
குறள் – ௫௱௩௧ (அச்சில் உள்ளவாறு).
“பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.”
பொச்சாப்பு = மறதி.
நிச்ச = நீடித்த, நிலைத்த.
நிரப்பு = வறுமை.
ஆங்கு = அதுபோல.
“நிச்ச நிரப்பு அறிவினைக்கொன்றாங்கு பொச்சாப்பு புகழைக்கொல்லும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நீடித்த வறுமை அறிவைக்கொல்வதுபோல மறதி புகழைக்கொல்லும்” என்பதாம்.
‘பொச்சாப்பு’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
மூன்றாஞ்சீரான ‘புகழை’ என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிகிறது. செய்யுளில் புகழை என்பது பெயர்ப்பயனிலையாக நின்று பொருள்முடிவைத்தருகிறது. பொருள் முடிவுறுமிடங்கள் புணரா.
‘நிரப்பு’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்பு கொன் றாங்கு.”
குறள் – ௫௱௩௨ (அச்சில் உள்ளவாறு).
“பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.”
பொச்சாப்பு = மறதி.
நிச்ச = நீடித்த, நிலைத்த.
நிரப்பு = வறுமை.
ஆங்கு = அதுபோல.
“நிச்ச நிரப்பு அறிவினைக்கொன்றாங்கு பொச்சாப்பு புகழைக்கொல்லும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நீடித்த வறுமை அறிவைக்கொல்வதுபோல மறதி புகழைக்கொல்லும்” என்பதாம்.
‘பொச்சாப்பு’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
மூன்றாஞ்சீரான ‘புகழை’ என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிகிறது. செய்யுளில் புகழை என்பது பெயர்ப்பயனிலையாக நின்று பொருள்முடிவைத்தருகிறது. பொருள் முடிவுறுமிடங்கள் புணரா.
‘நிரப்பு’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்பு கொன் றாங்கு.”
குறள் – ௫௱௩௩ (அச்சில் உள்ளவாறு).
“பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு.”
பொச்சாப்பு = மறதி.
புகழ்மை = புகழுடைமை.
எப்பான் = எப்பகுதி.
துணிவு = முடிந்த முடிவு, உறுதி.
“மறதியுள்ளோர்க்கு புகழுடைமை இல்லை. இக்கருத்து உலகத்தின் எப்பகுதியில் வாழும் நூலறிவோர்க்கும் முடிந்த முடிவு” என்பதாம்.
மூன்றாஞ்சீரான புகழ்மை என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிகிறது. செய்யுளில் ‘புகழ்மை’ என்பது பெயர்ப்பயனிலையாக நின்று பொருள்முடிவைத்தருகிறது. பொருள் முடிவுறுமிடங்கள் புணரா.
‘நூலோர்க்கும்’ என்பதன்கண் முற்றும்மை வந்துள்ளது. முற்றும்மை எதனுடனும் புணராது
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுவுலகத்
தெப்பானூ லோர்க்கும் துணிவு.”
குறள் – ௫௱௩௪ (அச்சில் உள்ளவாறு).
“அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.”
அரண் = பாதுகாப்பு.
ஆங்கு = அதுபோல.
பொச்சாப்பு= மறதி.
நன்கு = நன்மை.
“அச்சமுடையார்க்கு அரண் இல்லை. ஆங்கு பொச்சாப்புடையார்க்கு நன்கு இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அச்சமுடையார்க்கு அரணால் கிட்டும் பாதுகாப்பு இல்லை. அதுபோல மறதியுடையார்க்கு நன்மையில்லை” என்பதாம்.
‘அச்சமுடையார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘அரண்’ என்னும் வினைசாராது இயல்புப்பொருள்பொருள்தரும் பெயருடன் புணராது.
நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘இல்லை’ என்னும் குறிப்புவினைமுற்று ‘ஆங்கு’ என்னும் உவமச்சொல்லுடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அச்ச முடையார்க்கு* அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௩௫ (அச்சில் உள்ளவாறு).
“முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.”
முன்னுற = வருமுன்னர்.
காவாது = காவல் செய்யாது.
இழுக்கியான் = தவறியான்.
பின்னூறு = பின்னர்வரும். இரங்கிவிடும் = வருந்தி அழியும்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வருமுன்னர் காக்க தவறியான் தனது பிழையால் பின்னர்வரும் துன்பங்களால் வருந்தியழிவான்” என்பதாம்.
‘காவாது’ என்னும் வினையெச்சம் ‘இழுக்கியான்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது
‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.
செம்மைவடிவம் —
“முன்னுறக் காவாது* இழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௩௬ (அச்சில் உள்ளவாறு).
“இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னதுவொப்ப தில்.”
இழுக்காமை = மறவாமை.
வழுக்காமைவாயின் = ஒழிவின்றி வாய்ப்பின், தப்பாது வாய்க்குமாயின்.
ஒப்பது = ஈடானது.
இல் = இல்லை.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“மறவாமை யாரிடத்தும் என்றும் தப்பாது வாய்க்குமாயின் அதற்கு ஈடானது இல்லை” என்பதாம்.
‘யார்மாட்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘வாயின்’ (வாய்ப்பின்) என்னும் வினையெச்சம் ‘அது’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஒப்பதில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ (இல்லை) என்னும் குறிப்புவினைமுற்று புணராது தனித்துநிற்கும்; புணரின் வேற்றுமைவுருபாக மயங்கும். மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.
செம்மைவடிவம் —
“இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது* இல்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௩௭ (அச்சில் உள்ளவாறு).
“அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.”
அரிய = இயலாதது.
ஆகாத = இயலாத. ஆகாதது என்பதன் கடைக்குறை.
பொச்சாவாக்கருவி = மறவாமையாகிய கருவி.
போற்றி = எண்ணி/ஆய்ந்து.
செயின் = செய்தால்.
“பொச்சாவாக்கருவியால் போற்றிச்செயின் அரியவென்று ஆகாத இல்லை“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மறவாமையாகிய கருவியால் எண்ணி/ஆய்ந்து செய்தால் செய்தற்கு அரியனயென்னும் இயலாத வினைகள் இல்லை” என்பதாம்.
‘என்று’ என்னும் இடைச்சொல் ‘அரிய’ என்னும் வினைமுற்றின் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கருவியால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘கருவி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
ஆகாதவில்லை என்பதனினும் ஆகாதயில்லை என்பது ஒலியொப்புமையும் பொருட்டெளிவும் கொண்டது. “உடன்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” என்பது தொல்காப்பியம்.
செம்மைவடிவம் —
“அரியவென்று* ஆகாத யில்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௩௭ (அச்சில் உள்ளவாறு).
“புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையு மில்.”
புகழ்ந்தவை = புகழத்தக்கவை.
போற்றி = எண்ணி.
இகழ்ந்தார்க்கு = மறந்தார்க்கு.
எழுமையும் = ஏழ்பிறப்பிலும்.
இல் = (நன்மை) இல்லை.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“புகழத்தக்கன எண்ணிச்செய்தல் வேண்டும். அங்ஙனம் செய்யாது மறந்தார்க்கு ஏழ்பிறப்பிலும் நன்மையில்லை” என்பதாம்.
‘வேண்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘செய்யாது’ என்னும் வினையெச்சம் ‘இகழ்ந்தார்க்கு’ என்னும் வினையாலணையும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘இகழ்ந்தார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘எழுமை’ என்னும் வினைசாராது பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘எழுமையும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது*
இகழ்ந்தார்க்கு* எழுமையும் இல்.”
*குற்றியலுகரங்களாகிய துகரமும் குகரமும் அலகுபெறா.
குறள் – ௫௱௩௯ (அச்சில் உள்ளவாறு).
“இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.”
இகழ்ச்சி = மறதி.
உள்ளுக = எண்ணுக.
மைந்து = மயக்கம், பித்து.
போழ்து = போது.
“தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து இகழ்ச்சியில் கெட்டாரையுள்ளுக”
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தமது மகிழ்ச்சியில் தம்மை மறந்து மயங்கும்போது மறதியால் கெட்டாரை எண்ணுக” என்பதாம்.
‘இகழ்ச்சியில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘இகழ்ச்சி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இகழ்ச்சியில் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
குறள் – ௫௱௪௰ (அச்சில் உள்ளவாறு).
“உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா
னுள்ளிய துள்ளப் பெறின்.”
உள்ளியது = எண்ணியது.
எய்தல் = அடைதல்.
மன் = உறுதி.
மற்றும் = பின்னும், தொடர்ந்து.
உள்ள = எண்ண.
பெறின் = பெற்றால், கூடுமாயின்.
“மற்றுந்தான் உள்ளியது உள்ளப்பெறின் உள்ளியது எய்தல் மன் எளிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தொடர்ந்து தான் எண்ணியதை எண்ணினால் எண்ணியதை அடைதல் உறுதியாக எளிது” என்பதாம்.
‘உள்ளியது’ என்னும் வினையெச்சம் ‘எய்தல்’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது. எழுவாயாம் மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உள்ளியது* எய்த லெளிதுமன் மற்றும்தான்
உள்ளிய துள்ளப் பெறின்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




