இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௫௰௩. சுற்றந்தழால் (சுற்றந்தழுவுதல்).

குறள் – ௫௱௨௧ (அச்சில் உள்ளவாறு).

“பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.”

பற்று = செல்வம்.
அற்ற = நீங்கிய.
பழைமை = பழைய உறவு, முன்னிருந்த தொடர்பு.
பாராட்டுதல் = கொண்டாடுதல்.
உள = உள்ளது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“செல்வம் நீங்கியபோதும் பழைய உறவுகளை கொண்டாடுதல் சுற்றத்தார் இடத்தே உள்ளது” என்பதாம்.

‘கண்ணே’ என்பதில் உள்ளது பிரிநிலையேகாரம். பிரிநிலையேகாரம் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.”

 

குறள் – ௫௱௨௨ (அச்சில் உள்ளவாறு).

“விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்.”

அறா = அறுபடாத.
இயையின் = வாய்ப்பின்.
அருப்பு = அரும்பு (அரும்புதல்), கிளைக்கும்.
ஆக்கம் = மேன்மை.

“ஒருவர்க்கு விருப்பம் அறுபடாத உறவு வாய்ப்பின் அச்சுற்றம் கிளைத்தல் அறுபடாத மேன்மைகள் பலவும் தரும். அச்சுற்றத்தால் இடைவிடாத மேன்மைகள் பலவும் கிட்டும்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

‘விருப்பறாச்சுற்றம்’ என்பது அடைபெற்ற திரிபில்பெயர்ச்சொல் ‘இயையின்’ என்னும் வினையெச்சத்துடன் புணராது. முற்றுப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘இயையின்’ என்னும் வினையெச்சம் ‘அரும்புதல்’ என்னும் பொருள்தரும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
வாக்கம் பலவுந் தரும்.”

 

குறள் – ௫௱௨௩ (அச்சில் உள்ளவாறு).

“அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.”

அளவளாவு = கூடிகலந்து பேசுதல், நெஞ்சு கலத்தல்.
குளவளா = குளப்பரப்பு.
கோடு = கரை.
அற்று = அத்தன்மையது.

‘உறவினர்களோடு கூடிகலந்துபேசி உறவாடாதானது வாழ்க்கை கரையில்லாக்குளத்தில் நீர் நிறைவதைப்போன்றது. கரையில்லாக்குளத்தில் நீர் நிறையாது வழிந்தோடுவதுபோல உறவாடாதானது வாழ்க்கை நிறைவில்லாது போகும்’ என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

‘அளவளாவு’ என்னும் தொழிற்பெயர் புணராது தனித்து நிற்கும். ‘வில்லாதான்’ என்பதனை புணர்ச்சிநீக்கி ‘இல்லாதான்’ என பொருளறிவதாயின் புணர்ச்சியினால் பயனில்லை. புணர்ந்த சொற்கள் பிரியாது பொருளுணர்த்தும்.

‘குளப்பரப்பு’ என்னும் பொருள்தரும் குளவளா எழுவாயாகும். திரிபில்பெயர்ச்சொல்லான எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அளவளாவு* இல்லாதான் வாழ்க்கை குளவளா
கோடின்றி நீர்நிறைந் தற்று.”

*முற்றியலுகரமாகிய வுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௨௪ (அச்சில் உள்ளவாறு).

“சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.”

அத்தான் = அதனால்.
சுற்றப்பட = சூழப்பட.
ஒழுகுதல் = வாழ்தல்.

“செல்வம்பெற்று அத்தால் பெற்ற பயன் சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்”
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. பெற்றது → பெற்றதால் → பெற்றத்தால். பெற்றதால் என்பது இயைபுதொடைநோக்கி விரிந்தது.

“செல்வத்தைப்பெற்றதனால் பெற்ற பயனாவது சுற்றத்தால் சூழப்பட வாழ்தல்” என்பதாம்.

‘சுற்றத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘சுற்றம்’ என்னும் பெயருடன் அத்துச்சாரியைபெற்று புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பெற்றத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அது’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“சுற்றத்தால் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.”

 

குறள் – ௫௱௨௫ (அச்சில் உள்ளவாறு).

“கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.”

ஆற்றின் = செய்யின், கடைப்பிடிப்பின்.
அடுக்கிய சுற்றம் = சுற்றமும் சுற்றத்தின் சுற்றமும்.
சுற்றப்படும் = சூழப்படும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“வேண்டுவன கொடுத்தலையும் இனிமையாக பேசுதலையும் செய்வானாயின் அவன் சுற்றத்தாலும் சுற்றத்தாரின் சுற்றத்தாலும் சூழப்படுவான்” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா.

இது செய்ய இது நிகழுமென வரையறுக்குஞ்சொல் ஆற்றின் என்பது. எனவே அவ்வரையறையை உணர அவ்விடத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.

‘சுற்றத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘சுற்றம்’ என்னும் பெயருடன் அத்துச்சாரியைபெற்று புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கொடுத்தலு மின்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.”

 

குறள் – ௫௱௨௬ (அச்சில் உள்ளவாறு).

“பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.”

