எழுதத்தொடங்குமுன் ‘உ’ எழுதுவது எதற்காக:ஆய்வறிக்கை.
'உ' என்ற எழுத்தே பிற்காலத்தில் பிள்ளையார் சுழியானது.

‘உ’ என்ற எழுத்தே பிற்காலத்தில் பிள்ளையார் சுழியானது.
நம் தமிழ்கூறும் நல்வையத்தின் ஒருமரபாக எழுத்துப்பணியைத்தொடங்கும்போது பிள்ளையார்சுழி இட்டபின்பே எழுதுவது வழக்கமாகும். ‘உ’ என்ற எழுத்தே பிள்ளையார்சுழி எனக்கொள்ளப்படுகிறது என்று கல்வெட்டாய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் கூறுகிறார்.
அன்றையகாலங்களில் பனையோலையில் எழுத்தாணிகொண்டு எழுதுவார்கள். அப்படி எழுதுவதற்குமுன் அப்பனையோலை சரியான நிலையிலுள்ளதா என்பதையறிய ‘உ’ என்று எழுதிப்பார்த்துவிட்டு தொடங்கியிருப்பார்களென்று முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை அவர்கள் கூறுகிறார்.
அண்மையில் குறியீடுகள்பற்றி ஆய்வு மேற்கொண்ட அதம்பை இராமமூர்த்தி அவர்கள் செட்டி நாட்டைச்சார்ந்த சில பழையதாளாவணங்களையும், கல்வெட்டுப்படிகளையுங்காட்டி அவற்றில் பிள்ளையார்சுழிக்குமாறாக ‘உலகெலாம் வாழ்க’ என்ற சொல் இருப்பதைச்சுட்டிக்காட்டியதோடு, பெரியபுராணமரபுப்படி ‘உலகெலாம்’ என்ற தொடக்கச்சொல்லடிப்படையில், ஆவணங்களெழுதும்மரபு அங்கு இருப்பதையும், அதன் சுருக்கம்தான் ‘உ’ என்ற எழுத்தெனவும் கூறினார். உடனே பெரியபுராணப்பாடல்களை ஆராய்ந்தபோது இப்பேருண்மை புலப்பட்டது.
பெரியபுராணத்தை எழுதத்தொடங்க சிவபெருமான் அடியெடுத்துகொடுத்த முதல்எழுத்து ‘உலகெலாம்’ அதனால், சேக்கிழார் பெருமான் “உலகெலாமுணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று வாழ்த்துப்பாடலை பாடியிருப்பார்.
“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.”
(சோதி என்றால் ஒளி)
மேலும் கம்பராமாயணம் எழுதத்தொடங்கும்போதும், கம்பர் ‘உலகெலாம் யாவையும்’ என்று பாடியுள்ளார்.
“உலகம் யாவையுந் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா அலகி லாவிளை யாட்டுடையா ரவர் தலைவ ரன்னவர்க் கேச ணாங்களே.”
அத்துடன் கழகவிலக்கியத்தின் முதற்றொகுதியான திருமுருக்காற்றுப்படையிலும் உலகம் என்று தொடங்கியே பாடலை இயற்றியுள்ளனர்.
“உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி.”
ஆகவே, இந்த ‘உலகெலாம் வாழ்க’ எனுஞ்சொல் தமிழ்மொழிக்கு மிகவும் முதன்மையானது. பொதுவாக மங்கலமொழிகொண்டு தொடங்கவேண்டுமென்ற மரபினைத்தழுவி “உலகம்” என்ற சொல்லோடு தொடங்கியுள்ளனர் நம் முன்னோர். அதுவே பிற்காலத்தில் ‘உ’ என்று சுருங்கியதென்று அறியமுடிகிறது.
நன்றி. வாழ்க தமிழ்.




