
குறள் – ௲௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு).
“கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது.”
கண்தாம் = கண்கள்தாம். இதன்கண் ‘தாம்’ என்பது இடைச்சொல்.
கலுழ்வது = அழுவது.
எவன்கொலோ = ஏன். கொல், ஓ ஆகியன அசைச்சொற்கள். .
தாம் காட்ட = ஈண்டு ‘தாம்’ என்பது எழுவாயாகும் மறுபெயர்ச்சொல்.
தண்டாநோய் = (பிரிவால் வந்த) தீராத துன்பம்.
“தண்டாநோய் யாம் கண்டது (கண்) தாம் காட்ட கண்தாம் கலுழ்வது எவன்கொலோ.” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘கண்’ என்பது பின்னும் நின்று பொருள்தரும்.
“இத்தீராத துன்பத்திற்கு காரணமான காதலரை கண்கள்தாம் காட்ட யான் கண்டது. அவ்வாறிருக்க அவரைக்காட்டச்சொல்லி இக்கண்கள் அழுவது ஏன்” என்பதாம். கண்கள் காதலரைக்கண்டு எமக்கு காட்டியதால் நான் கண்டேன். பிரிவின்கண் கணவரைக்காட்டுமாறு கண்கள் அழுவதேன் என்பதாம்.
‘கண்டாம்’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. ‘தாம்’ என்பது இடைச்சொல். ‘கண்டாம்’ என்பது வினைமுற்றாகவும் மயங்கும்.
‘கலுழ்வது’ என்னும் வினையெச்சம் ‘எவன்’ என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘தாங்காட்ட’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘தாம்’ என்பது கண்களைச்சுட்டும் மறுபெயர்ச்சொல். எழுவாயாம் தன்மைபெற்றது. எழுவாய் எதனுடனும் புணராது.
‘யாங்கண்டது’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘யாம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கண்தாம் கலுழ்வது* எவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு).
“தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப்
பைத லுழப்ப தெவன்.”
தெரிந்துணரா = ஆய்ந்து அறியாது. உண்கண் = மைதீட்டிய விழிகள்.
பரிந்து உணரா = அன்புகூராது, இரக்கங்கொள்ளாது.
பைதல் = துன்பம்.
உழப்பது = உழல்வது, ஆழ்வது.
எவன் = ஏன்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஆய்ந்து அறியாது நோக்கிய மைதீட்டிய விழிகள் இரக்கங்கொள்ளாது துன்பத்தில் ஆழ்வது ஏன்” என்பதாம். பிரிவாரென்பதை ஆராயாது கூடியபின் பிரியுங்கால் துன்பமடையக்கூடாதென்பதாம்.
‘நோக்கிய உண்கண்’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘உழப்பது’ என்னும் வினையெச்சம் ‘எவன்’ என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைத லுழப்பது* எவன்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௭௰௩ (அச்சில் உள்ளவாறு).
“கதுமெனத் தானோக்கித் தாமே கலுழு
மிதுநகத் தக்க துடைத்து.”
கதுமென = விரைந்து.
கலுழும் = அழும்.
நகத்தக்கது = எள்ளத்தக்கது. உடைத்து = உடையது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தாம் (கண்கள்) விரைந்து நோக்கி தாமே அழும் இச்செயல் எள்ளுந்தன்மையது” என்பதாம். விரைந்து விரும்பி நோக்கி பிரிவின்போது ஆற்றாது அழும் கண்களது செயல் எள்ளத்தக்கதென்பதாம்.
‘கதுமென’ என்பதன்கண் வந்த ‘என’ என்னும் உருவகயிடைச்சொல் ‘கதும்’ என்னும் வினையடையுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தானோக்கி’ என்பதன்கண் வந்த ‘தான்’ என்பது எழுவாயாகும் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
‘கலுழும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நோக்கி’ என்னும் வினையெச்சம் ‘தாமே’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“கதுமென தான்நோக்கி தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.”
குறள் – ௲௱௭௰௪ (அச்சில் உள்ளவாறு).
“பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
வுய்வினோ யென்க ணிறுத்து.”
பெயலாற்றா = அழ இயலாத.
நீருலந்த = கண்ணீர் வற்றிய.
உண்கண் = மைதீட்டிய விழிகள். உயலாற்றா = தப்ப இயலாத.
உய்வில் (உய்வு+இல்) = நீங்கும்வழி இல்லாத.
நோய் = துன்பம்.
என்கண் = என்னிடத்து.
நிறுத்து = நிலைநிறுத்தி.
“உயலாற்றா உய்வு இல் நோயென்கண் நிறுத்து உண்கண் பெயலாற்றா நீருலந்த” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தப்ப இயலாத நீங்கும்வழி இல்லாத துன்பத்தை என்னிடத்தில் நிலைநிறுத்திய மைதீட்டிய கண்கள் அழ இயலாது நீரிழந்து வற்றின” என்பதாம்.
