
குறள் – ௲௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு).
“காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி.”
காமம் = காதல்.
உழந்து = ஈடுபட்டு.
ஏமம் = நன்மை, ஆறுதல்.
மடல் = மடலூர்தல்.
வலி = வலிமையானது.
மடலூர்தல் — களவொழுக்கத்தில் இருந்த தலைவன் தலைவி ஆகியோர் திருமணம்புரிந்து கற்பொழுக்கத்தில் ஈடுபட பெற்றோர், உற்றார் ஆகியோர் இசையாதபோது தலைவன் தனது களவொழுக்கத்தை ஊரார் அறியுமாறு பனை, ஈந்து, கமுகு முதலியவற்றின் பாளைகளால் போர்த்தப்பட்ட மண்குதிரைமீதமர சிறார் ஊர்பெருவீதிகளில் இழுத்துச்செல்வர். இதனைக்காணும் ஊர்ப்பெரியோர் தலைவனின் நோக்கறிந்து தலைவியின் பெற்றோரிடம் இசைவுபெற்று திருமணம்முடித்து கற்பொழுக்கத்தில் செலுத்துவர்.
“காமமுழந்து வருந்தினார்க்கு ஏமம் வலிமடலல்லது இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காதலில் ஈடுபட்டு திருமணம் நிகழாது வருந்துவார்க்கு நன்மைசெய்யும் வலிமையுள்ள மடலூர்தலன்றி இல்லை” என்பதாம்.
‘வருந்தினார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமையுருபேற்ற சொல் வினைசாராது இயல்புப்பொருள்தரும் ‘ஏமம்’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘ஏமம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணரா. ‘ஏமமடல்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி.
செம்மை வடிவம் —
“காம முழந்து வருந்தினார்க்கு* ஏமம்
மடலல்ல தில்லை வலி.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௩௰௨ (அச்சில் உள்ளவாறு).
“நோனா வுடம்பு முயிரு மடலேறு
நாணினை நீக்கி நிறுத்து.”
நோன் → நோன்பு = தவம், பொறுமை. பிரிவைத்தாங்காத இயல்பு என்பது இடப்பொருள்.
நோனாவுடம்பும் உயிரும் = பிரிவைத்தாங்காத உடலும் உயிரும்.
மடலேறும் = மடலூரும்.
நாணினை = வெட்கத்தை.
நீக்கிநிறுத்து = அகற்றி.
“நோனாவுடம்புமுயிரும் நாணினை நீக்கி நிறுத்து மடலேறும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘நிறுத்து’ என்பது ‘நிறுத்தி’ என்னும் பொருளது.
“பிரிவைத்தாங்காத உடலும் உயிரும் மடலூர்தலைத்தடுக்கும் வெட்கத்தை அகற்றி மடலூரும்” என்பதாம்.
எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது. இறுதியெண்ணும்மையான ‘உயிரும்’ என்பது புணராது.
‘மடலேறும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நோனா வுடம்பு முயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.”
குறள் – ௲௱௩௰௩ (அச்சில் உள்ளவாறு).
“நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்
காமுற்றா ரேறு மடல்.”
நாணொடு = நாணத்தொடு.
நல்லாண்மை = மிக்க ஆண்டகைமை.
பண்டு = முன்னாளில்.
உடையேன் = பெற்றிருந்தேன்.
காமுற்றார் = காதலுற்றார்.
ஏறுமடல் = ஊரும் மடல், மடலூர்தல்.
இன்றுடையேன் = இப்போது பெற்றேன்.
“நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் காமுற்றார் ஏறுமடல்
இன்றுடையேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நாணத்தொடு மிக்க ஆண்டகைமை முன்னாளில் பெற்றிருந்தேன். அவை காதலால் நீங்குவதால் காதலுற்றார் ஊரும் மடலை இப்போது பெற்றேன்” என்பதாம்.
‘பண்டுடையேன்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘காமுற்றார்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஏறும் மடல்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.”
குறள் – ௲௱௩௰௪ (அச்சில் உள்ளவாறு).
“காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புணை.”
காமக்கடும்புனல் = காதலாகிய பெருவெள்ளம்.
உய்க்குமே = நீக்குமே.
நாணொடு = நாணத்தொடு.
நல்லாண்மை = மிக்க ஆண்டகைமை.
புணை = தெப்பம்.
“நாணத்தொடு நல்லாண்மையென்னும் புணை காமக்கடும்புனல் உய்க்குமே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நாணத்தொடு மிக்க ஆண்டகைமையென்னும் தெப்பங்களை காதலாகிய பெருவெள்ளம் என்னிடமிருந்து நீக்குகின்றன” என்பதாம்.
‘காமக்கடும்புனல்’ என்பது நெடுந்தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புணை.”
குறள் – ௲௱௩௰௫ (அச்சில் உள்ளவாறு).
“தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
மாலை யுழக்குந் துயர்.”
தொடலை = மேகலை.
குறுந்தொடி = சிறுவளையல்கள்.
மடலொடு = மடலூர்தலொடு.
மாலையுழக்கும் துயர் = மாலைப்பொழுதில் வருத்தும் துன்பம் (காமம்).
