இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௯௰௭. மானம்.

குறள் – ௯௱அ௬௰௧ (அச்சில் உள்ளவாறு).

“இன்றி யமையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.”

சிறப்பின = பெருமைதருவன.
குன்ற = மானங்குன்ற, மானங்கெட.
விடல் = விடுக, நீக்குக.

மானமென்பது தன்னிலைத்தாழாமையும் தாழ்ந்தவிடத்து உயிர்வாழாமையுமாகிய பண்பு.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“இன்றியமையாச்சிறப்புகளாயினும் மானக்கேடு வருமானால் அவற்றை நீக்குக” என்பதாம்.

‘ஆயினும்’ என்பது ‘ஆகாது’ என்னும் பொருளில் வந்த இழிவுச்சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்.”

 

குறள் – ௯௱அ௬௰௨ (அச்சில் உள்ளவாறு).

“சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.”

சீரினும் = செல்வமுடையராயினும். சீரல்ல = சிறுமை.
சீரொடு = புகழொடு.
பேராண்மை = பெருந்தலைமை.

“சீரொடு பேராண்மை வேண்டுபவர் சீரினும் சீரல்ல செய்யாரே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“புகழொடு பெருந்தலைமையை விரும்புவார் செல்வமுடையராயினும் சிறுமைதருவன செய்யார்” என்பதாம்.

‘சீரினும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.”

 

குறள் – ௯௱அ௬௰௩ (அச்சில் உள்ளவாறு).

“பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு.”

பெருக்கம் = செல்வவாழ்வு.
சிறிய சுருக்கம் = வறுமைவாழ்வு.
உயர்வு = குன்றாமை, தாழாமை.

“பெருக்கத்து பணிதல் வேண்டும். சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“செல்வப்பெருக்கொடு வாழுங்காலத்தில் பணிவு வேண்டும். வறுமையுற்ற காலத்தில் தாழாமை வேண்டும்” என்பதாம்.

‘வேண்டும் உயர்வு’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.”

 

குறள் – ௯௱அ௬௰௪ (அச்சில் உள்ளவாறு).

“தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை.”

இழிந்த = நீங்கிய, கழிந்த, வீழ்ந்த.
அனையர்= ஒப்பர்.
மாந்தர் = மக்கள், மனிதர்.
நிலை = மானம், வாழ்நிலை.
இழிந்தக்கடை = தாழ்ந்தவிடத்து.

“மாந்தர் நிலையினிழிந்தக்கடை தலையின் இழிந்த மயிரனையர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மனிதரது மானம் தாழ்ந்தவிடத்து தலையிலிருந்து நீங்கிய மயிருக்கு ஒப்பாவர்” என்பதாம்.

‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘தலை’, ‘நிலை’ என்னும் பெயர்களுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.”

 

குறள் – ௯௱அ௬௰௫ (அச்சில் உள்ளவாறு).

“குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.”

குன்றின் அனையாரும் = குன்று போல்வாரும்.
குன்றுவர் = தாழ்வுறுவர்.
குன்றுவ = இழிந்தன.
குன்றி அனைய = குன்றிமணியளவு.
செயின் = செய்தால்

“குன்றியனைய குன்றுவ செயின் குன்றின் அனையாரும் குன்றுவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“குன்றிமணியளவு இழிந்தன செய்தால் நிலையில் குன்று போல்வாரும் தாழ்வுறுவர்” என்பதாம்.

‘அனையாரும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். உயர்வுச்சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“குன்றி னனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.”

 

குறள் – ௯௱௬௰௬ (அச்சில் உள்ளவாறு).

“புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை.”

புகழின்றால் → புகழ் இன்று = புகழில்லை. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
புத்தேள் நாடு. = தேவருலகம். உய்யாதால் → உய்யாது = உய்க்காது, கொண்டு சேர்க்காது. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
மற்றென் = வேறெதற்கு.
இகழ்வார் = இகழ்ந்து பேசுவார்.
நிலை = நிற்றல், சார்தல்.

“இகழ்வார்பின் சென்று நிலை புகழ் இன்றால்; புத்தேணாட்டு உய்யாதால் மற்றென்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஆல்’ என்பது ஈரிடத்தும் அசைச்சொல்.

“தம்மை இகழ்ந்து பேசுவார்பின் சென்று நிற்றல் புகழைத்தராது; தேவருலகத்து சேர்க்காது. அவ்வாறானால் வேறெதற்கு” என்பதாம்.

