இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௭௰௪. நாடு.

குறள் – ௭௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு).

“தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.”

தள்ளா விளையுளும் = குன்றாத விளைபொருளும்.
தக்காரும் = தகுதியுள்ள பெரியோரும்.
தாழ்விலா = கேடில்லா.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“குன்றாத விளைபொருளும் தகுதியுள்ள பெரியோரும் கேடில்லா செல்வமுடையாரும் சேர்ந்திருப்பது நாடு” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் பொருள்மயங்குமாறு புணரா. ‘தள்ளாவிளையுளுந்’ என்பதன்கண் வந்த புணர்ச்சியில் ஈற்றுமகரம் நகரமெய்யாகியுள்ளது. புணர்மொழிகள் தொடர்ந்தொலிக்குமென்பதால் செய்யுளில் புணர்த்தியவாறு ஒலித்தால் ஆறாஞ்சீர்முடிவில்தான் விட்டிசைக்கவேண்டும். புணர்மொழிகள் புணர்ந்தநிலையில் ஒருசொன்னீர்மையில் தொடர்ந்தொலிக்கும், பொருள்படும். அவ்வாறாயின் அறுசீர்சொல்லின் பொருள் யாது. ‘தள்ளாவிளையுளுந்’ என்பதை நகரமெய்யை ஒலித்தே பொருளுணரவேண்டும். ‘விளையுளுந்’ என்னுஞ்சொல் தமிழ்மொழியில் இல்லை. நகரத்தை‌ மகரமாக்கி பொருளுணர்வதாயின் புணர்ச்சியின் பயன் யாது. நகரத்தை மகரமாக ஒலிக்கவும் பொருளுணரவும் தமிழ்மொழியில் இடமில்லை.

‘தாழ்விலாச்செல்வரும்’ என்னும் இறுதியெண்ணும்மை புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.”

 

குறள் – ௭௱௩௰௨ (அச்சில் உள்ளவாறு).

“பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா
லாற்ற விளைவது நாடு.”

பெரும்பொருள் = அளவிறந்த பொருள்.
பெட்டகத்து → பெள் தக்கது = விரும்பத்தக்கது.
அருங்கேட்டால் = கேடின்மையால்.
அரும் → அருமை = இன்மை.
கேடரும் என்பது முறைமாறி அருங்கேடு எனவந்தது.
ஆற்ற = மிகுந்த.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“அளவிறந்த பொருளுடைமையால் விரும்பத்தக்கதாகி கேடில்லாமல் மிகுதியாக விளைவது நாடு” என்பதாம். கேடுகளாவன — மிகுமழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, பகையரசுகள் சூழ்ந்திருப்பது முதலியன.

‘பெரும்பொருளால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘பொருள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஆகி’ என்னும் உருவகயிடைச்சொல் ‘பெள் தக்கது’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அருங்கேட்டால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘கேடு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.”

 

குறள் – ௭௱௩௰௩ (அச்சில் உள்ளவாறு).

“பொறையொருங்கு‌ மேல்வருங்காற் றாங்கி யிறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு.”

பொறை = சுமை, துன்பம்.
பொறையொருங்கு = துன்பங்கள் கூடி.
தாங்கி = காத்து.
இறைவற்கு = அரசர்க்கு.
இறை = குடிகள் செலுத்தும் வரி.
இறையொருங்கு = வரிகளை முழுவதும்.
நேர்வது = கொடுப்பது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“துன்பங்கள் பல வந்தபோதும் அவற்றைத்தாங்கி அரசர்க்கு செலுத்தும் வரிகளை முழுவதும் செலுத்துவது நாடு” என்பதாம். குடிமக்கள்செயல் நாட்டின்மேல் ஏற்றிக்கூறப்பட்டது.

‘வருங்கால்’ என்பதன்கண் வந்த ‘கால்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘வருதல்’ என்னும் தொழிற்பெயரொடு கூடி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தாங்கி’ என்னும் வினையெச்சம் ‘இறை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘இறைவற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற பெயர்ச்சொல் ‘இறை’ என்னும் வினையைச்சாராது பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“பொறையொருங்கு‌ மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு*
இறையொருங்கு நேர்வது நாடு.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௭௱௩௰௪ (அச்சில் உள்ளவாறு).

“உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.”

உறுபசி = கடும்பசி.
ஓவாப்பிணி = தீரா நோய்.
செறுபகை = பெரும் பகை.
சேராது = இல்லாது.
இயல்வது = இயங்குவது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கடும்பசியும் தீரா நோயும் பெரும் பகையும் இல்லாது இயங்குவது நாடு” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணருமாயினும் பிரித்து பொருளுணர்வதாயின் புணரா. ‘உறுபசியுமோவாப்பிணியும்’ என்ற புணர்மொழியில் புணர்ச்சியைப்பிரிக்காது ‘உறுபசியும்’ என்பதை அறிய முடியாது. பிரித்து பொருளறிவதாயின் புணர்த்த வேண்டா. இறுதியெண்ணும்மை எதனுடனும் புணராதென்பதால் ‘செறுபகையும்’ என்பது புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“உறுபசியும் ஓவாப் பிணியுஞ் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.”

 

குறள் – ௭௱௩௰௫ (அச்சில் உள்ளவாறு).

“பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குஞ்
கொல்குறும்பு மில்லது நாடு.”