கொடை = ஈதல், வேண்டியதை கொடுத்தல்.
பேணான் = விரும்பான்.
வெகுளி = சினம்.
மருங்கு = சுற்றம்.
மாநிலம் = உலகம்.

“வெகுளிபேணான் பெருங்கொடையான் அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்(லை)” என்பதாம்.

“சினத்தை விரும்பாது பெருங்கொடையளிப்பவனினும் சுற்றமுடையார் இவ்வுலகத்து இல்லை“ என்பதாம்.

‘அவன்’ என்பது எழுவாய். எழுவாய் வருமொழியாகி புணராது.

‘மாநிலத்தில்’ என்பது மயங்குபுணர்ச்சி. ‘இல்லை’ எனப்பொருள்படும் ‘இல்’ என்னும் வினைமுற்று புணர்ச்சியில் ஏழாம்வேற்றுமைவுருபாக மயங்கும். மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.

செம்மைவடிவம் —
“பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து* இல்.”

* குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௨௭ (அச்சில் உள்ளவாறு).

“காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.”

கரவா → இயலாது = மறைக்காது. கரைந்து = அழைத்து.
ஆக்கமும் = மேன்மைகளும், சிறப்புகளும்.
அன்ன = அத்தன்மையான.
நீரார் = குணத்தார், இயல்பினார்.

“காக்கை தனது இரையைக்கண்டு அதனை மறைக்காது தன்னினத்தை அழைத்து இனத்தோடு உண்ணும். சுற்றத்தாரால் எய்தும் மேன்மைகளும் அத்தகு இயல்பினார்க்கே உண்டாகும்” என்பதாம்.

‘உண்ணும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘ஆக்கமும்’ என்பது எச்சவும்மைச்சொல். எச்சவும்மையால் அறமும் இன்பமுமேயன்றி பொருளும் எய்தும் என்பதாம். எச்சவும்மை எதனுடனும் புணராது.

‘ஆக்கமுமன்ன’ என்பது தழுவாப்புணர்ச்சி. ‘அன்ன’ என்னும் உவமச்சொல் ‘நீரார்க்கே’ என்னுஞ்சொல்லைத்தழுவும். தழுவுஞ்சொற்களே புணரும்.

‘அன்னநீரார்கே’ என்பது பிரிநிலையேகாரச்சொல். பிரிநிலையேகாரம் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.”

 

குறள் – ௫௱௨௮ (அச்சில் உள்ளவாறு).

“பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர்.”

நோக்கான் = கருதான்.
வரிசையான் = தகுதியான்.
நோக்கி = கருதி.

“பொதுநோக்கான் வேந்தன் நோக்காது வரிசையான் நோக்கின் அதுநோக்கி பலர் வாழ்வார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அனைவரையும் ஒத்த தன்மையினராய் மன்னன் கருதாது, அவரவர்தம் தகுதிக்கேற்ப கருதுவானாயின் அச்சிறப்பினைக்கருதி பலர் அவனை நீங்காது வாழ்வர்” என்பதாம்.

‘வரிசையான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘வரிசை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நோக்கின்’ என்னும் வினையெச்சம் ‘அது’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“பொதுநோக்கான் வேந்தன் வரிசையான் நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.”

 

குறள் – ௫௱௨௯ (அச்சில் உள்ளவாறு).

“தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும்.”

தமராகி = உறவாகி.
தற்றுறந்தார் → தன்னைத்துறந்தார் = தம்மைவிட்டு விலகினார்.
அமராமை = பொருந்தாமை.
இன்றி = இல்லாமல் போக.

“உறவாகி பொருந்தாமை காரணமாக தம்மைவிட்டு விலகினார் அக்காரணம் இல்லாமற்போக தானே உறவாவர்” என்பதாம்.

‘ஆகி’ என்னும் வினையெச்சம் ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘தற்றுறந்தார்சுற்றம்’ என்பது ‘தன்னைத்துறந்தாரதுசுற்றம்’ எனவிரியும். ‘அமராமைக்காரணம்’ என்பது ‘அமராமைக்குரிய காரணம்’ எனவிரியும். ஒரு தொகைக்குரிய சொல் வேறொரு தொகையுடன் புணராது. தழுவுஞ்சொற்களே புணரும்.

‘காரணம்’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“தமராகி தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.”

 

குறள் – ௫௱௩௰ (அச்சில் உள்ளவாறு).

“உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்.”

உழைப்பிரிந்து = உறவாகி பின்பிரிந்து.
இழைத்து = நுட்பமாக.
இருந்து = பொறுத்திருந்து.
எண்ணி = ஆராய்ந்து.
கொளல் = ஏற்க, கொள்க.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“உறவாயிருந்து பின்பிரிந்து ஒரு காரணத்தைக்கருதி வந்தானை வேந்தன் பொறுமையாக நுட்பமாக ஆராய்ந்து ஏற்க” என்பதாம்.

வினையெச்சங்கள் தம்முள் புணருமெனினும் வெவ்வேறு எச்சவினைகள் விளங்குமாறு புணர்த்தவேண்டும்.

செம்மைவடிவம் —
“உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து* எண்ணிக் கொளல்.”

* குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button