இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — காமத்துப்பால். இயல் — களவியல். தலைப்பு - ௱௰௨. நலம்புனைந்துரைத்தல். தலைவியின் நலத்தை தலைவன் பாராட்டிக்கூறுதல். இது புணர்ந்து மகிழ்ந்தபின் நிகழ்வது.

குறள் – ௲௱௰௧ (அச்சில் உள்ளவாறு).

“நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு
மென்னீரள் யாம்வீழ் பவள்.”

நன்னீரை = நல்லியல்புடையாய்.
வாழி = வாழ்க.
அனிச்சமே = அனிச்சம்பூவே.
நின்னினும் = உன்னினும், உன்னைவிட.
மென்னீரள் = மெல்லியல்பினள்.
வீழ்பவள் = விரும்புபவள்.

“நன்னீரை அனிச்சமே வாழி யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நல்லியல்புடையாய் அனிச்சம்பூவே வாழ்க. யான் விரும்புபவள் உன்னைவிட மெல்லியல்பினள்” என்பதாம்.

‘வாழி’ என்பது வியங்கோள்வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘நின்னினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.”

குறள் – ௲௱௰௨ (அச்சில் உள்ளவாறு).

“மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று.”

மையாத்தி = மயங்குகிறாய்.

“இவள்கண் பலர்காணும் பூவொக்குமென்று மலர்காணின் நெஞ்சே மையாத்தி” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“இவளது கண் பலரும் காணும் பூக்களை ஒத்திருக்கின்றனயென்று மலர்களைக்காணும்போது நெஞ்சே மயங்குகிறாய்” என்பதாம்.

‘நெஞ்சே’ என்னும் விளியையடுத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது.

செம்மைவடிவம் —
“மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று.”

 

குறள் – ௲௱௰௩ (அச்சில் உள்ளவாறு).

“முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.”

மேனி = உடம்பு.
முறி = தளிர்போல் மென்மை.
முத்தம் = முத்து.
முறுவல் = பல்.
நாற்றம் = மணம்.
வெறி = நறுமணம்.
உண்கண் = மைதீட்டிய கண்.
வேய் = பருத்த மூங்கில்.
அவட்கு = அவளுக்கு.

“அவட்கு மேனி முறி முறுவல் முத்தம் நாற்றம் வெறி உண்கண் வேல் தோள் வேய்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அவளுக்கு உடம்பு தளிரின் மென்மை, பல் முத்தின் வெண்மை, மணம் நறுமணம், மைதீட்டிய கண் வேல், தோள் பருத்த மூங்கில்” என்பதாம்.

‘முத்தம் (முத்து)’, ‘வேல்’, ‘வேய்’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் எதனுடனும் புணரா.

‘அவள்’ ‌என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாக புணராது தனித்துநின்று சுட்டினை உணர்த்தும்.

செம்மைவடிவம் —
“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உண்கண் வேய்தோள் அவட்கு.”

 

குறள் – ௲௱௰௪ (அச்சில் உள்ளவாறு).

“காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
மாணிழை கண்ணொவ்வே மென்று.”

காணின் = கண்டால்.
குவளை= குவளைமலர்.
கவிழ்ந்து = தலைகுனிந்து.
நிலனோக்கும் = நிலத்தை நோக்கும்.
மாணிழை = மாண்பமைந்த அணிகலன்களை அணிந்தவள்.
ஒவ்வேம் = ஒப்பாகேம்.

“குவளை மாணிழைகண்காணின் ஒவ்வேமென்று கவிழ்ந்து நிலனோக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மாண்பமைந்த அணிகலன்களை அணிந்த இவளது கண்களை குவளைமலர் கண்டால் தான் ஒப்பாகேமென்று தலைகுனிந்து நிலத்தை நோக்கும்” என்பதாம்.

‘காணின்’ என்னும் வினையெச்சம் ‘குவளை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘நோக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று.”

 

குறள் – ௲௱௰௫ (அச்சில் உள்ளவாறு).

“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.”

கால் = காம்பு .
களையாள் = நீக்காள்.
பெய்தாள் = சூடினாள்.
நுசுப்பிற்கு = இடைக்கு.
நல்ல = மங்கல.
படாஅ → படா = இசைக்கா, ஒலியா.
பறை = இசை.

