
குறள் – ௩௱௰௧. (அச்சில் உள்ளவாறு).
“சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.“
இன்னா = தகாதன, தீயன.
மாசற்றார் = தூயவர்.
கோள் = துணிவு, கொள்கை.
“பிறர்க்கு இன்னா செய்வதால் சிறந்த செல்வத்தைப்பெறுவதானாலும், பிறர்க்கு இன்னா செய்யாமை தூயவர் கொள்கை” என்பதாம். ‘பிறர்க்கு இன்னா’ என்பது முதலில்நின்றும் பொருள்தரும். ‘செய்வதால்’ என்பது சொல்லெச்சம்.
‘ஈனும்’ என்பது செய்யும் என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல்லாக வரும் பெயர்ச்சொல் இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல்லாகும். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இன்னா’ என்பது வினைசாராது தன்னளவில் பொருள்தரும் பெயர்ச்சொல். நான்காம்வேற்றுமையாம் குவ்வுருபு வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும். ‘பிறர்க்கின்னா’ எனப்புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு*இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.“
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௰௨. (அச்சில் உள்ளவாறு).
“கறுத்தின்னா செய்த வக்கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.”
கறுத்து = சினந்து.
இன்னா = தகாதன, தீயன.
அக்கண்ணும் = அவ்விடத்தும், அப்போதும்.
கோள் = கொள்கை, துணிவு.
‘கறுத்து’ என்னும் வினையெச்சம் ‘இன்னா’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘அக்கண்ணும்’ என்பது சிறப்பும்மைச்சொல். உம்மை தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது.
‘மறுத்து’ என்னும் வினையெச்சம் ‘இன்னா’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
“சினந்து இன்னா செய்த அப்போதும் அவர்க்கு இன்னா செய்வதை மறுத்து இன்னா செய்யாமை மாசற்றாரது கொள்கை” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“கறுத்து*இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து*இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.”
* குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௰௩. (அச்சில் உள்ளவாறு).
“செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.”
செற்றார் = சினந்தார்.
இன்னாத = தகாதன.
உய்யா = கடக்க முடியாத.
விழுமம் = இடும்பை.
‘செய்யாமல்’ என்பது ‘அல்’ என்னும் விகுதிபெற்ற எதிர்மறைவினையெச்சம் குவ்வுருபேற்ற ‘செற்றார்க்கு’ என்னும் பெயர்ச்சொல்லுடன் (எழுவாயுடன்) புணராது . வினையெச்சம் பெயருடன் புணராது.
‘செய்யாமல்’ என்பது ஒரு வினைமுதலைச்சுட்டுகிறது. ‘செற்றார்’ என்பது வேறொரு வினைமுதலைச்சுட்டுகிறது.
வினைமுதல் வேறுபடுவதை அறியவும் புணராது நிற்றல் சிறப்பு.
“முன்னர் ஓர் இன்னாமையை தான் செய்யாதிருக்க தன்மேல் செற்றம் கொண்டவர்க்கு இன்னாதவற்றைச்செய்யுமாயின் அச்செயல் அவனுக்கு கடக்கமுடியாத இடும்பையைத்தரும்” என்பதாம். இது பரிமேலழகனார் விளக்கம்.
‘செற்றார்க்கும்’ என்பது சிறப்பும்மைச்சொல். உம்மைச்சொல் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது.
‘செய்தபின்’ என்பதில் வந்த ‘பின்’ என்னும் இடைச்சொல் ‘செய்த’ என்னும் வினையெச்சத்தை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.”
குறள் – ௩௱௰௪. (அச்சில் உள்ளவாறு).
“இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.”
இன்னா = தகாதன.
ஒறுத்தல் = கடிதல், ஒடுக்குதல்.
நாண = நாணமுற.
நன்னயம் = நன்மை.
விடல் = மறத்தல்.
‘ஒறுத்தல்’ என்பது தொழிற்பெயர். வினையடியாக தோன்றினாலும் பெயர்ச்சொல்லே. ‘செய்தாரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற பெயர்ச்சொல் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘அவர்’ என்பது வேற்றுமைவுருபேற்காத சுட்டுப்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.”
குறள் – ௩௱௰௫. (அச்சில் உள்ளவாறு).
“அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.”
ஆகுவது = பயன்.
நோய் = துன்பம்.
போற்றாக்கடை = கருதாதபோது.
