
குறள் – ௲௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு).
“செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.”
செல்லாமை = பிரிந்து செல்லாமை. மற்று = அஃதொழிந்த.
வல்வரவு = விரைந்து திரும்புதல்.
வாழ்வார்க்கு = உயிருடன் இருப்பார்க்கு.
உரை = சொல்க.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிரியாமை உண்டானால் அதனை எனக்குச்சொல்வாயாக. அஃதொழிந்து பிரிந்தபின் விரைந்து வருவதானால் அதுவரை உயிருடன் இருப்பார்க்குச்சொல்க” என்பதாம்.
‘உண்டேல்’ என்னும் வினையெச்சம் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.”
குறள் – ௲௱௫௰௨ (அச்சில் உள்ளவாறு).
“இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு.”
இன்கண்= இன்பம்.
பார்வல் = நோக்கம்.
புன்கண் = துன்பம்.
உடைத்தால் (உடைத்து+ஆல்) = உடையது. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
புணர்வு = சேர்க்கை.
“அவர்பார்வல் இன்கணுடைத்து புணர்வு பிரிவஞ்சும் புன்கணுடைத்து” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அவரது நோக்கம் இன்பத்தினை உடையது. அவரது சேர்க்கை பிரிவதற்கோ என அஞ்சும் துன்பத்தினை உடையது” என்பதாம்.
‘உடைத்து’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உடைத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘உடைத்து’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இன்க ணுடைத்து*அவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தால் புணர்வு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௫௰௩ (அச்சில் உள்ளவாறு).
“அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.”
அரிதரோ (அரிது+அரோ) = அரியது. ‘அரோ’ என்பது அசைச்சொல்.
தேற்றம் = தெளிவு, உறுதி.
பிரிவு = பிரிதல்.
ஓரிடத்து = ஏதேனும் ஒருநிலையில்.
உண்மையான் = உள்ளதால், நிகழ்வதால்.
“பிரிவு ஓரிடத்து உண்மையான் அறிவுடையார்கண்ணும் தேற்றம் அரிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவன் மனைவியை பிரிதல் ஏதேனுமொரு காரணத்தால் ஏதோவொருநிலையில் நிகழ்வதால் அறிவுடையாரும் பிரியாரென தெளிய இயலாது” என்பதாம்.
‘தேற்றம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘பிரிவு’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘பிரிவோரிடத்து’ என்னும் புணர்மொழி வினையாலணையும்பெயராகவும் மயங்கும்.
‘ஓரிடத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் சாரியை ‘ஓரிடம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு†ஓ ரிடத்து*உண்மை யான்.”
†முற்றியலுகரமாம் வுகாரம் குற்றியலுகரம்போல் அலகுபெறாது.
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௫௰௫ (அச்சில் உள்ளவாறு).
“அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு.”
அளித்து = உறுதியளித்து.
அஞ்சல் = அஞ்சாதே.
நீப்பின் = நீங்கின், பிரிந்தால்.
தெளித்த சொல் = தெளிவித்த சொல்.
தேறியார்க்கு = நம்பியவர்க்கு. உண்டோ தவறு = உளதோ குற்றம்.
“அளித்து அஞ்சலென்றவர் நீப்பின் தெளித்த சொல் தேறியார்க்கு தவறு உண்டோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உறுதியளித்து அஞ்சாதே என்றவர் பிரிந்தால் தெளிவித்த சொல்லினை நம்பியவர்க்கு குற்றம் உளதோ (இல்லை)” என்பதாம்.
‘நீப்பின்’ என்னும் செயின் என்னும் வாய்பாட்டுவினையெச்சம் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை உணர்த்தும்.
‘சொற்றேறியார்க்கு’ என்பது ‘சொல்லினை தேறியார்க்கு’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமை ‘தேறியார்க்கு’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“அளித்தஞ்ச லென்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு.”
குறள் – ௲௱௫௰௫ (அச்சில் உள்ளவாறு).
“ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு.”
ஓம்பின் = காப்பதாயின்.
அமைந்தார் = கணவர்.
ஓம்பல் = பேணாது, தடு.
மற்று = மாறாக.
நீங்கின் = பிரிந்தால்.
அரிதால் (அரிது+ஆல்) = ஆகாது, இயலாது. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
புணர்வு = சேர்தல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“என்னை காப்பதாயின் கணவர் பிரிவதைத்தடு. மாறாக அவர் பிரிந்தால் சேர்தல் ஆகாது (தன்னுயிர் தங்காது)” என்பதாம்.
‘ஓம்பின்’ என்னும் செயின் என்னும் வாய்பாட்டுவினையெச்சம் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை உணர்த்தும்.
‘மற்றவர்’ என்பது பொருண்மயங்குபுணர்ச்சி; ‘பிறர்’ என்னும் பொருளையும் தரும். புணர்ச்சியைப்பிரித்து பொருளறிவதாயின் புணர்த்த வேண்டா.
‘நீங்கின்’ என்னும் செயின் என்னும் வாய்பாட்டுவினையெச்சம் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை உணர்த்தும்.
‘அரிதால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அரிது’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்று*அவர்
நீங்கின் அரிதால் புணர்வு.”
* குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௫௰௬ (அச்சில் உள்ளவாறு).
“பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரென்னும் நசை.”
வன்கண்ணர் = வன்மையர், உறுதியாளர்.
அரிது = அரியது, அருமை.
நல்குவர் = தருவர், நிறைவேற்றுவார்.