‘நீருலந்த உண்கண்’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘உண்கண்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘உய்வினோய்’ என்பது ‘உய்வில்லா நோயை’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைவுருபு தொக்குநிற்கும் ‘நோய்’ என்னுஞ்சொல் ‘என்’ என்னும் மறுபெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘உய்வில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்பது எதிர்மறைகுறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘என்கணிறுத்து’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
வுய்வு*இல்நோய் என்கண் நிறுத்து.”
*முற்றியலுகரமாம் வுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௭௰௫ (அச்சில் உள்ளவாறு).
“படலாற்றா பைத லுழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்.”
படல் = உறக்கம்.
படலாற்றா = உறங்க விடாத.
பைதல் = துன்பம்.
உழக்கும் = ஆளும், அடைந்தன.
கடலாற்றா = கடலும் கொள்ளாத.
காமநோய் = காதல்நோய்.
“கடலாற்றாக்காமநோய் என்கண் செய்த படலாற்றாப்பைதலுழக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கடலும் கொள்ளாத அளவு காதல்நோயைச்செய்த எனது கண்கள் தாமும் தூங்காத்துன்பத்தை அடைந்தன” என்பதாம்.
‘கடலாற்றாக்காமநோய்’ என்பதன்கண் ஒற்று மிகுந்தது போன்றே ‘படலாற்றாப்பைதல்’ என்னும் ஈறுகெட்ட எதிர்மறைபெயரெச்சத்தின்கண்ணும் ஒற்று மிகும்.
‘செய்த என்கண்’ என்பது பெயரெச்சத்தொடர். இதனில் ‘எனது’ எனவிரியும் ‘என்’ என்பது ‘கண்’ என்னும் பெயருடன் ஆறாம்வேற்றுமைத்தொகை ஆவதால் பெயரெச்சத்துடன் புணரும் இன்றியமையாமை இல்லை.
செம்மைவடிவம் —
“படலாற்றாப் பைத லுழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.”
குறள் – ௲௱௭௰௬ (அச்சில் உள்ளவாறு).
“ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
டாஅ மிதற்பட் டது.”
ஓஒ→ ஓ = ‘மிகுதி’ என்னும் பொருள்தரும் குறிப்புச்சொல்.
இனிதே = இன்பமானதே.
இந்நோய் = பிரிவாகிய இத்துன்பம்.
தாஅம் → தாம் = கண்கள்.
இதற்பட்டது = இத்துன்பத்தை அடைந்தது.
“எமக்கு இந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட்டது ஓஒ இனிதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எமக்கு பிரிவாகிய இத்துன்பத்தைத்தந்த கண்கள் தாமும் இத்துன்பத்தை அடைந்தது மிகவும் இன்பமானதே” என்பதாம்.
‘ஓஒ’ என்பதன்கண் வந்த ‘ஒ’ என்னும் அளபெடையினக்குறில் ‘ஓ’ என்னும் மிகுதிப்பொருள்தரும் சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இனிதே’ என்பது அறுதியிடும் தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
‘எமக்கிந்நோய்’ என்பதன்கண் வந்த வினைசாராது இயல்புப்பொருள்தரும் இகரச்சுட்டுப்பெயர் நான்காம்வேற்றுமையுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசாராது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன்மட்டுமே புணரும்.
‘தாஅம் (தாம்)’ என்னும் எழுவாயாகும் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஓஒ இனிதே எமக்கு*இந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௭௰௭ (அச்சில் உள்ளவாறு).
“உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.”
உழந்துழந்து = வருந்தி வருந்தி.
உண்ணீர் (உள்+நீர்) = கண்ணீர்.
அறுக = வற்றுக.
விழைந்து = விரும்பி.
இழைந்து = நெகிழ்ந்து.
வேண்டி = விரும்பி.
அவர்கண்ட = கணவரைக்கண்ட.
“(அன்று) விழைந்திழைந்து வேண்டி அவர்கண்ட கண் (இன்று) உழந்துழந்து உண்ணீர் அறுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. அன்று, இன்று ஆகியன சொல்லெச்சங்கள்.
“அன்று விரும்பி நெகிழ்ந்து வேண்டி அவரைக்கண்ட கண்கள் இன்று வருந்தி வருந்தி அழுது கண்ணீர் வற்றுக” என்பதாம்.
‘உழந்து’ என்னும் வினையெச்சம் ‘உண்ணீர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘வேண்டியவர்’ என்பது பொருண்மயங்குபுணர்ச்சி. இது ‘வேண்டி’ என்னும் வினையெச்சத்தின் பொருளையும், ‘அவர்’ என்னும் சுட்டுப்பெயரின் பொருளையும் மயங்கச்செய்து வினையாலணையும்பெயராக பொருள்படும்.
