தமிழ்படைப்புகள்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

செய்நன்றியறிதல்.

பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௰௧.
செய்நன்றியறிதல்.

குறள் – ௱௧. (அச்சில் உள்ளவாறு.)
“செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.”

எண்ணும்மைகள் தம்முள் தாம் புணரும்; பிறவற்றுடன் புணராது. புணரின் எண்ணுப்பொருள் நீங்கும். ‘வையகமும் வானகமும்’ எனவரும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.”

குறள் – ௰௨. (அச்சில் உள்ளவாறு.)
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது.“

வேற்றுமையுருபுகள் பொருள்திரியா இயல்புப்புணர்ச்சியை ஏற்கும். எடுத்துக்காட்டாக உடல்மேல் உயிரொன்றுவது. வேற்றுமையுருபுகள் பொருள்திரிபுணர்ச்சியாம் விகாரப்புணர்ச்சியை அடைவது மயங்கும் புணர்ச்சி. புணர்ச்சி பொருளுணர்ச்சிக்கு உரியவையாதலால் செய்யுளானாலும் மயங்கும் புணர்ச்சிகளைத்தவிர்த்தல் நலம். ‘காலத்தினால்’ என்பதில் ‘ஆல்’ எனும் மூன்றாம்வேற்றுமைவுருபு வந்துள்ளது.

‘சிறிதெனினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.”

குறள் – ௱௩. (அச்சில் உள்ளவாறு.)
“ பயன்றூக்கார் செய்த வுதவி
நயன்றூக்கினன்மை கடலிற் பெரிது.”

‘செய்த உதவி’ என்பது பெயரெச்சம். பெயரெச்சம் புணராது.

வேற்றுமையுருபுகள் பொருள்திரியா இயல்புப்புணர்ச்சியை ஏற்கும். எடுத்துக்காட்டாக உடல்மேல் உயிரொன்றுவது. வேற்றுமையுருபுகள் பொருள்திரிபுணர்ச்சியாம் விகாரப்புணர்ச்சியை அடைவது மயங்கும் புணர்ச்சி. புணர்ச்சி பொருளுணர்ச்சிக்கு உரியவையாதலால் செய்யுளானாலும் மயங்கும் புணர்ச்சிகளைத்தவிர்த்தல் நலம். ‘கடலில்’ என்பதில் ‘இல்’ என்பது ஒப்புப்பொருளில் வந்த ஐந்தாம்வேற்றுமைவுருபு. ஒப்புப்பொருளில் வரும் ஐந்தாம்வேற்றுமை வினையொடு புணரும்; ‘பெரிது’ எனும் பெயருடன் புணராது.

‘தூக்கின்’ என்பது ‘இன்’ விகுதிபெற்ற வினையெச்சம். ‘நன்மை’ என்பது பெயர்ச்சொல். வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“ பயன்றூக்கார் செய்த உதவிநயன்றூக்கின்
நன்மை கடலில் பெரிது.”

குறள் – ௱௪. (அச்சில் உள்ளவாறு.)
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்.”

‘துணையாக’ என்பதன் கடையெழுத்து குறைந்த சொல்லே ‘துணையா’ என்பது. இவ்விடத்து விட்டிசை நேர்ந்து பொருளுணர்ச்சியைத்தரும். விட்டிசைக்கும் இடங்களில் புணர்ச்சி நிகழாது.

‘ஆக’ எனும் வினையெச்சத்தின் கடைக்குறையைக்கருதாது புணர்த்தினால் ‘ஆக்கொள்வர்’ என்றாகி பொருள் திசைமாறும்.

‘பயன்றெரிவார்’ என்பது ‘பயனைத்தெரிவார்’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் தொகையாற்றல் இடைவெளிநீக்கத்தால் பெறப்படும்; எழுத்துத்திரிபினாலன்று.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா
கொள்வர் பயன்தெரி வார்.”

குறள் – ௱௫. (அச்சில் உள்ளவாறு.)
“உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.”