நசை = விருப்பம்.
“பிரிவுரைக்கும் வன்கண்ணராயின் அவர் நல்குவரென்னும் நசை அரிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பிரிதலை உரைக்கும் வன்மையரானால் அவர் நமது விருப்பத்தை நிறைவேற்றுவாரென்னும் விருப்பம் நிறைவேறாது” என்பதாம்.
‘ஆயின்’ என்னும் வினையெச்சத்தையடுத்து விட்டிசைக்க காரணப்பொருளைத்தெளிய உணரலாம். விட்டிசைக்குமிடம் புணராது.
‘அரிது’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நல்குவர்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிது*அவர்
நல்குவ ரென்னும் நசை.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௫௰௭ (அச்சில் உள்ளவாறு).
“துறைவன் றுறந்தமை தூற்றாகொன் முன்கை
யிறையிறவா நின்ற வளை.”
துறைவன் = தலைவன் (கணவன்).
துறந்தமை = பிரிந்தமை.
தூற்றாகொல் = அறிவியாதோ.
முன்கையிறை = முன்கையின் வளைவு.
இறவாநின்ற = கழன்று விடுமாறு நின்ற.
வளை = வளையல்.
“துறைவன் துறந்தமை முன்கையிறையிறவாநின்ற வளை தூற்றாகொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவன் பிரிந்ததை முன்கைவளைவிலிருந்து கழன்று விடுமாறு நின்ற வளையல் அறிவியாதோ” என்பதாம்.
‘துறைவன்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘தூற்றாகொல்’ என்னும் ஐயவினாச்சொல் வினாப்பயனிலையாகும். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
யிறையிறவா நின்ற வளை.”
குறள் – ௲௱௫௰௮ (அச்சில் உள்ளவாறு).
“இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு
மின்னா தினியார்ப் பிரிவு.”
இன்னாது = துன்பமானது.
இனன் = உற்றார் உறவினர்.
இல் = இல்லாத.
இனியார் = இனியர், மனத்திற்கு இசைந்தவர்.
“இனன் இல்லூர்வாழ்தல் இன்னாது. இனியார்பிரிவு அதனினும் இன்னாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உற்றார் உறவினர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது. அதனினும் மனத்திற்கு இசைந்தவரது பிரிவு துன்பமானது” என்பதாம்.
‘இன்னாது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இனன்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘வாழ்தல்’ என்னும் தொழிற்பெயர் தனக்கு முன்னின்ற சொற்களுக்கு உறவாகும். ‘அதனினும்’ என்பது தனக்கு பின்னிற்கும் கருத்தினைச்சுட்டும். எனவே ‘வாழ்தலதனினும்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி.
‘அதனினும்‘ என்பது இறந்ததுதழீஇய எச்சவும்மை. எச்சவும்மை எதனுடனும் புணராது
‘இனியார்பிரிவு’ என்பது ‘இனியாரது பிரிவு’ எனவிரியும் ஆறாம்வேற்றுமைத்தொகை. ஆறாம்வேற்றுமைத்தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வல்லினம் மிகாது.
செம்மை வடிவம் —
“இன்னாது* இனன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னாது* இனியார் பிரிவு.”
* குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௫௰௯ (அச்சில் உள்ளவாறு).
“தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ.”
தொடின் = தொட்டால்.
சுடின் = சுடும்.
காமநோய் = காதல்நோய்.
விடின் = நீங்கின்.
ஆற்றுமோ = செய்யுமோ.
“தீ தொடின் சுடினல்லது காமநோய் போல விடின் சுடலாற்றுமோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தீ தொட்டால் சுடுவதல்லாது காதல்நோய்போல நீங்கின் சுடுமோ (சுடாது)” என்பதாம்.
‘தொடிற்சுடின்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. தொடுதல் தலைவியின் வினை. ‘சுடுதல்’ தீயின் வினை. இருவேறு வினைமுதற்குரிய வினைகள் புணரா. இதுபோன்றே ‘விடிற்சுடின்’ என்பதன்கண் விடுதல் தலைவியின் வினை. ‘சுடுதல்’ காமநோயின் வினை.
செம்மைவடிவம் —
“தொடின்சுடி னல்லது காமநோய் போல
விடின்சுட லாற்றுமோ தீ.”
குறள் – ௲௱௬௰ (அச்சில் உள்ளவாறு).
“அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.”
அரிது = செய்தற்கு இயலாதது.
ஆற்றி = பொறுத்து.
அல்லல்நோய் = துன்பந்தரும் காதல்நோய்.
நீக்கி = தவிர்த்து.
பிரிவாற்றி = பிரிவினைப்பொறுத்து.
பின்னிருந்து = பிரிவிற்குப்பின்னும் உயிருடனிருந்து.
“பொறுத்தற்கு இயலாத பிரிவினைப்பொறுத்து துன்பந்தரும் காதல்நோயைத்தவிர்த்து பிரிவிற்குப்பின்னும் உயிருடனிருந்து வாழ்பவர் பலர்” என்பதாம். தலைவி தான் வாழேன் என்றல்.
‘ஆற்றி’ என்னும் வினையெச்சம் ‘அல்லல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘நீக்கி’ என்னும் வினையெச்சம் ‘பிரிவு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஆற்றி’ என்னும் வினையெச்சம் ‘பின்’ என்னும் காலப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“அரிதாற்றி அல்லனோய் நீக்கி பிரிவாற்றி
பின்னிருந்து வாழ்வார் பலர்.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




