இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௮௰௧. பழைமை ( நட்பின் பழைமை ).

குறள் – ௮௱௧(அச்சில் உள்ளவாறு).

“பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.”

பழைமை = நட்பின் பழைமை.
யாதும் = எவ்வகையிலும்.
கிழமை = உரிமை. ‌
கீழ்ந்திடா = குறைத்திடா.

“பழைமையெனப்படுவது யாதெனின் கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நட்பின் பழைமையெனப்படுவது யாதெனின் அவர்தம் உரிமையை எவ்வகையிலும் குறைத்திடா நட்பு” என்பதாம்.

‘எனப்படுவது’ என்னும் சுட்டிடைச்சொல் ‘பழைமை’ என்னும் பெயரைச்சுட்டி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘யாது’ என்னும் வினாப்பெயர் வருமொழியாகிப்புணராது.

செம்மைவடிவம் —
“பழைமை யெனப்படுவது* யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௮௱௨ (அச்சில் உள்ளவாறு).

“நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்.”

கெழுதகைமை = மிகுவுரிமை.
மற்று = மேலும்.
உப்பாதல் = சுவைகூட்டல்.
சான்றோர் = மேன்மையோர்.
கடன் = கடமை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நட்பிற்கு உறுப்பாவது உரிமை மேலும் அதற்கு சுவைகூட்டல் மேன்மையோரது கடமை” என்பதாம்.

‘நட்பிற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘உறுப்பு’ என்னும் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘கெழுதகைமை’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். மேலும் செய்யுளில் பெயர்ப்பயனிலையாகும். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘மற்று’ என்னும் இடைச்சொல்லுடன் ‘அதற்கு’ என்னும் சுட்டுப்பெயர் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“நட்பிற்கு* உறுப்பு கெழுதகைமை மற்றதற்கு*
உப்பாதல் சான்றோர் கடன்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௮௱௩ (அச்சில் உள்ளவாறு).

“பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை.”

எவன் = யாது.
செய்யும் = தரும்.
கெழுதகைமை = உரிமை.
அமையாக்கடை = ஏற்காவிடத்து.

“கெழுதகைமைசெய்தாங்கு அமையாக்கடை பழகிய நட்பு எவன் செய்யும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தமக்கு உடன்பாடில்லாதபொழுதும் உரிமையால் செய்ததை ஏற்காவிடத்து பழகிய நட்பு யாது பயன் தரும்” என்பதாம்.

‘செய்யும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘செய்தாங்கு’ என்பதன்கண் வந்த ‘ஆங்கு’ என்னும் சுட்டிடைச்சொல் ‘செய்து’ என்னும் வினையெச்சத்துடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பழகிய நட்பு*எவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு* அமையாக் கடை.”

*குற்றியலுகரங்களாகிய புகரமும் குகரமும் அலகுபெறா.

குறள் – ௮௱௪ (அச்சில் உள்ளவாறு).

“விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.”

விழைதகையான் = விரும்பும் தன்மையால்.
கெழுதகையால் = உரிமையால்.
கேளாது = இசைவின்றி.

“கெழுதகையால் கேளாது நட்டார் செயின் விழைதகையான் வேண்டியிருப்பர்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“உரிமையால் நண்பர் தன்னிசைவின்றி செய்யினும் அவரை விரும்பும்தன்மையால் அச்செயல் நன்மைபயக்க வேண்டியிருப்பர்” என்பதாம்.

‘கெழுதகையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘கெழுதகை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்.”

குறள் – ௮௱௫ (அச்சில் உள்ளவாறு).

“பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.”

பேதைமை = அறியாமை.
ஒன்றோ = ஒன்று மட்டுமன்று.
பெருங்கிழமை = மிக்கவுரிமை, பேருரிமை.
நட்டார் = நண்பர்.
நோதக்க = வருந்தத்தக்க.
செயின் = செய்தால், செய்தக்கால்.

