இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௩௯. இறைமாட்சி.

குறள் – ௩௱௮௧ (அச்சில் உள்ளவாறு).

“படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு.”

குடி = நாடும் மக்களும்.
கூழ் = உணவு.
அரண் = காப்பு, காவல்.
ஏறு = தலைசிறந்தவன்.

வெவ்வேறு பொருள்குறித்துவரும் எண்ணுப்பெயர்கள் தம்முள் புணரா. பொருள்பொருந்தும் சொற்களே புணரும்.

‘அரசருள்’ என்பதில் வந்த ‘உள்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அரசன்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஆறும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

‘உடையான்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

“குடி, கூழ், படை, அரண், அமைச்சு, நட்பு என்னும் ஆறும் உடையவன் அரசர்களுள் தலைசிறந்தவன்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“படைகுடி கூழ்அமைச்சு நட்பு*அர ணாறும்
உடையான் அரசருள் ஏறு.”

*குற்றியலுகரமாகிய புகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௮௨ (அச்சில் உள்ளவாறு).

“அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு.”

எஞ்சாமை = குறையாமை.
இயல்பு = குணம்.

வெவ்வேறு பொருள்குறித்துவரும் எண்ணுப்பெயர்கள் தம்முள் புணரா. பொருள்பொருந்தும் சொற்களே புணரும்.

‘இந்நான்கும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அஞ்சாமை ஈகை அறிவு*ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.”

*முற்றுகரமாகிய வுகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௮௩ (அச்சில் உள்ளவாறு).

“தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று
நீங்கா நிலனாள் பவற்கு.”

தூங்காமை = காலந்தாழ்த்தாமை.
நிலனாள்பவன் → நிலத்தை ஆள்பவன் = அரசன்.

‘இம்மூன்றும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நிலனாள் பவற்கு நீங்கா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.”

குறள் – ௩௱௮௪(அச்சில் உள்ளவாறு).

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.”

இழுக்காது = வழுவாது.
அல்லவை = முறையற்றவை.
மறன் → மறம் = வீரம்.
உடையது = உடையவன்.
அரசு = அரசன்.

‘இழுக்காது’ என்னும் வினையெச்சம் ‘அல்லவை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘அரசன்’ என்னும் பொருள்படும் ‘அரசு’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ப்பயனிலை. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

“அறத்தில் வழுவாது முறையற்றவற்றை நீக்கி மறத்தில் வழுவாது மானத்தை உடையவன் அரசன்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அறனிழுக்காது* அல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடையது* அரசு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௮௫ (அச்சில் உள்ளவாறு).

“இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.”

இயற்றல் = விதிகளை வகுத்தல்.
ஈட்டல் = வருவாய் ஈட்டல்.
வகுத்தல் = பகிர்தல்.
வல்லது = இருந்து (இயலுவான்).
அரசு = அரசு (அரசன்).

வெவ்வேறு பொருள்களில் வரும் வினையெண்ணும்மைகள் புணரா. பொருள்பொருந்தும் சொற்களே புணரும்.

“விதிகளை வகுத்தலும், வருவாயீட்டலும், ஈட்டிய செல்வத்தை பாதுகாத்தலும், பாதுகாத்த செல்வத்தைப்பகிர்ந்தளிக்கவும் வல்லவன் அரசன்”
என்பதாம்.

‘வலிமையை உடையது’ எனவிரியும் ‘வல்லது’ என்பதன் பெயர்ப்பயனிலையாம் அரசு புணராது.

செம்மைவடிவம் —
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது* அரசு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௮௬ (அச்சில் உள்ளவாறு).

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம்.”

அல்லனேல் = அல்லனாயின்.
மீக்கூறும் = சிறப்பித்துச்சொல்லும்.
மன்னனிலம் = மன்னனது நிலம் (ஆகுபெயர்) → குடிமக்கள்.

“எளிதில் காண்பதற்கு உரியவனாயும் கடுஞ்சொற்களை சொல்லாதவனாயும் மன்னன் இருந்தால் குடிமக்களால் சிறப்பித்துக்கூறப்படுவான்“ என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௩௱௮௭. (அச்சில் உள்ளவாறு).
“இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
தான்கண்ட னைத்திவ் வுலகு.”