‘அறிவினான்’ என்பதில் வந்த ‘ஆன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘அறிவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பிறிதின்’ என்பதில் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘பிறிது’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தந்நோய்போல்’ என்பதில் வந்த ‘போல்’ என்னும் உவமவுருபு ‘தந்நோய்’ என்பதுடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
“பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக்கடை அறிவினான் ஆகுவதுண்டோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.”
குறள் – ௩௱௰௬. (அச்சில் உள்ளவாறு).
“இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.”
துன்னாமை = மேவாமை, விரும்பாமை.
செயல் = செய்தல்.
‘என’ என்னும் இடைச்சொல் ‘இன்னா’ என்பதைத்தழுவி அதனை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பிறன்கண்’ என்பதில் வந்த ‘கண்’ என்னும் வேற்றுமைவுருபு ‘பிறன்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
“இன்னாவென தான் உணர்ந்தவை பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மை வடிவம் —
“இன்னா வெனதா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.”
குறள் – ௩௱௰௭. (அச்சில் உள்ளவாறு).
“எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
மாணா செய்யாமை தலை.”
எனைத்தானும்= எவ்வளவாயினும்.
எஞ்ஞான்றும் = எப்பொழுதும்.
மனத்தானாம் = மனமறிய.
மாணா = இன்னாதன.
தலை = தலைமையானது.
எனைத்தானும், யார்க்கும் என்பன முற்றும்மைச்சொற்கள். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘மனத்தான் ஆகும்’ என்பது ‘மனத்தானாம்’ எனப்புணர்ந்தது. ‘ஆகும்’ என்னும் வினைமுற்று ‘ஆம்’ என இடைக்குறைந்து நின்றது. வினைமுற்றின் விகுதி ஒருபோதும் நீங்காது. வினைமுற்று ‘மாணா’ என்னும் பெயருடன் புணர்ந்ததாக காட்டும் ‘மணத்தானா மாணா’ என்பது பொருள்மயங்குப்புணர்ச்சி. வினைமுற்று எதனுடனும் புணராது.
“மனத்தானாம் மாணா எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் செய்யாமை தலை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை.”
குறள் – ௩௱௰௮. (அச்சில் உள்ளவாறு).
“தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.”
என் = வினாச்சொல்.
கொல், ஓ = அசைச்சொற்கள்.
‘தன்னுயிர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல், வினைசாராது தன்னளவில் பொருள்தரும் ‘இன்னாமை’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘அறிவான்’ என்பது வினையாலணையும்பெயர். வினையாலணையும்பெயரும் பெயர்ச்சொல்லே. திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘மன்னுயிர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல், வினைசாராது தன்னளவில் பொருள்தரும் ‘இன்னா’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
“தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான்
மன்னுயிர்க்கு இன்னா செயல் என்கொலோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க
செம்மை வடிவம் —
“தன்னுயிர்க்கு* இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு* இன்னா செயல்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௰௯ (அச்சில் உள்ளவாறு).
“பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.”
இன்னா = தகாதன.
முற்பகல் = முற்பொழுது.
பிற்பகல் = பிற்பொழுது.
‘பிறர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல், வினைசாராது தன்னளவில் பொருள்தரும் ‘இன்னா’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘செய்யின்’ என்னும் வினையெச்சம் ‘தமக்கு’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘தமக்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல், வினைசாராது தன்னளவில் பொருள்தரும் ‘இன்னா’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘பிற்பகல்’ என்பது ‘பிற்பகலில்’ எனவிரியும். ‘தாம்’ என்னும் மறுபெயர்ச்சொல் இத்தொகைச்சொல்லுடன் புணராது; புணரின் மறுபெயர்ச்சொல்லாந்தன்மை நீங்கி இடைச்சொல்லாகும். புணர்ச்சிகள் பொருளில் மயங்கா.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“பிறர்க்கு*இன்னா முற்பகற் செய்யின் தமக்கு*இன்னா
பிற்பகல் தாமே வரும்.”
* குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௨௦ (அச்சில் உள்ளவாறு).
“நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.”
நோய் = துன்பம்.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
‘மேலவாம்’ என்பதில் ‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம். நோயின்மை வேண்டுபவர் நோய்செய்யார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பிறர்க்கு துன்பம்செய்தாரையே துன்பங்களெல்லாம் பற்றும். ஆதலால் துன்பமின்மையை விரும்புபவர் பிறர்க்கு துன்பம்செய்யார்” என்பதாம்.
செம்மை வடிவம் —
“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.”
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!




