
குறள் – ௫௱௬௰௧ (அச்சில் உள்ளவாறு).
“வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப
மற்றைய யெல்லாம் பிற.”
வினைத்திட்பம் = வினைத்திறன்.
மனத்திட்பம் = மனத்திண்மை, மனவுறுதி.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வினைத்திண்மை என்பது ஒருவனது மனவுறுதி. வினைமுடிக்க ஏதுவான மற்றையயெல்லாம் மனவுறுதியைத்தொடர்வன” என்பதாம்.
‘என்பது’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘வினைத்திட்பம்’ என்னும் பெயரை விளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘மனத்திட்பம்’ என்பது இயல்புப்பொருள்தரும் (முற்றுப்பொருள்தரும்) பெயர்ச்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வினைத்திட்ப மென்பது* ஒருவன் மனத்திட்பம்
மற்றைய யெல்லாம் பிற.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௬௰௨ (அச்சில் உள்ளவாறு).
“ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி
னாறென்ப ராய்ந்தவர் கோள்.”
ஊறு = பழுது.
ஒரால் = நீக்கல், செய்யாமல்.
ஒல்காமை = தளராமை.
ஆறு = வழி.
கோள் = கொள்கை.
ஆராய்ந்தவர் = தெளிந்தவர்.
“வினைத்திட்பமென்பது வினைகளை பழுதுறாது செய்தலும் (முற்றறிவின்மையால்) பழுது நிகழ்ந்தக்கால் தளராமையுமாகிய இவ்விரண்டின் வழிபட்டதென்பது தெளிந்தோர்கொள்கை” என்பதாம்.
வேறுவேறு வினைகள் மயங்குமாறு புணரா; விட்டிசைத்து தம்மை வெளிப்படுத்தும். விட்டிசைக்குமிடத்தில் புணர்ச்சிநிகழாது. ஊறொரால், ஊறொற்றபின் என்பன வேறுவேறுநிலைகளாதலால் புணரா.
‘பின்’ என்னும் காலயிடைநிலை ‘உற்ற’ என்னும் வினைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
இகரச்சுட்டு வருமொழியாக புணராது.
‘இரண்டின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இரண்டு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘என்ப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்ப ஆய்ந்தவர் கோள்.”
குறள் – ௫௱௬௰௩ (அச்சில் உள்ளவாறு).
“கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி
னெற்றா விழுமந் தரும்.”
கடைகொட்க = இறுதியில் வெளிப்பட.
ஆண்மை = வினையாளுமை.
எற்றா = நீங்கா.
விழுமம் = துன்பம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“செய்யும் வினையை வினைமுடிவில் வெளிப்பட செய்வது வினையாளுமை. அவ்வாறன்றி செய்யும் வினை இடையில் வெளிப்படுதல் நீங்காத்துன்பத்தைத்தரும்” என்பதாம்.
‘கடைகொட்கின்’, ‘இடைகொட்கின்’ என்பனவற்றில் கடை, இடை என்பன பெயர்ச்சொற்கள். கொட்கின் என்பது வினையெச்சம். திரிபில்பெயர்ச்சொல் வினைச்சொல்லொடு புணராது. எனவே ககரம் மிகாது.
‘கடைகொட்க’, ‘செய்தக்கது’ என்பன வினையின் வேறுவேறுநிலைகளாம். இந்நிலைகள் வெளிப்பட இவை புணராது விட்டிசைத்து தனித்துநிற்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘ஆண்மை’ என்னும் பெயர்ச்சொல் முற்றுப்பொருளில் வருகிறது. முற்றுப்பொருள் தருமிடங்களில் புணர்ச்சி நிகழா.
காரணப்பொருளில் வந்த ‘கொட்கின்’ என்னும் எதிர்காலவினையெச்சம் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளைத்தரும்.
‘எற்றா’ என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் ‘விழுமம்’ என்னும் முடிக்குஞ்சொல்லினை அவாவும்; ‘கொட்கின்’ என்னும் வினையெச்சத்தினையன்று.
செம்மைவடிவம் —
“கடைகொட்க செய்தக்க தாண்மை இடைகொட்கின்
எற்றா விழுமந் தரும்.”
குறள் – ௫௱௬௰௪ (அச்சில் உள்ளவாறு).
“சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.”
எளிய = எளிது.
அரியவாம் = இயலாததாம்.
“சொல்லுதல் யார்க்கும் எளிய. சொல்லியவண்ணம் செயல் அரியவாம்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒரு வினையை இன்னவாறு செய்து முடிக்கலாமென்று வழிசொல்லல் எவர்க்கும் எளிதாம். சொல்லியவாறு செய்துமுடித்தல் இயலாததாம்” என்பதாம்.
‘யார்க்கும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.
‘எளிய’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அரியவாம்’ என்பதில் ‘ஆம்’ (ஆகும்) என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘வண்ணம்’ என்னும் இடைச்சொல் ‘சொல்லிய’ என்னும் வினையெச்சத்துடன் புணர்ந்து அதனைச்சிறப்பித்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.”
