இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — துறவறவியல். தலைப்பு - ௨௬. அருளுடைமை.

குறள் – ௨௱௪௧. (அச்சில் உள்ளவாறு)

“அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.“

அருட்செல்வம் = அருளாகிய செல்வம்.
பொருட்செல்வம் = பொருளாகிய செல்வம்.
பூரியார் = இழிந்தோர்.

‘அருட்செல்வம்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல் ஆகும். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.”

குறள் – ௨௱௪௨. (அச்சில் உள்ளவாறு.)

“நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றான்
றேரினு மஃதே துணை.”

நல்லாறு = நன்னெறி.
தேறினும் = ஆராய்ந்தும்.

‘நாடி’ என்பது வினையெச்சம். இவ்வினையெச்சம் ‘அருள்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘தேறினும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைபெற்ற வினையெச்சம். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“நல்லாற்றா னாடி அருளாள்க பல்லாற்றான்
தேறினும் அஃதே துணை.”

குறள் – ௨௱௪௩. (அச்சில் உள்ளவாறு.)

“அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
யின்னா வுலகம் புகல்.”

இன்னாவுலகம் = துன்பவுலகம்.

‘இல்லை’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இருள்சேர்ந்த இன்னாவுலகம்புகல் அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘இருள்சேர்ந்த’ என்னும் பெயரெச்சம் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.

செம்மைவடிவம் —
“அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா வுலகம் புகல்.”

குறள் – ௨௱௪௪. (அச்சில் உள்ளவாறு.)

“மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.”

தன்னுயிரஞ்சும்வினை = தீவினை.

‘மன்னுயிரோம்பி அருளாள்வாற்கு தன்னுயிரஞ்சும்வினை இல்லென்ப’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘ஓம்பி’ என்பது வினையெச்சம். இவ்வினையெச்சம் ‘அருள்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘இல்லென்ப’ என்னும் வினைமுற்று விட்டிசைக்க பொருளுணர்ச்சி தோன்றும்; தொடர்ந்தொலித்தால் செய்தியாக கடந்துபோகும்.

செம்மைவடிவம் —
“மன்னுயி ரோம்பி அருளாள்வாற்கு* இல்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

குறள் – ௨௱௪௫. (அச்சில் உள்ளவாறு.)

“அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.”

மல்லல் = வளமான.
கரி = சான்று.

‘அருளாள்வார்க்கு அல்லல் இல்லை. வளிவழங்கு மல்லன்மாஞாலம் கரி’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அருளுடையார்க்கு துன்பமில்லை. காற்று இயங்கும் வளமான பெரியவுலகம் இதற்கு சான்று’‌ என்பதாம்.
‘அல்லல்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல் ஆகும். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. மேலும் ‘அல்லல்’ என்னும் பெயர்ச்சொல் ‘இல்லை’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் சென்று பொருந்தும். வேறோரிடம் சென்று பொருந்தும் சொற்கள் புணராது. தழுவுஞ்சொற்களே புணரும்.
‘கரி’ என்பது ‘மல்லன்மாஞாலம்’ என்பதன் பெயர்ப்பயனிலை. எனவே புணராது.

செம்மைவடிவம் —
“அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலம் கரி.”

குறள் – ௨௱௪௬. (அச்சில் உள்ளவாறு.)

“பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார்.”

பொருள் = உறுதிப்பொருள்.
பொச்சாந்தார் = மறந்தார்.

‘அருணீங்கி அல்லவைசெய்தொழுகுவார் பொருணீங்கி பொச்சாந்தாரென்பர்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அருளைக்கைவிட்டு தீயன செய்தொழுகுவார் உறுதிப்பொருள்களை மறந்தாராவர்’ என்பதாம்.
‘நீங்கி’ என்பது வினையெச்சம். பொச்சசாந்தார் என்பது வினையாலணையும்பெயர். வினையெச்சம் வினையாலணையும்பெயருடன் புணராது.
‘என்பர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நீங்கி’ என்பது வினையெச்சம். ‘அல்லவை’ என்பது திரிபில்பெயர்ச்சொல். வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“பொருணீங்கி பொச்சாந்தா ரென்பர் அருணீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.”

குறள் – ௨௱௪௭. (அச்சில் உள்ளவாறு.)

“அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு.”

அவ்வுலகம் = விண்ணுலகம்.
இவ்வுலகம் = மண்ணுலகு.
ஆங்கு = உரையசை.
இல்லாகியாங்கு = இல்லையாயினாற்போல்.

‘பொருளில்லார்க்கு மண்ணுலகு இல்லாததுபோல அருளில்லார்க்கு விண்ணுலகு இல்லை’ என்பதாம்.

ஐந்தாஞ்சீர் தொடங்குமிடத்தில் விட்டிசைக்க பொருளுணர்ச்சி தோன்றும். விட்டிசைக்காவிடில் கருத்துணர்ச்சி உண்டாகாது செய்தியாக கடந்து போகும்.

சுட்டுப்பெயர்ச்சொல்லான ‘இவ்வுலகம்’ புணராது தனித்து நிற்கும்.

செம்மைவடிவம் —
“அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு*
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

குறள் – ௨௱௪௮. (அச்சில் உள்ளவாறு.)

“பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது.”

பூப்பர் = பொலிவர்.
அற்றார் = அழிந்தார்.
மற்றாதல் = மீளப்பொலிதல்.
அரிது = இயலாது.

‘ஒருகால்’ என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிகிறது. கருத்து முடியுமிடங்கள் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘அருளற்றார்’ என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாத லரிது.”

குறள் – ௨௱௪௯. (அச்சில் உள்ளவாறு.)

“தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் தேறி
னருளாதான் செய்யு மறம்.”

தெருளாதான் = தெளிவற்றான்.
கண்டற்று = கண்டதுபோலும்.
ஆல் = அசைச்சொல்.

‘கண்டற்றால்’ என்பதில் ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்தது. அது வருமொழியுடன் மீண்டும் புணராது.
‘தேறின்’ என்பது வினையெச்சம். இவ்வினையெச்சம் ‘அருளாதான்’ என்னும் எழுவாயுடன் புணராது.
‘அருளாதான் செய்யும் அறம் தேறின் தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அருளற்றவன் செய்யும் அறத்தினை ஆராயின், அஃது தெளிவில்லாதான் மெய்ப்பொருளைக்கண்டதுபோலும்’ என்பதாம்.

செம்மைவடிவம் —
“தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேறின்
அருளாதான் செய்யு மறம்.”

குறள் – ௨௱௫௦. (அச்சில் உள்ளவாறு.)

“வலியார்முன் றன்னை நினைக்கதான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து. ”

செல்லுமிடத்து = துன்புறுத்துமிடத்து.

‘தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து வலியார்முன் தன்னை நினைக்க’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘தன்னிலும் மெலியாரைத்துன்புறுத்துங்கால் அப்போது தன்னை தன்னினும் வலியார் துன்புறுத்தும்நிலையை நினைக்கவேண்டும்’ என்பதாம்.
‘வலியார்முன்’ என்பதில் வந்த ‘முன்’ என்னும் வேற்றுமையுருபு ‘வலியார்’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘மெலியார்மேல்’ என்பதில் வந்த ‘மேல்’ என்னும் வேற்றுமையுருபு ‘மெலியார்’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.“

தொகுத்தெழுதுயவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button