இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௬௰௪. அமைச்சு.

குறள் – ௬௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு).

“கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு
மருவினையு மாண்ட தமைச்சு.“

கருவி = படையும் படைக்கலனும் பொருளும் துணையும்.
காலம் = பொருத்தமான காலம்.
செய்கை = செய்யும் வகை.
அருவினை ‌= சிறந்த வினை.
மாண்டது = சிறப்புறக்கொண்டது.
அமைச்சு = அமைச்சர்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கருவியும் பொருத்தமான காலமும் செய்யும் வகையும் சிறந்த வினையும் சிறப்புறக்கொண்டவர் அமைச்சர்” என்பதாம்.

‘செய்யுமருவினை’ என்பது ‘செய்யும் அருவினை’ என்னும் பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘எண்ணும்மைகள்’ தம்முள் புணரும் பிறவற்றுடன் புணராது. எனவே ‘அருவினையும்’ என்பது புணராது.

‘மாண்டது’ என்னும் குறிப்புவினைமுற்று ‘அமைச்சு’ என்னும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யும்
அருவினையும் மாண்டது* அமைச்சு.“

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௩௰௨ (அச்சில் உள்ளவாறு).

“வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினேயோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.”

வன்கண் = மனவுறுதி.
குடி = நல்லோர்கூட்டு.
ஆள்வினை = ஊக்கம், முயற்சி.
மாண்டது = சிறப்புறக்கொண்டது.
அமைச்சு = அமைச்சரவை.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மனவுறுதி நல்லோர்கூட்டு காத்தல் கற்றறிதல் முயற்சியொடு கூடிய ஐங்கூறுகளும் ஒருங்கமைந்த சிறப்புடையது அமைச்சு” என்பதாம்.

‘ஆள்வினையோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘ஆள்வினை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘மாண்டது’ என்னும் குறிப்புவினைமுற்று ‘அமைச்சு’ என்னும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினேயோடு*
ஐந்துடன் மாண்டது* அமைச்சு.”

* குற்றியலுகரங்களாகிய டுகரமும் துகரமும் அலகுபெறா.

 

குறள் – ௬௱௩௰௩ (அச்சில் உள்ளவாறு).

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.”

பொருத்தலும் = சேர்த்தலும்.
வல்லது = வல்லமையுடையது.
அமைச்சு = அமைச்சர்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தகாதாரைப்பிரித்தலும் தக்காரைப்பேணிக்கொள்ளுதலும் பிரிந்த தக்காரை மீண்டும் சேர்த்தலும் வல்லவர் அமைச்சர்” என்பதாம்.

‘பிரிந்தார்ப்பொருத்தலும்’ என்பது ‘பிரிந்தாரைப்பொருத்தலும்’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகை. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாது; இயல்பாகும்.

‘வல்லது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது* அமைச்சு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௩௰௪ (அச்சில் உள்ளவாறு).

“தெரிதலும் தேர்ந்து செயலு யொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு.”

தெரிதலும் = ஆராய்ந்து அறிதலும்.
ஒருதலையா = ஐயமின்றி உறுதியாக.
வல்லது = வல்லமையுடையது.
அமைச்சு = அமைச்சர்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“வினையை ஆராய்ந்தறியவும் அவ்வினையை செய்யும் வகையைத்தேர்ந்து செய்யவும் ஐயத்திற்கிடமின்றி உறுதியாக சொல்லவும் வல்லவர் அமைச்சர்” என்பதாம்.

‘வல்லது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

வினையடுக்குகள் வினைமயங்குமாறு தம்முள் புணரா. பிரித்து பொருளுணர்வதாயின் புணர்ச்சி பயனற்றது.

செம்மைவடிவம் —
“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது* அமைச்சு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௬௱௩௰௫ (அச்சில் உள்ளவாறு).

“அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் றேர்ச்சித் துணை.”

அறன் = அறம், செய்யத்தக்கன.
ஆன்று = நிறைந்த.
எஞ்ஞான்றும் = எவ்விடத்தும் எப்போதும்.
திறன் = வினைத்திறன்.
தேர்ச்சித்துணை = அமைச்சன்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“செய்யத்தகுந்ததை அறிந்து நிறைந்த அடங்கிய சொல்லினனாய் எவ்விடத்தும் எப்போதும் வினைத்திறத்தனாய் உள்ளவனே அமைச்சன்” என்பதாம்.

‘எஞ்ஞான்றும்’ என்னுஞ்சொல் ‘திறனறிந்தான்’ என்பதை விளக்குஞ்சொல். எனவே ‘சொல்லான்’ வினைமுற்றினைத்தழுவாது. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எஞ்ஞான்றும்’ என்பது ‌முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘அமைச்சன்’ என்னும் பொருள்தரும் ‘தேர்ச்சித்துணை’ என்பது எழுவாய்; செய்யுளில் பெயர்ப்பயனிலைமாக வருகிறது. திறனறிந்தான் என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அறனறிந் தான்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.”

 

குறள் – ௬௱௩௰௬ (அச்சில் உள்ளவாறு).

“மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.”

