
குறள் – ௲௨௱௫௰௧ (அச்சில் உள்ளவாறு).
“காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.”
காமக்கணிச்சி = காதலாகிய கோடரி.
உடைக்கும் = பிளக்கும்.
நிறை = மறைபிறர் அறியாமை.
நாணுத்தாழ் = நாணமாகிய தாழ்ப்பாள்.
வீழ்த்த = கோத்த, பூட்டிய. .
“நாணுத்தாழ் வீழ்த்த நிறையென்னும் கதவு காமக்கணிச்சி உடைக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நாணமென்னும் தாழ் பூட்டிய நிறையென்னும் கதவினை காதலாகிய கோடரி பிளக்கும்” என்பதாம்.
‘காமக்கணிச்சி’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நிறை’ என்ற பெயருடன் புணர்ந்து அதன்முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.”
குறள் – ௲௨௱௫௰௨ (அச்சில் உள்ளவாறு).
“காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை
யாமத்து மாளுந் தொழில்.”
காமம் = காதல்.
எனவொன்றோ = என்னும் ஒன்று. ‘ஓ’ என்பது அசைநிலை.
கண்ணின்று (கண்+இன்று) = கண்ணோட்டம் இல்லாது, இரக்கம் இல்லாது.
யாமத்தும் = நள்ளிரவிலும்.
தொழில் = செயல்.
“யாமத்தும் என்னெஞ்சத்தை ஆளும் காமமென தொழிலொன்று கண் இன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நள்ளிரவிலும் எனது நெஞ்சத்தை ஆளும் காதலென்னும் செயலொன்று இரக்கம் இல்லாதது” என்பதாம்.
‘இன்று (இல்லாதது)’ என்பது எதிர்மறைக்குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘யாமத்தும்’ என்ன்மு இறந்தது தழீஇய எச்சவும்மைச்சொல் புணரின் எச்சவும்மைச்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.
‘ஆளும் தொழில்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“காம மெனவொன்றோ கண்ணின்று*என் னெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.”
குறள் – ௲௨௱௫௰௩ (அச்சில் உள்ளவாறு).
“மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போற் றோன்றி விடும்.”
மறைப்பேன்மன் = மறைப்பேன். மறைக்கேன் என்னும் ஒழியிசைப்பொருளை ‘மன்’ என்னும் அசைச்சொல் தந்தது.
காமத்தை = காதலை.
யானோ = யான். ஓகாரம் இரக்கக்குறிப்பில் வந்தது.
குறிப்பின்றி = அறிவிப்பின்றி, திடுமென.
தோன்றிவிடும் = வெளிப்பட்டுவிடும்.
“யானோ காமத்தை மறைப்பேன்மன் குறிப்பின்றி தும்மல்போல் தோன்றிவிடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“யான் காதலை மறைப்பேன் அதுவோ அறிகுறியின்றி தோன்றும் தும்மல் போல வெளிப்பட்டுவிடும்” என்பதாம்.
‘மன்’ என்னும் ஒழியிசையிடைச்சொல் ‘மறப்பேன்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து ‘மறக்கேன்’ என்னும் ஒழியிசைப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இன்றி’ என்னும் குறிப்புவினையெச்சம் ‘தும்மல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘போல்’ என்னும் உவமவுருபு ‘தும்மல்’ என்னும் பெயரைச்சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மை வடிவம் —
“மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றி
தும்மல்போல் தோன்றி விடும்.”
குறள் – ௲௨௱௫௰௪ (அச்சில் உள்ளவாறு).
“நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம
மறையிறந்து மன்று படும்.”
நிறை = மறைபிறர் அறியாமை.
என்பேன்மன் = என்பேன். ‘மன்’ என்னும் ஒழியிசையிடைச்சொல் ‘எனேன்’ என்னும் பொருள்தந்தது.
யானோ = யான். ஓகாரம் இரக்கக்குறிப்பில் வந்தது.
என்காமம் = எனது காதல்.
மறையிறந்து = மறைவுநீங்கி.
மன்றுபடும் = பலருமறிய பொதுவில் வெளிப்படும்.
“யானோ நிறையுடையன் என்பேன்மன் என்காமம் மறையிறந்து மன்றுபடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“யான் மறைத்ததை பிறர் அறியாரென்பேன். அவ்வாறன்றி எனது காதல் மறைவுநீங்கி பலருமறிய பொதுவில் வெளிப்படும்” என்பதாம்.
‘யானோ’ என்பதன்கண் வந்த ஓகார இரக்கக்குறிப்புச்சொல் ‘யான்’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘காமம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நிறையுடையே னென்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.”
குறள் – ௲௨௱௫௰௫ (அச்சில் உள்ளவாறு).
“செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றா ரறிவதொன் றன்று.”
செற்றார்பின் = நீங்கி சென்றவர்பின்.
பெருந்தகைமை = பண்புடைமை.
காமநோய் = காதலாகிய துன்பம்.
உற்றார் = அடைந்தார்.
அறிவதொன்றன்று = அறியும் ஒன்று ஆகாது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தம்மை நீங்கி சென்றவர்பின் தாமும் செல்லாப்பண்புடைமை காதலாகிய துன்பத்தை அடைந்தாரறியும் ஒன்று ஆகாது” என்பதாம்.
‘காமநோயுற்றார்’ என்பது தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘அறிவது’ என்னும் வினையெச்சம் ஒன்று’‘ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றார் அறிவது*ஒன் றன்று.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௱௫௰௬ (அச்சில் உள்ளவாறு).
“செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்.”
செற்றவர்பின்= நீங்கி சென்றவர்பின். சேறல் வேண்டி = செல்லும் நிலையை.
அளித்தரோ (அளித்து+அரோ) = கொடுத்து ஐயகோ.
எற்று = எத்தன்மையது.
என்னையுற்ற துயர் = என்னை அடைந்த துன்பம்.
“செற்றவர்பின் சேறல் வேண்டி அளித்து அரோ என்னை உற்ற துயர் எற்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நீங்கி சென்றவர்பின் செல்லும் நிலையை அளித்து ஐயகோ என்னை அடைந்த துன்பம் எத்தன்மையது” என்பதாம்.
‘அரோ’ என்னும் ‘இரக்கக்குறிப்பிடைச்சொல்’ அளித்து என்னும் வினையெச்சத்துடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘எற்று’ என்னும் வினாச்சொல் புணரின் வினாப்பொருட்செறிவு குன்றும். வினா புணராது தனித்துநின்று தனது வினாப்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்று*என்னை யுற்ற துயர்.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௱௫௰௭ (அச்சில் உள்ளவாறு).
“நாணென வொன்றோ வறியலங் காமத்தாற்
பேணியார் பெட்ப செயின்.”
நாணென = நாணமென.
ஒன்றோ = ஒன்று (ஈண்டு ‘சற்றும்’ என்னும் பொருளது). ஓகாரம் அசைநிலை.
அறியலம் = அறியோம்.
காமத்தால் = காதலால்.
பேணியார் = விரும்பியவர்.
பெட்ப = விரும்புமாறு.
செயின் = செய்தால்.
“காமத்தால் பேணியார் பெட்ப செயின் நாணென ஒன்றோ அறியலம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காதலால் விரும்பியவர் விரும்புமாறு செய்தால் நாணத்தை சற்றும் அறியோம்” என்பதாம்.
‘நாணென’ என்பதன்கண் வந்த ‘என’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘நாண்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஒன்றோ’ என்பதன்கண் வந்த ஓகார அசைநிலை ‘ஒன்று’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அறியலம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘காமத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘காமம்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.”
குறள் – ௲௨௱௫௰௮ (அச்சில் உள்ளவாறு).
“பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.”
பன்மாயக்கள்வன் = பல்வகைநடிப்பு வல்ல கள்வன் (கணவர்).
பணிமொழி = பணிவுடைய சொற்கள்.
பெண்மை = நிறையென்னும் காவல். உடைக்கும் = அழிக்கும்.
படை = படையணி.
“நம்பெண்மையுடைக்கும் படை பன்மாயக்கள்வன்பணிமொழி அன்றோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எமது நிறையென்னும் காவலை அழிக்கும் படையணி பல்வகைநடிப்பு வல்ல கள்வனது (கணவரது) பணிவுடைய சொற்கள். அன்றோ” என்பதாம்.
‘அன்றோ’ என்னும் ஐயவியப்புச்சொல் வருமொழியாகி புணராது.
செம்மைவடிவம் —
“பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.”
குறள் – ௲௨௱௫௰௯ (அச்சில் உள்ளவாறு).
“புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்த லுறுவது கண்டு.”
புலப்பல் = ஊடுவேன், பிணங்குவேன்.
புல்லினேன் = தழுவினேன்.
கலத்தல் = ஒன்றுபடுதல்.
உறுவது = அடைவது.
“புலப்பலென சென்றேன் நெஞ்சம்
கலத்தலுறுவது கண்டு புல்லினேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பிணங்குவேனென சென்றேன். நெஞ்சம் ஒன்றுபடுதலைக்கண்டு தழுவினேன்” என்பதாம்.
‘புலப்பலென’ என்பதன்கண் வந்த ‘என’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘புலப்பல்’ என்னும் தன்மையொருமைவினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘புல்லினேன்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நெஞ்சம்’ என்பது எழுவாயாகும் இயல்புப்பொருள்தரும் சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மை வடிவம் —
“புலப்ப லெனசென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்த லுறுவது கண்டு.”
குறள் – ௲௨௱௬௰ (அச்சில் உள்ளவாறு).
“நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பே மெனல்.”
நிணம் = கொழுப்பு.
அன்ன = போன்ற.
ஊடி = பிணங்கி.
எனல் = என்பது.
“நிணந்தீயிலிட்டன்ன நெஞ்சினார்க்கு புணர்ந்து ஊடி நிற்பேமெனல் உண்டோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கொழுப்பை தீயிலிட்டது போன்ற உருகும் நெஞ்சுடையார்க்கு (மனையாளுக்கு) கலந்தபின் பிணங்கி நிற்பேனென்பது உண்டோ. இல்லை” என்பதாம்.
‘உண்டோ’ என்னும் வினாச்சொல் முன்பின் புணராது தனித்துநின்று தனது வினாப்பொருளை உணர்த்தும்.
புணர்ந்து, ஊடி என்பன காலயிடைவெளியில் நடப்பன. இவை புணராது பிரிந்துநின்று பொருள்தரும்.
செம்மைவடிவம் —
“நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க்கு* உண்டோ
புணர்ந்து*ஊடி நிற்பே மெனல்.”
*குற்றியலுகரங்களாகிய குகரமும் துகரமும் அலகுபெறா.
தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