‘புகழ்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.

‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘இன்று’, ‘உய்யாது’ என்னும் வினைமுற்றுகளுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘வேறு’ என்னும் பொருளில் வந்த ‘மற்று’ என்னும் இடைச்சொல் ‘என்’ என்ற வினாவுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“புகழ்இன்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்று*
இகழ்வார்பின் சென்று நிலை.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௯௱௬௰௭ (அச்சில் உள்ளவாறு).

“ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று.”

ஒட்டார் = பகைவர், இகழ்வார்.
கெட்டான் = இறந்தான்.
நன்று = நல்லது.‌

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மானமிழந்து பகைவர்/இகழ்வார்பின்சென்று ஒருவன் சார்ந்து வாழும் அந்நிலையைவிட அவன் இறந்தான் எனப்படுதல் நல்லது” என்பதாம்.

‘வாழ்தலின்’ என்னும் வினையெச்சம் ‘அந்நிலை’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘எனப்படுதனன்று’ என்னும் புணர்ச்சியைப்பிரிக்காது ‌‘நன்று’ என்னும் குறிப்புவினைமுற்றை அறியமுடியாது. பிரித்து பொருளறிவதாயின் புணர்த்த வேண்டா.

செம்மைவடிவம் –
“ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டா னெனப்படுதல் நன்று.”

 

குறள் – ௯௱௬௰௮ (அச்சில் உள்ளவாறு).

“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து.”

மற்று = பின்னும்.
ஊனோம்பும் = உடலைக்காக்கும்.
பெருந்தகைமை = மானமிகு வாழ்வு. பீடழிய = பெருமை அழிய.

“பெருந்தகைமை பீடழிய வந்தவிடத்து ஊனோம்பும் வாழ்க்கை மருந்தோ மற்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மானமிகு வாழ்வென்னும் பெருமை அழிந்தவிடத்து இறவாமல் உடலைக்காக்கும் வாழ்க்கை இறவாமைக்குரிய மருந்தோ; மருந்து ஆகாது” என்பதாம்.

‘மற்று’ என்னும் ‘பின்னும்’ என்றபொருளில் வந்த இடைச்சொல் ‘மருந்து’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘வந்தவிடத்து’ என்று வகரவுடம்படுமெய்பெறுதலின் ‘வந்தயிடத்து’ என்று யகரவுடம்படுமெய்பெறல் ஒலியொப்புமையும் எளிமையும் உடையது. ‘உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்’ என்பது தொல்காப்பியம்.

செம்மைவடிவம் —
“மருந்தோமற்று* ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த யிடத்து.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௯௱௬௰௯ (அச்சில் உள்ளவாறு).

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின்.”

நீப்பின் = நீங்கின்.
கவரிமா = மான் வகைகளுள் ஒன்று.
அன்னார் = போன்றார்.
நீப்பர் = நீங்குவர்.
வரின் = கெடின், இழப்பின்.

“மயிர்நீப்பின் வாழாக்கவரிமா அன்னார் மானம் வரின் உயிர்நீப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மயிர்த்தொகுதியில் ஒருமயிர் நீங்கினும் உயிரை நீங்கும் கவரிமா மானை போன்றார் தன்மானம் கெடின் உயிரை நீங்குவர்” என்பதாம்.

‘கவரிமாவன்னார்’ என்னும் புணர்ச்சியில் புணர்ச்சியை நீக்கிலாலன்றி ‘அன்னார்’ என்னும் ஒப்புப்பொருளை அறியமுடியாது. புணர்ச்சியை நீக்கி பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா.

‘அன்னார்’ என்னும் ஒப்புச்சொல் கவரிமாவைச்சுட்டும். ‘உயிர்’ என்னும் சொல்லுடன் புணர்வது தழுவாப்புணர்ச்சி.

செம்மைவடிவம் —
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.”

 

குறள் – ௯௱௭௰ (அச்சில் உள்ளவாறு).

“இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து முலகு.”

இளி = இழிவு.
இளிவரின் = இழிவு வந்தபோது.
வாழாத = இறக்கும்.
ஒளி = புகழ், பெருமை.
தொழுது = வணங்கி.
ஏத்தும் = வாழ்த்தும்.
உலகு = உலகோர்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“இழிவு வந்தபோது இறக்கும் மானமிக்காரின் புகழை வணங்கி வாழ்த்துவர் உலகோர்” என்பதாம்.

‘ஏத்தும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்தும் உலகு.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button