மதிநுட்பம் = இயற்கை நுண்ணறிவு.
அதிநுட்பம் = அரிய நுணுக்கம்.

“மதிநுட்பமொடு நூலுடையார்க்கு அதிநுட்பம் முன்னிற்பவை யாவுள” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“இயற்கை நுண்ணறிவு ‌நூலறிவோடு உள்ளவர்க்குமுன் அரிய நுணுக்கமாய் முன்நிற்பவை யாவுள; இல்லை” என்பதாம்.

‘மதிநுட்பம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘ஓடு’ என்னும் வேற்றுமையுருபு ‘நூல்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘உடையார்க்கு’ என்னும் குவ்வுருபேற்ற சொல் ‘அதிநுட்பம்’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்துபொருள்தரும் பெயருடன் மட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“மதிநுட்பம் நூலோடு* உடையார்க்கு* அதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.”

* குற்றியலுகரங்களாகிய டுகரமும் குகரமும் அலகுபெறா.

 

குறள் – ௬௱௩௰௭ (அச்சில் உள்ளவாறு).

“செயற்கை யறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல்.”

செயற்கை = செய்யும்வகை.
கடைத்தும் = இடத்தும்.
உலகத்தியற்கை = உலக நடைமுறை, உலகவழக்கு.
செயல் = செய்க.

“வினையை செய்யும் வகையை அறிந்தயிடத்தும் உலகநடைமுறையை அறிந்து அதனொடு பொருந்த செய்க. உலகவழக்கொடு பொருந்தாததை செய்யற்க” என்பதாம்.

‘கடைத்தும்’ என்பதன்கண் வந்தது தெரிநிலைவும்மை. தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது. புணர்ச்சியைப்பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்த வேண்டா. புணர்மொழி பிரியாது பொருள்தரும்.

செம்மைவடிவம் —
“செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை யறிந்து செயல்.”

 

குறள் – ௬௱௩௰௮ (அச்சில் உள்ளவாறு).

“அறிகொன் றறியா னெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன்.”

அறிகொன்று = அறியவேண்டிய ஒன்று.
உறுதி = நன்மை.
உழை = உடன்.
உழையிருந்தான் = உடனிருந்தான் (அமைச்சன்).
கடன் = கடமை.

“அறிகொன்றறியானெனினும் உழையிருந்தான் உறுதிகூறல் கடன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அறிய வேண்டிய ஒன்றனை அறியானெனினும் (அரசர்) உடனிருந்தான் (அமைச்சர்) நன்மைகளைக்கூறல் கடமை” என்பதாம்.

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘அறியான்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘உறுதியுழையிருந்தான்’ என்னும் புணரச்சி பொருளற்றது. உழையிருந்தான் என்பது வினையாலணையும்பெயர். இப்புணர்ச்சியை விரித்தால் ‘நன்மைகளை உடனிருந்தான்‌’ எனவரும். இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
மேலும் ‘உறுதி’ என்னுஞ்சொல் ‘கூறல்’ என்னும் வினைச்சொல்லைத்தழுவி ‘நன்மைகளைக்கூறல்’ எனப்பொருள்தரும். தழுவுஞ்சொற்களே புணரும்.

செம்மைவடிவம் —
“அறிகொன் றறியா னெனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.”

 

குறள் – ௬௱௩௰௯ (அச்சில் உள்ளவாறு).

“பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ
ரெழுபது கோடி யுறும்.”

பக்கத்துள் = அருகிருப்பது.
பழுது = தீமை.
தெவ்வோர் = பகைவர்.
உறும் = ஒக்கும், ஒப்பாகும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தீமையைக்கருதும் அமைச்சர் அரசர்க்கு அருகிலிருப்பது எழுபதுகோடி பகைவர்க்கு ஒப்பாகும்” என்பதாம்.

‘பழுதெண்ணும் மந்திரி’ என்பதன்கண் வந்த ‘உம்’ விகுதிபெற்ற பெயரெச்சம் ‘மந்திரி’ என்னும் முடிக்குஞ்சொல்லுடன் புணராது. பெயரெச்சத்தொடரில் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘பக்கத்துள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்பது ‘உள்ளது’ என்னும் பொருள்தரும் வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி யுறும்.”

 

குறள் – ௬௱௪௰ (அச்சில் உள்ளவாறு).

“முறைப்படச் சூழ்ந்து முடிவிலலே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்.”

முறைப்பட = ஒழுங்குபட.
சூழ்ந்தும் = ஆய்ந்தும், திட்டமிட்டும்.
முடிவிலலே = முடிக்காமலே.
திறம் = வினைத்திறன்.
இலாஅதவர் → இலாதவர்.

“முறைப்படச்சூழ்ந்தும் திறப்பாடிலாஅதவர் முடிவிலலே செய்வர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒரு வினையை ஒழுங்குபட ஆய்ந்தும் திட்டமிட்டும் செய்யுங்கால் வினைத்திறனற்றார் அவ்வினையை முடிக்காமலே விடுவர்” என்பதாம்.

‘சூழ்ந்தும்’ என்னும் வினையெச்சம் ‘முடிவு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலலே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button