம்மைவடிவம் —
“அழிவின்று* அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௭௱௬௰௫ (அச்சில் உள்ளவாறு).
“ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.”
ஒலித்தக்கால் = கடல்போல் ஒலித்தல்.
என்னாம் = என்னவாகும்.
உவரி = கடல்.
உயிர்ப்ப = உயிர்தெழ.
கெடும் = அழியும்.
ஆல் = அசைச்சொல்.
“எலிப்பகை உவரியொலித்தக்கால் என்னாம் நாகம் உயிர்ப்பக்கெடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எலிகள் திரண்டு கடல்போல் ஒலித்தாலும் என்னவாகும். நாகம் உயிர்தெழ அப்பகை அழியும்” என்பதாம்.
‘ஒலித்தக்கால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘ஒலித்த’ என்னும் வினையெச்சத்துடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘என்னாம்’ என்பதன்கண் வந்த ‘ஆம்’ (ஆகும்) என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நாகமுயிர்ப்ப’ என்பதன்கண் ‘நாகம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மை வடிவம் —
“ஒலித்தக்கால் என்னாம் உவரி யெலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.”
குறள் – ௭௱௬௰௬ (அச்சில் உள்ளவாறு).
“மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற
மெனநான்கே யேமம் படைக்கு.”
மறம் = வீரம்.
மானம் = தன்மானம்.
மாண்ட வழிச்செலவு = பண்டைவீரர் ஒழுகிய நன்னெறி.
தேற்றம்= தெளிவு, உறுதி.
ஏமம் = அரண்.
“மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றமென நான்கே படைக்கு ஏமம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வீரம், தன்மானம், பண்டைவீரர் ஒழுகிய நன்னெறி, உறுதியென நான்கே படைக்கு அரண்” என்பதாம்.
மறம், மானம் என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் முற்றுப்பொருள்தரும். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘நான்கே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்ற
மெனநான்கே ஏமம் படைக்கு.”
குறள் – ௭௱௬௰௭ (அச்சில் உள்ளவாறு).
“தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து.”
தார் = முன்னணி.
தாங்கி = ஏற்று.
தானை = படை.
தலைவந்த = தன்மேல் வந்த.
தாங்குந்தன்மை = விலக்கும் வகை, வெல்லும் வகை.
“தலைவந்த
போர்தாங்குந்தன்மையறிந்து தார்தாங்கிச்செல்வது தானை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தன்மேல் வந்த போரை வெல்லும் வகையை அறிந்து முன்னணியில் செல்வது படை“ என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௭௱௬௰௮ (அச்சில் உள்ளவாறு).
“அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை
படைத்தகையாற் பாடு பெறும்.”
அடற்றகையும் → அடல் நகையும் = வெல்லுந்திறமும்.
ஆற்றலும் = வலிமையும்.
தானை = படை
படைத்தகைமை = போர்த்திறம்.
பாடு = பெருமை.
“அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் படைத்தகையால் தானை பாடு பெறும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வெல்லுந்திறமும் வலிமையும் இல்லையெனினும் போர்த்திறத்தால் படை பெருமைபெறும்” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் பிரித்து பொருளறிவதாயின் புணரா. ‘அடற்றகையுமாற்றலும்’ என்னும் புணர்மொழியில் புணர்ச்சியைப்பிரித்தே ‘ஆற்றலும்’ என்பதை அறியமுடியும்.
எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியில் வந்த ‘ஆற்றலும்’ என்னும் எண்ணும்மை புணராது தனித்துநிற்கும்.
‘இல்லெனினும்’ என்பதன்கண் வந்த ‘எனினும்’ என்ற காரணயிடைச்சொல் ‘இல்லை’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘படைத்தகையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘தகை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.”
குறள் – ௭௱௬௰௯ (அச்சில் உள்ளவாறு).
“சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை.”
சிறுமை = நெறிதவறல்.
செல்லாத்துனி = நீங்கா அச்சம்.
“சிறுமையும் செல்லாத்துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நெறிதவறலும் நீங்கா அச்சமும் வறுமையும் இல்லாயின் படை வெல்லும்“ என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் பொருள்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘வறுமையும்’ என்பது புணராது.
செம்மைவடிவம் —
“சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.”
குறள் – ௭௱௭௰ (அச்சில் உள்ளவாறு).
“நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
தலைமக்க ளில்வழி யில்.”
நிலைமக்கள் = உறுதியுள்ள மறவர்.
சால = மிகுதி.
தானை = படை.
தலைமக்கள் = தக்க படைத்தலைவர்.
இல்வழி = இல்லாவிடத்து.
இல் = இல்லை.
“நிலைமக்கள் சாலஉடைத்தெனினும்
தலைமக்கள் இல்வழி தானை இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உறுதியுள்ள மறவரை மிகுதியாக உடையதெனினும் தக்க படைத்தலைவர் இல்லாவிடத்து படை இல்லை” என்பதாம்.
‘உடைத்தெனினும்’ என்பதன்கண் வந்த ‘எனினும்’ என்ற காரணயிடைச்சொல் ‘உடைத்து’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை நீக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தலைமக்கள்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘இல்வழியில்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. இதன்கண் நின்ற ‘இல் (இல்லை)’ என்னும் வினைமுற்று ஏழாம்வேற்றுமைவுருபாகவும் மயங்கும்.
செம்மைவடிவம் —
“நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.”
எழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