“மாலையுழக்கும் துயர் மடலொடு தொடலைக்குறுந்தொடி தந்தாள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மாலைப்பொழுதில் வந்து வருத்தும் துன்பத்தை (காமத்தை) மடலூரும் நினைவொடு மேகலையும் சிறுவளையல்களையும் அணிந்த இவள் தந்தாள்” என்பதாம்.
‘தந்தாள்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உழக்கும் துயர்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை யுழக்கும் துயர்.”
குறள் – ௲௱௩௰௬ (அச்சில் உள்ளவாறு).
“மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்.”
யாமத்தும் = நள்ளிரவிலும்.
உள்ளுவேன் = நினைப்பேன்.
மன்ற = உறுதியாக.
படல் ஒல்லா = துயிலைப்பொருந்தா, துயிலா, உறங்கா.
பேதை = பெண். பேதை என்பது இளமையையும் மடமையையும் குறித்தது.
“பேதைக்கு என்கண் படலொல்லா யாமத்தும் மடலூர்தல் உள்ளுவேன் மன்ற” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இப்பெண்ணின்பொருட்டு என்கண்கள் துயிலா. நள்ளிரவிலும் மடலூர்தலையே நினைப்பேன்” என்பதாம்.
‘யாமத்தும்’ என்பது மற்றபொழுதுகளிலும் என்னும் பொருள்தருவதால் இறந்தது தழுவிய எச்சவும்மையாகும். எச்சவும்மை எதனுடனும் புணராது.
‘பேதைக்கு’ என்னும் நான்காம் உருபேற்ற சொல் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. புணரின் வினாவாகவும் மயங்கும். மேலும் ‘என்’ என்பது ‘கண்’ என்பதுடன் புணர்ந்து ‘என்கண்’ என்றவாறு தொகையாகும்.
செம்மைவடிவம் —
“மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கு*என் கண்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௩௰௭ (அச்சில் உள்ளவாறு).
“கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.”
கடலன்ன = கடல்போன்ற.
காமமுழந்தும் = காதலால் வருந்தியும்.
பெருந்தக்கது = பெருமைமிக்கது.
இல் = இல்லை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கடல்போன்ற காதலால் வருந்தியும் மடலூராப்பெண்மையின் பெருமைமிக்கது இல்லை” என்பதாம்.
‘உழந்தும்’ என்னும் வினையெச்சம் ‘மடல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பெண்ணின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பெண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘பெருந்தக்கதில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் குறிப்புவினைமுற்று புணராது தனித்துநிற்கும்.
புணரின் வேற்றுமைவுருபாகவும் மயங்கும்.
செம்மைவடிவம் —
“கடலன்ன காம முழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது* இல்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௩௰௮ (அச்சில் உள்ளவாறு).
“நிறையரியர் மன்னளிய ரென்னாது காம
மறையிறந்து மன்று படும்.”
நிறை = மாண்பு.
அரியர் = அருமையர்.
மன் = மிகுதி.
அளியர் = அன்பர், அருளர்.
என்னாது = எனக்கருதாது.
மறையிறந்து = மறைவில் நீங்கி.
மன்று = பொதுவெளி.
படும் = வெளிப்படும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
இது தலைவியின் கூற்று. “இவர் மாண்புகளால் அருமையானவர், மிக்க அன்புகொண்டவரென கருதாது எனது காதல் மறைவில் நீங்கி பிறரறிய வெளிப்படுகிறது” என்பதாம்.
‘காமம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நிறையரியர் மன்னளிய ரென்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.”
குறள் – ௲௱௩௰௯ (அச்சில் உள்ளவாறு).
“அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம
மறுகின் மறுகு மருண்டு.”
அறிகிலார் = அறியார்.
காமம் = காதல்.
மறுகின் = தெருவில்.
மறுகும் = வருந்தும், கலங்கும்.
மருண்டு = மயங்கி.
“என்காமம் எல்லாரும் அறிகிலாரென்றே மருண்டு மறுகின் மறுகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவியின் கூற்று. “எனது காதலை எவரும் அறியாரென்றே மயங்கி தலைவனைக்காண தெருவில் நின்று வருந்தும்”
என்பதாம்.
‘அறிகிலார்’ என்பது முற்றெச்சம். முற்றெச்சம் எதனுடனும் புணராது.
‘என்றே’ என்பது தேற்றேகாரம்பெற்ற இணைப்பிடைச்சொல். அறுதியிடும் தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
‘காமம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘மறுகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறிகிலார் எல்லாரு மென்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.”
குறள் – ௲௱௩௪௰ (அச்சில் உள்ளவாறு).
“யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு”
கண்ணிற்காண = கண்ணால் காணுமாறு.
நகுப = நகைப்பர், நகுவர்.
அறிவில்லார் = அறியாதார்.
யாம்பட்ட = யாம் அடைந்த துன்பம்.
படாவாறு = அடையாததால்.
“யாம்பட்ட தாம்படாவாறு அறிவில்லார் யாம் கண்ணில் காண நகுப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவியின் கூற்று. “யாம் அடைந்த துன்பத்தை தாமும் அடைந்து அறியாததால் யாம் கண்ணில் காணுமாறு எம்மை நகைப்பர்” என்பதாம்.
‘யாம்’ என்பது எழுவாயாம் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
‘கண்ணில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நகுப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“யாம்கண்ணில் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