பாழ் = ஒன்றுமில்லாதது.
குறும்பும் → குறும்பரும் = கீழ்க்குடிமக்களும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“மாறுபட்ட கருத்துகளை உடைய பல குழுக்களும், ஒன்றுமில்லாததாக செய்யும் உட்பகையும், வேந்தனை அலைக்கழித்துக்கொல்லும் கீழ்க்குடிமக்களும் இல்லாதது நாடு” என்பதாம். உட்பகையாவன வழிப்பறிசெய்வார், கள்வர், கோள்கூறுவார் முதலிய மக்களும், பன்றி, புலி, கரடி முதலிய விலங்குகளும். உட்பகை, குறும்பு என்பன ஆகுபெயர்.

எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘வேந்தலைக்குங்கொல்குறும்பும்’ என்பது புணராது தனித்துநிற்கும்.

‘பாழ்செய்யுமுட்பகையும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநின்று ‘பாழ்செய்யும் உட்பகையும்’ என்றாகும்.

செம்மைவடிவம் —
“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பும் இல்லது நாடு.”

 

குறள் – ௭௱௩௰௬ (அச்சில் உள்ளவாறு).

“கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை.”

கேடு = கெடுதல்.

“கேடறியா கெட்டவிடத்தும் வளங்குன்றா நாடு நாட்டின் தலை
என்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கெடுதலை அறியாத, அரிதாக கெடுதலுற்றவிடத்தும் மீண்டெழும் குன்றாத வளமுள்ள நாட்டினை நாடுகளுள் தலைசிறந்த நாடென்பர்” என்பதாம்.

‘கேடறியா’ என்பதும் ‘கெட்டவிடத்தும்’ என்பதும் இருவேறு நிலைகள். வேறுவேறு நிலைகள் தம்முள் புணராது தனித்துநின்று தத்தம் பொருளை உணர்த்தும்.

‘நாட்டின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைப்பொருளில் வந்த வேற்றுமைவுருபு ‘நாடு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கேடறியா கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.”

 

குறள் – ௭௱௩௰௭ (அச்சில் உள்ளவாறு).

“இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு.”

இருபுனல் = நிலத்தடி நீர், மழைநீர்.
வாய்த்த மலை = வளமிகு மலை. வருபுனல் = மலையிலிருந்து வரும் ஆறு.
வல்லரண் = வலிமையான காவல்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நிலத்தடி நீரும் மழைநீருமாகிய இருவகை நீரும், வளமிக்க மலைகளும் மலைகளிலிருந்து இழியும் ஆறுகளும், வலிமைமிக்க காவலும் நாட்டின் உறுப்புகள்” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘வல்லரணும்’ என்பது எதனுடனும் புணராது தனித்துநிற்கும்.

‘நாட்டிற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘உறுப்பு’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு* உறுப்பு.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௭௱௩௰௮ (அச்சில் உள்ளவாறு).

“பிணியின்மை செல்வம் விளவின்ப மேம
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.”

விளைவு = விளைபொருள்கள்.
ஏமம் = காவல்.
அணி = அழகு.

“பிணியின்மை செல்வம் விளவு இன்பம் ஏமம் இவ்வைந்து நாட்டிற்கு அணியென்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் இவ்வைந்தும் நாட்டிற்கு ‌அணி என்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘விளைவின்பம்’ என்பது பொருள் மயங்குபுணர்ச்சி. ‘விளைவால் பெறப்படும் இன்பம்’ எனவும் பொருள் மயங்கும்.

‘இன்பமேமம்’ என்பது பொருள் மயங்குபுணர்ச்சி. ‘இன்பத்திற்கு ஏமம்’ எனவும் பொருள் மயங்கும்.

இகரச்சுட்டு ‘ஐந்து’ என்னும் எண்ணுப்பெயர்க்கானது. இது நாட்டிற்கு என்னுஞ்சொல்லுடன் புணராது. தழுவுஞ்சொற்களே புணரும்.

செம்மைவடிவம் —
“பிணியின்மை செல்வம் விளவு*இன்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கு†இவ் வைந்து.”

*முற்றியலுகரமாம் வுகாரம் குற்றியலுகரமாந்தன்மையில் அலகுபெறாது.

†குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௭௱௩௰௯ (அச்சில் உள்ளவாறு).

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.”

நாடா = பிறநாடுகளைச்சாராது.
நாட = சார்ந்து.
நாடா வளத்தன = தன்னிறைவான வளங்கள்.

“நாடா வளத்தன நாடென்ப. நாட வளந்தரு நாடு நாடல்ல” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிறநாடுகளை நாடாமல் தன்னகத்தே வேண்டிய வளங்களைக்கொண்டவை நாடு என்படும். பிறநாடுகளை நாடி தனக்கு வேண்டிய வளங்களைப்பெறுவது நாடன்று” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௭௱௪௰ (அச்சில் உள்ளவாறு).

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.”

ஆங்கமைவு = அவ்வாறு அமைதல்.
பயன் என்பதன் ஈற்றுப்போலி பயம். பயமின்றே = பயனின்றே.
வேந்தமைவு = அமைவுபெற்ற வேந்தன், நல்லரசன்.

“ஆங்கமைவு எய்தியக்கண்ணும்
வேந்தமைவு இல்லாத நாடு பயமின்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நாடு என்னும் அதிகாரத்தில் கூறப்பட்ட அமைவுகள் எய்தியக்கண்ணும் நல்லரசன் இல்லாத நாடு பயனின்றே” என்பதாம்.

‘ஆங்கமைவு’ என்னும் பெயருடன் ‘எய்திய’ என்னும் வினையெச்சம் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘வேந்தமைவு’ என்னும் பெயருடன் ‘இல்லாத’ என்னும் பெயரெச்சம் புணராது. பெயரெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஆங்கமைவு* எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு* இல்லாத நாடு.”

*முற்றியலுகரமாம் வுகாரம் குற்றியலுகரமாந்தன்மையில் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button