
குறள் -௫௱௯௰௧ (அச்சில் உள்ளவாறு).
“உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா
ருடைய துடையரோ மற்று.”
ஊக்கம் = முயற்சி.
மற்று = வேறு.
“உடையரெனப்படுவது ஊக்கம். அஃதில்லார் மற்றுடையது உடையரோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒன்றனை உடையரெனப்படுவது ஊக்கமுடைமையே. அஃதில்லாது வேறு உடையராயிருத்தல் உடையராவாரோ; ஆகார்” என்பதாம்.
‘எனப்படுவது’ என்னும் வினாச்சொல் ‘உடையர்’ என்னும் எழுவாயை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஊக்கம்’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் செய்யுளில் பெயர்ப்பயனிலையாய் நின்று பொருள்முடிவினைத்தருகின்றது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘ஊக்கமில்லாதார்’ எனப்பொருள்தரும் ‘அஃதில்லார்’ என்னும் எழுவாய் எதனுடனும் புணராது.
‘உடையரோ’ என்னும் வினா வருமொழியாகி புணராது தனித்துநின்று வினாப்பொருளை தெள்ளிதின் காட்டும்.
செம்மைவடிவம் —
“உடைய ரெனப்படுவது* ஊக்கம்அஃ தில்லார்
உடையது* உடையரோ மற்று.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௯௰௨ (அச்சில் உள்ளவாறு).
“உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.”
உள்ளம் = ஊக்கம், முயற்சி.
உடைமை = கொண்டிருத்தல்.
உடைமை = இருப்பு.
பொருள் = செல்வம்.
“ஊக்கமுடைமை நிலைத்த இருப்பு. செல்வமுடைமை நீடித்திருக்காது நீங்கிவிடும் நிலையாமையைக்கொண்டது” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘உடைமை’ (இரண்டாஞ்சீர்) என்னும் வினையெச்சம் ‘உடைமை’ (மூன்றாஞ்சீர்) என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் –
“உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.”
குறள் – ௫௱௯௰௩ (அச்சில் உள்ளவாறு).
“ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க
மொருவந்தம் கைத்துடை யார்.”
ஆக்கம் = செல்வம்.
அல்லாவார் = அலமரார், அலறமாட்டார்.
ஊக்கம் = முயற்சி.
ஒருவந்தம் = ஒருதலையாக, உறுதியாக.
கைத்து = கைப்பொருளாக.
“ஒருவந்தம் ஊக்கங்கைத்துடையார் ஆக்கமிழந்தேமென்று அல்லாவார்”
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உறுதியாக முயற்சியை கைப்பொருளாக கொண்டவர் செல்வத்தை இழந்தோமென்று அலறமாட்டார்” என்பதாம்.
‘என்று’ என்னும் இடைச்சொல் ‘இழந்தேம் ’என்னும் வினைமுற்றின் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அல்லாவார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஆக்க மிழந்தேமென்று* அல்லாவார் ஊக்க
மொருவந்தம் கைத்துடை யார்.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௯௰௪ (அச்சில் உள்ளவாறு).
“ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
வூக்க முடையா னுழை.”
ஆக்கம் = செல்வம் உள்ளிட்ட மேன்மைகள்.
அதர் = வழி.
வினாய் = வினவி.
அதர்வினாய் = வழிகேட்டு.
அசைவிலா = தளரா.
உழை = இடம், இடத்து.
“அசைவிலா ஊக்கமுடையானுழை ஆக்கம் அதர்வினாய் செல்லும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தளரா முயற்சியுடையானிடத்து மேன்மைகள் வழிதேடி சென்றடையும்” என்பதாம்.
‘அதர்வினாய்’ என்பதன்கண் வந்த ‘ஆய்’ என்னும் இடைச்சொல் ‘தானாக’ என்னும் பொருள்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆக்கம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘செல்லும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா
வூக்க முடையா னுழை.”
குறள் – ௫௱௯௰௫ (அச்சில் உள்ளவாறு).
“வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு .”
வெள்ளத்தனைய = நீர்மட்ட அளவிற்கு.
மலர்நீட்டம் = மலர்த்தண்டின் நீளம்.
உள்ளம் = ஊக்கம், முயற்சி.
அனையது = அளவினது.
உயர்வு = வளர்ச்சி.
“நீராழத்தின் அளவாம் மலர்த்தண்டின் நீளம். அதுபோல முயற்சியின் அளவாம் மாந்தரது வளர்ச்சி” என்பதாம்.
‘மலர்நீட்டம்’ என்னுஞ்சொல் பெயர்ப்பயனிலையாய் நின்று கருத்துமுடிவினைத்தருதிறது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘அளவினது’ என்னும் வினையெச்சம் ‘உயர்வு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது* உயர்வு .”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது
குறள் – ௫௱௯௰௬ (அச்சில் உள்ளவாறு).