“நட்டார் நோதக்க செயின் பேதைமையொன்றோ பெருங்கிழமையென்றுணர்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நண்பர் வருந்தத்தக்கது செய்தக்கால் அதற்கு அறியாமை ஒன்றுமட்டுமே காரணமன்று. நம்மேல் அவர்க்குள்ள மிக்கவுரிமையுமென்று உணர்க” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௮௱௬ (அச்சில் உள்ளவாறு).

“எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந்
தொல்லைக்க ணின்றார் தொடர்பு.”

துறவார் = நீங்கார்.
எல்லைக்கண் = அளவின்கண், நெறியின்கண்.
தொல்லை = தொன்மை, பழைமை.

“தொல்லைக்கண் நின்றார்தொடர்பு தொலைவிடத்தும் துறவார் எல்லைக்கண் நின்றார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பழைமைக்கண் நின்றாரது தொடர்பினை தொலைவின்பொருட்டும் துறவார் நட்பினது நெறியின்கண் நின்றார்” என்பதாம்.

‘எல்லைக்கண்’, ‘தொல்லைக்கண்’ ஆகியவற்றின்கண் வந்த ‘கண்‘ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘எல்லை’, ‘தொல்லை’ ஆகிய பெயர்களுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தொலைவிடத்தும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.”

 

குறள் – ௮௱௭ (அச்சில் உள்ளவாறு).

“அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.”

அழிவந்த = அழிவுதருகின்ற.
அறார் = நீங்கார், பிரியார்.
கேண்மையவர் = நண்பர்.

“அன்பின் வழிவந்த கேண்மையவர் அழிவந்த செய்யினும் அன்பறார்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க

“அன்பின் வழிவந்த நண்பர் அழிவுதருவன செய்யினும் அன்பின் நீங்கார்” என்பதாம்.

‘செய்யினும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

‘அறார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.”

 

குறள் – ௮௱௮ (அச்சில் உள்ளவாறு).

“கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.”

கேள் = நட்பு
இழுக்கம் = குற்றம்.
கேளிழுக்கம் = நட்பினது குற்றம்.
கெழுதகைமை = உரிமை.
வல்லார்க்கு = உடையவர்க்கு.
நாளிழுக்கம் = நாளினது குற்றம், காலத்தின் குற்றம்.
நட்டார் = நண்பர்.

“கேளிழுக்கங்கேளாக்கெழுதகைமை வல்லார்க்கு (நட்டார்) இழுக்கஞ்செயின் (அது) நாளிழுக்கம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. நட்டார், அது ஆகியன அவாய்நிலையான் வந்தன.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நட்பின் குறைகளை செவிமடுக்காத உரிமைநட்புடையார்க்கு நண்பர் துன்பஞ்செயின் அது காலத்தின் குற்றம்” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௮௱௯ (அச்சில் உள்ளவாறு).

“கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையு முலகு.”

கெடாஅ = கெடுக்காத.
கேண்மையார் = நட்பினர்.
கேண்மை = நட்பு.
விழையும் = விரும்பும்.

“கெடாஅ வழிவந்த கேண்மையார்கேண்மை
விடாஅர் உலகு விழையும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நட்பினைக்கெடுக்காது தொடர்ந்துவரும் நண்பரது நட்பினை விடாதாரை உலகு விரும்பும்” என்பதாம்.

‘விழையும் உலகு’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.”

 

குறள் – ௮௱௰ (அச்சில் உள்ளவாறு).

“விழையார் விழையப் படுப பழையார்கட்
பண்பிற் றலைப்பிரியா தார்.”

விழையார் = விரும்பாதார் (பகைவர்).
விழையப்படுப‌= விரும்பப்படுவர்.
பழையார் = பழைமையான நட்பினர்.
தலைப்பிரியாதார் = நீங்காதார்.

“பழைமையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் விழையார்விழையப்படுப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பழைமையான நட்பினர்கண் தமது பண்புமாறாது நட்புபாராட்டுவாரை பகைவராலும் விரும்புவர்” என்பதாம்.

‘பழையார்கண்’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பழையார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பண்பின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பண்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.”

முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button