குறள் – ௫௱௬௰௫ (அச்சில் உள்ளவாறு).
“வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க
ணூறெய்தி யுள்ளப் படும்.”
வீறு = ஆற்றல்.
வினைத்திட்பம் = வினைத்திண்மை, வினைவுறுதி.
மாண்டார் = மாட்சியுடையார்,
உள்ளப்படும் = எண்ணப்படும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஆற்றலால் மாட்சிமையுடையாரது வினைத்திண்மை வேந்தனையடைந்து அவனால் எண்ணப்படும்” என்பதாம்.
‘வேந்தன்கண்’ என்பதில் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘வேந்தன்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஊறெய்தல்’ என்பது வினைவல்லாரின் வினைத்திறத்தின் செயல்; ‘உள்ளுதல்’ வேந்தன்செயல். இருவேறு வினைமுதல்களின் செயல்கள் புணரா.
செம்மைவடிவம் —
“வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.”
குறள் – ௫௱௬௰௬ (அச்சில் உள்ளவாறு).
“எண்ணிய யெண்ணியாங் கெய்துப யெண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.”
எண்ணியாங்கு = எண்ணியவாறு.
எய்துப = அடைவர்.
திண்ணியர் = உறுதியுள்ளவர்.
“எண்ணியர் திண்ணியராக பெறின் எண்ணிய எண்ணியாங்கு எய்துப“
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எண்ணுபவர் உறுதியுள்ளவரானால் எண்ணியதை எண்ணியவாறே அடைவர்” என்பதாம்.
‘எய்துப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எண்ணிய யெண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராக பெறின்.”
குறள் – ௫௱௬௰௭ (அச்சில் உள்ளவாறு).
“உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து.”
எள்ளாமை = இகழாமை.
அன்னார் = அத்தகையவர் (வினைத்திட்பத்தார்).
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உருவத்தைக்கண்டு இகழாமை வேண்டும். உருள்கின்ற தேர்க்கு அச்சாணிபோல், இயங்குகின்ற உலகுக்கு வினைத்திட்பத்தார்” என்பதாம்.
‘கண்டு’ என்னும் வினையெச்சம் ‘எள்ளாமை’ என்னும் தொழிற்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘வேண்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘தேர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘அச்சாணி’ என்னும் வினைசாராது இயல்புப்பொருள்தரும்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்துபொருள்தரும் பெயருடன் மட்டுமே புணரும்.
‘அச்சாணி’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மை வடிவம் —
“உருவுகண்டு* எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு*
அச்சாணி அன்னா ருடைத்து.”
*குற்றியலுகரங்களாகிய டுகரமும் குகரமும் அலகுபெறா.
குறள் – ௫௱௬௰௮ (அச்சில் உள்ளவாறு).
“கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல்.”
கலங்காது = தடுமாறாது.
கண்ட = ஆய்ந்த.
துளங்காது = தளராது.
தூக்கங்கடிந்து = காலந்தாழ்த்தாது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தெளிவாக ஆய்ந்த வினையினை தளராது காலந்தாழ்த்தாது செய்க” என்பதாம்.
‘வினைக்கண்’ என்பதில் வந்த ஏழாம்வேற்றுமைவுருபு ‘வினை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.”
குறள் – ௫௱௬௰௯ (அச்சில் உள்ளவாறு).
“துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கு வினை.”
உறவரினும் = மிகவரினும்.
துணிவாற்றி = உறுதியுடன்.
“துன்பம் உறவரினும் துணிவாற்றி இன்பம் பயக்கும் வினைசெய்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“துன்பம் மிகவரினும் உறுதியுடன் இன்பத்தை நல்கும் வினையைச்செய்க” என்பதாம்.
‘துன்பம்’ என்னும் பெயர்ச்சொல் எழுவாயாகும். திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய் எதனுடனும் புணராது.
‘வரினும்’ என்னும் வினையெச்சம் ‘துணிவு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஆற்றி’ என்னும் வினையெச்சம் ‘இன்பம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பயக்கும் வினை’ என்னும் பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான ‘வினை’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.”
குறள் – ௫௱௭௰ (அச்சில் உள்ளவாறு).
“எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.”
எனைத்திட்பம் = எவ்வகையான திறனும்.
எய்திய = பெற்றிருந்த.
வினைத்திட்பம் = வினைத்திண்மை, வினைமுடிக்கும் மனவுறுதி.
வேண்டாரை = விரும்பாரை. வேண்டாது = விரும்பாது.
“எனைத்திட்பம் எய்தியக்கண்ணும்
வினைத்திட்பம் வேண்டாரை உலகு வேண்டாது“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எவ்வகைத்திறனைப்பெற்றிருந்தாலும் வினைமுடிக்கும் மனவுறுதி இல்லாரை உலகு விரும்பாது” என்பதாம்.
‘எனைத்திட்பம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘வேண்டாது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது* உலகு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