“அனிச்சப்பூகால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்லபறை படாஅ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அனிச்சப்பூவின் காம்பினை நீக்காமல் சூடினாள். இனி இவளது இடைக்கு மங்கலயிசை ஒலிக்காது. பூக்காம்பின் சுமைதாங்காது ‌இடையொடிந்து மாய்வாளோ” என்பதாம்.

‘பெய்தாள்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.”

 

குறள் – ௲௱௰௬ (அச்சில் உள்ளவாறு).

“மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.”

மதியும் = நிலவும்.
மடந்தை முகனும் = பெண்ணின் முகமும்.
அறியா = வேறுபாடறியா.
பதியில் = நிலையில், இயங்குவதில்.
கலங்கிய = குழம்பியலைந்தன.
மீன் = விண்மீன், உடு.

“மதியும் மடந்தைமுகனும் அறியா (விண்)மீன் பதியில் கலங்கிய” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நிலவு இதுவென பெண்ணின் முகம் இதுவென வேறுபடுத்தி அறிய முடியாத விண்மீன்கள் தமது இயக்கத்தில் குழம்பியலைந்தன” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. எனவே இறுதியெண்ணும்மையான ’முகனும்’ என்பது புணராது.

‘பதியில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பதி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“மதியு மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன்.”

 

குறள் – ௲௱௰௭ (அச்சில் உள்ளவாறு).

“அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.”

அறுவாய் = குறையிடம்.
அவிர்மதி = ஒளியுடைய நிலவு.
மறு = களங்கம், குற்றம்.

“அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப்போல மாதர் முகத்து மறுவுண்டோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எப்போதும் முழுநிலவாக இல்லாமல் குறைதல் நிறைந்த ஒளியுடைநிலவுக்கு உள்ளதுபோன்ற களங்கம் இப்பெண்முகத்தில் உண்டோ; இல்லை” என்பதாம்.

‘நிறைந்த அவிர்மதி’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.”

 

குறள் – ௲௱௰௮ (அச்சில் உள்ளவாறு).
“மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
காதலை வாழி மதி.”

மாதர் = இப்பெண், தலைவி.
வல்லையேல் = திறன்பெற்றால்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

‘போல’ என்னும் உவமவுருபு ‘முகம்’ என்னும் பெயருடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘வல்லையேல்’ என்னும் வினையெச்சம் ‘காதல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

“இப்பெண்ணின் முகத்தைப்போல ஒளிரும் திறன்பெற்றால் மதியே எம்மால் காதலிக்கப்படுவாய்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.”

 

குறள் – ௲௱௰௯ (அச்சில் உள்ளவாறு).

“மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றன் மதி.”

அன்ன = போன்ற.
கண்ணாள் = கண்ணினை உடையாள்.
ஒத்தியாயின் = ஒப்பாயானால், ஒத்திருப்பின்.
தோன்றல் = தோன்றாதே.
மதி = நிலவு.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மலர்போன்ற கண்ணுடையாளின் (தலைவியின்) முகத்தை ஒத்திருப்பின் நிலவே நீ பலரும் காணுமாறு தோன்றாதே. (நான் காணுமாறுமட்டும் தோன்று)” என்பதாம்.

‘ஆயின்’ என்னும் வினையெச்சம் ‘பலர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘தோன்றல்’ என்பது அல்லீற்று எதிர்மறைவியங்கோள்வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.”

 

குறள் – ௲௱௨௰ (அச்சில் உள்ளவாறு).

“அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.”

அனிச்சமும் = அனிச்சம்பூவும்.
தூவியும் = பறவையிறகும்.
நெருஞ்சிப்பழம் = நெருஞ்சிமுள் என்பது கருத்து.
அடி = காலடி.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“அனிச்சம்பூவும் அன்னப்பறவையினது இறகும் இப்பெண்ணினது காலடிகளுக்கு நெருஞ்சிமுள்ளாக துன்பந்தரும்” என்பதாம்.

எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘தூவியும்’ என்பது புணராது.

செம்மைவடிவம் —
“அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.”

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button