“செய்யப்பட்ட உதவி பெறப்பட்ட உதவியின் அளவன்று.‌ உதவியை பெற்றவரின் சால்பின் அளவினது“ எனவிரியும். ‘பெறப்பட்ட’ என்பது சொல்லெச்சம்.

‘அன்று’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘உதவியுதவி’ என்பது அடுக்குத்தொடரன்று. இவ்விருசொற்கும் இடையில் விட்டிசை நிகழ்ந்து ’உதவி உதவி வரைத்தன்று’ என்றவாறு சென்று நின்று கருத்தின் முதற்பகுதிமுடிவினைக்காட்டும். வேறோரிடத்து சென்று நின்று பொருள்தரவேண்டியவற்றை அதற்கேதுவாக புணர்த்தாமல் நிறுத்தவேண்டும். சொற்கள் புணர்ந்தால் பிரியாது; புணர்ந்தநிலையிலேயே பொருள்தரும்.

செம்மைவடிவம் —
“உதவி வரைத்தன்று* உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.”

* குற்றியலுகரமான றுகரம் மெய்யின் அரைமாத்திரைபெறும்; அலகுபெறாது.

குறள் – ௱௬. (அச்சில் உள்ளவாறு.)
“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.”
கேண்மை = நட்பு.
துப்பாயார் = துணைபுரிந்தவர்.

“மாசற்றாரது கேண்மையை மறவற்க. துன்பத்துள் துப்பாயாரது நட்பினைத்துறவற்க” எனவிரித்து கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘துன்பத்துள்’ என்பதில் ‘உள்’ என்பது ஏழாம்வேற்றுமையுருபு. ஏழாம்வேற்றுமை வினைவேண்டும்பெயருடன் புணரும். ‘துப்பாயார்’ என்பது வினைவேண்டும்பெயரன்று; வினையாலணையும்பெயர். வேற்றுமைவருபுகளை விகாரப்புணர்ச்சிக்கு உட்படுத்துவது பொருள்மயக்கந்தரும் மயங்குபுணர்ச்சி ஆகும்.

செம்மைவடிவம் —
“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.”

குறள் – ௱௭. (அச்சில் உள்ளவாறு.)
“எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.”
தங்கண் = தமது.
விழுமம் = துன்பம்.

“தங்கண் விழுமத்தை துடைத்தவரது நட்பினை எழுமையெழுபிறப்பும் உள்ளுவர்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘எழுபிறப்பும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.”

குறள் – ௱௮. (அச்சில் உள்ளவாறு.)
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.”

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.

குறள் – ௱௯. (அச்சில் உள்ளவாறு.)
“கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.”

“கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த நன்று ஒன்று உள்ளக்கெடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

‘செயினும்’ என்பது வினையெச்சம். ‘அவர்’ என்பது சுட்டுப்பெயர். வினையெச்சம் சுட்டுப்பெயருடன் புணராது.

‘நன்றுள்ள’ என்பது தழுவாச்சொற்களிடையே செய்யப்பட்ட மயங்குபுணர்ச்சி. ‘நன்மை’ எனும் பொருள்தரும் ‘நன்று’ எனும் பெயர்ச்சொல் ‘ஒன்று’ எனுஞ்சொற்குரியது. ‘உள்ள’ எனுஞ்சொல் ‘கெடும்’ எனும் வினைமுற்றுக்கு உரியது. தழுவுஞ்சொற்களே புணரும்.

செம்மைவடிவம் —
“கொன்றன்ன யின்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று* உள்ளக் கெடும்.”

* நன்று எனும் குற்றியலுகரச்சொல்லின் றுகரம் மெய்யின் அரைமாத்திரையைப்பெறும்; அலகுபெறாது.

குறள் – ௱௰. (அச்சில் உள்ளவாறு.)
“எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”

‘கொன்றார்க்கும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘உண்டாம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

“எந்நன்றி கொன்றவர்க்கும் உய்வு உண்டாம். செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.

செம்மைவடிவம் —
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”

நன்றி.
முத்தையா சுப்பிரமணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button