
குறள் – ௩௱௧. (அச்சில் உள்ளவாறு).
“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.”
செல்லிடம் = சினம் வெல்லுமிடம்.
அல்லிடம் = சினம் வெல்லாத இடம்.
‘சினங்காப்பான்’ என்பதில் ‘காப்பான்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அல்லிடத்து’ அன்னுமிடத்து ஒரு கருத்துமாற்றம் நிகழ்கிறது. கருத்துமாற்றம் நிகழுமிடங்கள் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
“தனது சினம் வெல்லுமிடத்தில் சினங்கொள்ளாது காத்துக்கொள்பவனே சினத்தைக்காப்பவன். தனது சினம் வெல்லாத இடத்தில் சினங்கொள்ளாது தன்னைக்காப்பதால் பயனென்; சினங்கொள்வதால் பயனென்; பயனில்லை” என்பதாம்.
“சினம் செல்லிடத்துக்காப்பான் காப்பான் அல்லிடத்து காக்கினென் காவாக்காலென்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்து
காக்கினென் காவாக்கா லென்.”
குறள் – ௩௱௨. (அச்சில் உள்ளவாறு).
“செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற.”
செல்லாவிடம் = தன்னினும் வலியார்.
செல்லிடம் = தன்னினும் மெலியார்.
இல் = இல்லை.
“செல்லாவிடத்து சினம் தீது. செல்லுமிடத்தும் அதனின் தீய பிற இல்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘சினம்’ இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘தீது’ என்பது ‘சினம்’ என்பதன் பெயர்ப்பயனிலை. பெயர்ப்பயனிலை இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லாகும். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘செல்லாவிடத்தும்’ என்பது எதிமறைவும்மைச்சொல். உம்மைச்சொல் எதனுடனும் புணராது.
‘இல்லை’ என்ற பொருள்தரும் ‘இல்’ என்னும் குறிப்புவினைமுற்று அதன் என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இல்லதனின்’ (இல்லை அதனின்) என்பதில் வரும் ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அதன்’ என்னும் சுட்டுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“செல்லா விடத்து சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.”
குறள் – ௩௱௩. (அச்சில் உள்ளவாறு).
“மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.”
மறத்தல் = மறக்க என்னும் ஏவல்வினையின் பொருளைத்தரும்.
யார்மாட்டும் = வலியார், ஒப்பார், மெலியார் என்னும் மூவர்மாட்டும்.
‘யார்மாட்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
“யார்மாட்டும் வெகுளியை மறத்தல் (மறக்க). தீயபிறத்தல் அதனான் வரும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அதனான்’ என்னும் சுட்டு புணராது தனித்துநின்று வெகுளியை வலியுறுத்தும்.
செம்மைவடிவம் —
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.”
குறள் – ௩௱௪. (அச்சில் உள்ளவாறு).
“நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.”
நகை = சிரிப்பு.
உவகை = மகிழ்ச்சி.
சினத்தின் = சினத்தினும் என்றவாறு உம்மை தொக்கது.
‘நகையுமுவகையும்’ எண்ணும்மை. எண்ணும்மை தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா.
‘கொல்லும்’ என்பது செய்யும் என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சம் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.
‘சினத்தின்’ என்பதில் ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘சினம்’ பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பகையும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல் (இழிந்தவற்றில் தலைமையானது). சிறப்பும்மை எதனுடனும் புணராது.
“முகத்தின்கண் தோன்றும் நகையையும் அகத்தின்கண் தோன்றும் உவகையையும் கொன்று எழுகின்ற சினத்தினும் பிறவாகிய பகை உளவோ; இல்லை“ என்பதாம்.
செம்மைவடிவம் —
“நகையு முவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.”
குறள் – ௩௱௫. (அச்சில் உள்ளவாறு).
“தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்.”
‘தன்னை’ என்னும் இரண்டாம்வேற்றுமை வினயொடு புணருமேயன்றி ‘தான்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது.