ஈத்து = கொடுத்து.
வல்லார்க்கு = வல்லவர்க்கு.
தன்சொலால் = சொல்லியவாறு.
கண்ட = நினைத்தவாறு.
அனைத்து = அளவிற்கு.

“இனியசொற்களுடன் கொடைகொடுக்க வல்லவர்க்கு அவர் சொல்லியவாறே நினைத்தவாறே இவ்வுலகு அமையும்” என்பதாம்.

’இன்சொலால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்சொல்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘வல்லார்க்கு’ என்னும் குவ்வுருபேற்ற சொல் ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது.

’தன்சொலால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘சொல்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘இவ்வுலகு’ என்னும் சுட்டுப்பெயர்ச்சொல் வருமொழியாகி புணராது நிற்கும்.

செம்மைவடிவம் —
“இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்
தான்கண்ட னைத்து*இவ் வுலகு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௮௮ (அச்சில் உள்ளவாறு).

“முறைசெய்து காப்பாற்று மன்னவன்
மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.”

முறை = நெறி.
இறை = இறைவன்.

‘காப்பாற்றும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம்.‌ பெயரெச்சம் பெயரை முடிக்குஞ்சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.

‘மக்கட்கு’ என்னும் குவ்வுருபேற்ற சொல் ‘இறை’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன் மட்டுமே புணரும்.

“நெறிநின்று காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு இறைவன் எனப்படுவான்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கு*இறையென்று வைக்கப் படும்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௮௯ (அச்சில் உள்ளவாறு).

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.”

கைப்ப = வெறுக்குமாறு (விரும்பாமை).
கவிகைக்கீழ் = குடையின் கீழ், ஆட்சியின் கீழ்.

“செவிகைப்ப சொற்பொறுக்கும் பண்புடைவேந்தன்கவிகைக்கீழ் உலகு தங்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘கைப்ப’ என்னும் வினையெச்சம் ‘சொல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கவிகைக்கீழ்’ வந்த ‘கீழ்’ என்னும் ஏழன்வேற்றுமைவுருபு ‘கவிகை’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தங்கும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சம் பெயரை முடிக்குஞ்சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.

“செவி வெறுக்குஞ்சொற்களையும் பொறுக்கும் பண்புடைய வேந்தனது குடையின்கீழ் உலகு தங்கும்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“செவிகைப்ப சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கும் உலகு.”

குறள் – ௩௱௯௦ (அச்சில் உள்ளவாறு).

“கொடையளி செங்கோல் குடியோம்ப நான்கு
முடையானாம் வேந்தர்க் கொளி.”

அளி = தலையளி (பேரருள்).
செங்கோல் = முறைதவறாமை, நேரிய ஆட்சி.
குடி = மக்கள்.
ஓம்பல் = பேணல்.
ஆம் = ஆகும்.
ஒளி = விளக்கு (வழிகாட்டி)

“கொடை , அளி, செங்கோல், குடியோம்பல் நான்கும் உடையான் வேந்தர்க்கு ஒளி ஆம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘குடியோம்பல்’ என்பது முற்றுப்பொருள்தரும் பெயர்ச்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

எண்ணும்மைகள் எண்ணுப்பொருளில்மட்டும் புணரும்; பிறவற்றுடன் புணராது.

‘நான்கும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

‘உடையானாம்’ என்பதில் வந்த ‘ஆம்’ என்பது ‘ஆகும்’ என்னும் வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘ஒளி’ என்பது வினையைச்சாராது தன்னளவில் பொருள்தரும் பெயர்ச்சொல். நான்காம்வேற்றுமைவுருபு வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் மட்டுமே புணரும்.

“கொடையளித்தல், அருள்நோக்கு, முறைதவறாமை, மக்களைப்பேணுதல் ஆகிய நான்கும் உடையவன் வேந்தர்க்கு விளக்கு (வழிகாட்டி) ஆவான்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையான்ஆம் வேந்தர்க்கு* ஒளி.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button