“உள்ளுவ தெல்லா முயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.”
உள்ளுவது = எண்ணுவது, கருதுவது.
உயர்வு = உயர்ந்தது, மேன்மையானது.
மற்று = அசைச்சொல்.
தள்ளினும் = நிகழாவிடத்தும்.
தள்ளாமை = நிகழ்ந்தவை, நிகழ்ந்த.
நீர்த்து = தன்மையது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“எண்ணுவனவெல்லாம் மேன்மையாக எண்ணுக. எண்ணியவை நிகழாவிடத்தும் நிகழ்ந்த தன்மையன” என்பதாம்.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘தள்ளினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மை வடிவம் —
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.”
குறள் – ௫௱௯௰௭ (அச்சில் உள்ளவாறு).
“சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.”
சிதைவிடத்து = கருமம்/செயல் கெட்டவிடத்து.
ஒல்கார் = தளரார்.
உரவோர் = உறுதியுடையோர், ஊக்கமுடையோர்.
பாடு = கருமம்/செயல்.
ஊன்றும் = ஊன்றி நிற்கும்.
களிறு = யானை.
“புதையம்பில் பட்டு களிறு பாடூன்றும் பாடு சிதைவிடத்து உரவோர் ஒல்கார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘பாடு’ என்பது ஈரிடத்தும் பொருந்தும்.
“தன்னுடலில் அம்பு புதைந்தும் களிறு தனக்கு ஏவப்பட்ட கருமத்தில் ஊன்றி நிற்கும். அதுபோல கருமம் சிதைந்தவிடத்தும் ஊக்கமுடையோர்/உறுதியுடையோர் தளரார்” என்பதாம்.
‘அத்து’ என்னும் சாரியை ‘சிதைவிடம்’ என்ற பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஒல்கார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘பட்டு’ என்னும் துணைவினை அம்பிற்குரியது. ‘பாடு’ என்னும் வினை களிறுக்குரியது. வேறுவேறு வினைமுதற்குரிய வினைகள் புணரா.
‘ஊன்றும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“சிதைவிடத்து* ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுபா டூன்றும் களிறு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௯௰௮ (அச்சில் உள்ளவாறு).
“உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய மென்னுஞ் செருக்கு.”
உள்ளம் = ஊக்கம், முயற்சி.
எய்தார் = அடையார்.
வள்ளியம் = வண்மை. (வண்மை = வளம், ஈகை, குணம், மகிழ்ச்சி, அழகு, வலிமை, புகழ்).
செருக்கு = மகிழ்ச்சி.
“வள்ளியமென்னும் செருக்கு உள்ளமில்லாதவர் உலகத்து எய்தார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வண்மையுடையோமென்னும் மகிழ்ச்சியை ஊக்கமில்லாதவர் உலகத்தில் அடையார்” என்பதாம்.
‘உள்ளமில்லாதவர்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘எய்தார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘வள்ளியம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உள்ள மிலாதவர் எய்தார் உலகத்து
வள்ளிய மென்னும் செருக்கு.”
குறள் – ௫௱௯௰௯ (அச்சில் உள்ளவாறு).
“பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.”
பரியது = (உருவத்தில்) பெரியது.
கூர்ங்கோட்டது = கூரிய கொம்புகளை உடையது.
வெரூஉம் → வெருவும் = அஞ்சும்.
உறின் = உட்படின்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உருவத்தில் பெரியதும் கூரிய கொம்புகளை உடையதுமாகிய யானை புலியின் தாக்குதலுக்கு உட்படின் அஞ்சும். யானை அஞ்சுதலுக்கு காரணம் ஊக்கமின்மை” என்பதாம்.
யானையின் இருபண்புகளை பிரித்தறிய ‘ஆயினும்’ என்னும் வினையெச்சம் புணராமை வேண்டும்.
செம்மைவடிவம் —
“பரியது கூர்ங்கோட்டது* ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௬௱ (அச்சில் உள்ளவாறு).
“உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு.”
உரம் = வலிமை.
உள்ளம் = ஊக்கம், முயற்சி.
வெறுக்கை = மிகுதி.
வேறு = பிறிது.
“ஒருவர்க்கு வலிமையாவது ஊக்கமிகுதியே. அஃதில்லார் மரங்களாவர்; மக்களாகார். ஊக்கமிலார் வடித்தில் மக்கள் போல்வர்“ என்பதாம்.
‘உரம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஒருவற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘உள்ளம்’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும்பெயருடன்மட்டுமே புணரும்.
செய்யுளில் ‘வெறுக்கை’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகின்றது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செய்யுளில் ‘மரம்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருளைத்தருகின்றது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உரம் ஒருவற்கு* உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.”
* குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