‘காக்கின்’ என்னும் வினையெச்சம் ‘சினம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘காவாக்கால்’ என்னும் வினையெச்சம் ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘கொல்லும்’ என்பது செய்யும் என்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சம் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தன்னைதான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.”
குறள் – ௩௱௬. (அச்சில் உள்ளவாறு).
“சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும்.”
கொல்லி = கொல்லும் நெருப்பு.
இனம் = சுற்றம்.
ஏமம் = காவல்.
ஏமப்புணை = காவலாகிய தெப்பம்.
சுடும்= கெடுக்கும்.
‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘சினம்’ என்ற பெயருடன் சேர்ந்து அதனை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கொல்லி’ என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘இனம்’ என்ற பெயருடன் சேர்ந்து அதனை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
“தன்னை ஏற்றாரைக்கொல்லும் சினமென்னும் நெருப்பு தன்னைக்காத்து உதவுகின்ற இனத்தையும் கெடுக்கும்” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.”
குறள் – ௩௱௭. (அச்சில் உள்ளவாறு).
“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.”
பொருள் = உறுதிப்பொருள்.
பிழையாது = தப்பாது.
அற்று = போல.
“நிலத்தை அறைந்தவனது கை கேட்டிலிருந்து தப்பாததுபோல சினத்தை உறுதிப்பொருளெனக்கொண்டவன் கெடுவது உறுதி” என்பதாம்.
“நிலத்தறைந்தான்கை பிழையாதற்று சினத்தை பொருளென்று கொண்டவன்கேடு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘சினத்தை’ என்பதில் வந்த இரண்டாம்வேற்றுமை வினையொடு புணருமேயன்றி ‘பொருள்’ என்னும் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“சினத்தை பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.”
குறள் – ௩௱௮. (அச்சில் உள்ளவாறு).
“இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.”
இணர்= கொத்தாக.
எரி = அழல், தீப்பிழம்பு.
தோய்தல் = தாக்குதல்.
அன்ன = போன்ற.
இன்னா = தகாதன.
புணரின் = இயலுமாயின்.
வெகுளாமை = சினவாமை.
“கொத்தாக தீப்பிழம்புகள் நம்மைத்தாக்குவதால் நேரும் துன்பத்தைப்போன்ற தகாதவைகளை ஒருவர் செய்தாலும் சினவாமை இயலுமாயின் நன்று” என்பதாம்.
“இணரெரிதோய்வன்ன இன்னா செயினும் வெகுளாமை புணரின் நன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அன்ன’ என்னும் உவமச்சொல் ‘இணரெரிதோய்வு’ என்பதைத்தழுவி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.”
குறள் – ௩௱௯. (அச்சில் உள்ளவாறு).
“உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யெனின்.”
உள்ளியது = எண்ணியது, நினைத்தது.
உள்ளான் = எண்ணாதவன், நினையாதவன்.
வெகுளி = சினம்.
“உள்ளத்தால் வெகுளியுள்ளான் எனின் உள்ளியதெல்லாம் உடனெய்தும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒருவன் தனது மனத்தினால் சினத்தை நினையாதவனானால் அவன் அடையவிரும்பியவற்றை உடனடியாக அடைவான்” என்பதாம்.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுச்சொல் எதனுடனும் புணராது.
‘எய்தும்’ என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உள்ளத்தால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘உள்ளம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.”
குறள் – ௩௱௰. (அச்சில் உள்ளவாறு).
“இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.”
இறந்தார்= (சினத்தில்) மிகுந்தார்.
இறந்தார் = உயிரிழந்தார்.
அனையர் = ஒப்பர்.
துறந்தார்= நீங்கியார்.
துறந்தார் = துறவிகள்.
துணை = ஒப்பு.
“சினமிறந்தார் இறந்தார் அனையர். சினத்தை துறந்தார் துறந்தார்க்கு (துறவியர்க்கு) ஒப்பாவார்“ என்றவாறு பொருள் கொள்க. ‘சினம்‘ என்பது முதலில் நின்றும் பொருள்தரும்.
‘இறந்தார்’ என்பது எழுவாயாகும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் –
“இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.”
தொகுத்தெழுதயவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!