‘அவர்கண்ட’ என்பது ‘அவரைக்கண்ட’ என்னும் இரண்டாம்வேற்றுமைவிரியின் தொகையாகும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும். இடைவெளிநீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை உணர்த்தும்.
‘உண்ணீர் அறுக’ என்பது எழுவாய்த்தொடர். எழுவாய்த்தொடரில் வினைமுற்று புணராது தனித்துநின்று சிறப்புறும்.
செம்மைவடிவம் —
“உழந்துழந்து* உண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்கண்ட கண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௭௰௮ (அச்சில் உள்ளவாறு).
“பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்.”
பேணாது = விரும்பாது.
பெட்டார் = விரும்பியவர்.
உளர்மன் = உள்ளார். ‘மன்’ என்பது அசை நிலை.
ஓ = வியப்பிடைச்சொல்.
மற்று = ஆயின்.
அவர் = கணவர்.
அமைவில = அமைதியுரா, ஆற்றா.
“பெட்டார் பேணாது உளர்மன் மற்று அவர்காணாது கண்களோ அமைவில” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“விரும்பியவர் விரும்பாது உள்ளார். ஆயின் கண்களோ அவரைக்காணாது அமைதியுறா” என்பதாம்.
‘பெட்டார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘மற்றவர்’ என்பது பிறர் எனவும் பொருள்படும் மயங்குபுணர்ச்சி. ‘மற்று’ என்பது தனித்துநின்று பொருள்தரும்.
‘அவர்காணாது’ என்பது ‘அவரைக்காணாது’ என்னும் இரண்டாம்வேற்றுமைவிரியின் தொகையாகும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும். இடைவெளிநீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை அறிவிக்கும்.
‘அமைவில கண்’ என்பது முன்பின் மாறி நின்ற வினைமுற்றுத்தொடராகும். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்று*அவர்
காணாது* அமைவில கண்.”
*குற்றியலுகரங்களாகிய றுகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௲௱௭௰௯ (அச்சில் உள்ளவாறு).
“வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.”
துஞ்சா = துயிலா, உறங்கா.
வரின் = வந்தால்.
ஆயிடை = அவ்விருநிலையிலும்.
ஆரஞர் (ஆர்+அஞர்) = பெருந்துன்பம்.
உற்றன = அடைந்தன.
“வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை கண் ஆரஞர் உற்றன” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவர் வாராரெனின் பிரிவால் துயிலா; வந்தால் பிரிவஞ்சி துயிலா. இருநிலையிலும் கண்கள் பெருந்துன்பத்தை அடைந்தன” என்பதாம்.
வாராக்காற்றுஞ்சா, வரிற்றுஞ்சா என்பன விதிவழி புணர்ந்தன. ‘துஞ்சா’ என்பது வினைமுற்று. எத்தொடரிலும் வினைமுற்று தனித்திருப்பது அதற்கு முதன்மையையும் சிறப்பையும் தரும். துஞ்சா என்னும் நிலையே இக்குறளில் சிறப்பிக்கப்படுகிறது. எனவே அச்சிறப்பைப்பெற புணராது தனித்துநிற்பது பொருந்தும்.
‘துஞ்சா’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஆயிடையாரஞர்’ என்னும் புணர்ச்சியில் ஆயிடை என்பது சுட்டுச்சொல். ‘சுட்டு நீண்டதென’ பரிமேலழகனார் உரைக்கின்றார். சுட்டு புணராது தனித்துநின்று தன்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞ ருற்றன கண்.”
குறள் – ௲௱௮௰ (அச்சில் உள்ளவாறு).
“மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ
லறைபறை கண்ணா ரகத்து.”
மறைபெறல் = மறைத்ததை அறிதல்.
அரிதன்றால் = இயலாததன்று எளிது. ‘ஆல்’’ என்பது அசைச்சொல்.
அறைபறை= பறையடித்து அறிவிக்கும்.
கண்ணாரகத்து = கண்களை உடையாரிடத்து.
“எம்போல் அறைபறை கண்ணாரகத்து மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எம்மைப்போல் பறையடித்து அறிவிக்கும் கண்களை உடையாரிடத்து மறைத்ததை அறிதல் ஊரார்க்கு இயலாததன்று (எளிது)” என்பதாம்.
‘பெறல்’ என்பது அல்லீற்றுத்தொழிற்பெயர். இத்தொழிற்பெயர் ‘ஊரார்க்கு’ என்னும் பெயருக்கு அடையாகாது. எனவே புணராது. தொழிற்பெயர் எப்பெயர்க்கும் அடையாகாது.
‘அன்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அன்று’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘எம்போல்’ என்பதன்கண் வந்த ‘போல்’ என்னும் உவமவுருபு ‘எம்’ என்னும் மறுபெயர்ச்சொல்லைச்சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



