இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — காமத்துப்பால். இயல் — கற்பியல். தலைப்பு - ௱௰௯. பசப்புறுபருவரல். பசப்பு = பசலைநிறம். பருவரல் = துன்பம், வருத்தம். பிரிவாற்றாமையால் மனையாளின் மேனியில் பசலையென்னும் நிறவேறுபாடு தோன்றுவதால் வரும் வருத்தம்.

குறள் – ௲௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு).

“நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு ரைக்கோ பிற.”

நயந்நவர்க்கு = விரும்பியவர்க்கு.
நல்காமை = சொல்லாமை.
பசந்த = பசலையுற்ற.
பண்பு= தன்மை.
உரைக்கோ = சொல்வதோ.
பிற = அசைச்சொல்

“பசந்த என்பண்பு நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பிற யார்க்கு உரைக்கோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிரிவால் எனதுமேனி பசலையுற்ற தன்மையை என்னை விரும்பியவர்க்குச்சொல்ல இயலவில்லை. மற்று யார்க்கு சொல்வதோ” என்பதாம்.

‘பசந்த’ என்னும் பெயரெச்சம் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்
பண்பியார்க்கு ரைக்கோ பிற.”

 

குறள் – ௲௱௮௰௨ (அச்சில் உள்ளவாறு).

“அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென்
மேனிமே லூரும் பசப்பு.”

அவர் = கணவர்.
தகை = தகுதி, பெருமை.
இவர்தந்து → இவர்ந்து = உடம்பெல்லாம்.
மேனி = உடம்பு.
ஊரும் = பரவும், படரும்.
பசப்பு = பசலைநிறம்.

“அவர் தந்தாரென்னும் தகையால் இவர்தந்து என்மேனிமேல் பசப்பு ஊரும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கணவர் தந்தாரென்னும் தகுதியால் எனது உடம்பின்மேல் பசலைநிறம் படரும்” என்பதாம்.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘தந்தார்’ என்ற வினையாலணையும்பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தகையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘தகை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘தந்து’ என்னும் வினையெச்சம் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘மேனிமேல்’ என்பதன்கண் வந்த ‘மேல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘மேனி’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அவர்தந்தா ரென்னும் தகையால் இவர்தந்து*என்
மேனிமேல் ஊரும் பசப்பு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௱௮௰௩ (அச்சில் உள்ளவாறு).

“சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து.”

சாயலும் = மேனியழகையும்.
நாணும் = நாணத்தையும்.
அவர் = கணவர்.
கைம்மாறா → கைம்மாறாக = மாற்றாக, எதிரீடாக.
நோய் = துன்பம்.
பசலை = பசப்பு, மேனி வெளுத்து நிறம் மாறுதல் (பீர்க்கம்பூ நிறம்).

“நோயும் பசலையும் தந்து கைம்மாறா சாயலும் நாணும் அவர் கொண்டார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“துன்பத்தையும் மேனி வெளுத்து நிறம்மாறும் பசலையையும் எனக்குத்தந்து எனது மேனியழகையும் நாணத்தையும் அவர் கொண்டார்” என்பதாம்.

எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘நாணும்’ என்பது புணராது.

எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘பசலையும்’ என்பது புணராது.

செம்மைவடிவம் —
“சாயலு நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.”

 

குறள் – ௲௱௮௰௪ (அச்சில் உள்ளவாறு).

“உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற்
கள்ளம் பிறவோ பசப்பு.”

உள்ளுவன் = நினைப்பன்.
மன் = மிகுதியும்.
அவர் = கணவர்.
திறமால் → திறம் = பண்பு. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
கள்ளம் = வஞ்சனை.
பிறவோ = வேறோ, மற்றவையோ.
பசப்பு = பசலைநோய்.

“உள்ளுவன்மன் யானுரைப்பது அவர்திறமால் பசப்பு கள்ளம் பிறவோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மிகுதியாக நினைப்பதும் பேசுவதும் கணவரது பண்புகளையே. அவ்வாறிருக்க காரணமில்லாமல் வந்த பசலை வஞ்சனையோ வேறோ” என்பதாம்.

‘யான்’ என்பது எழுவாயாகும் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

‘உரைப்பது’ என்னும் வினையெச்சம் ‘அவர்’ என்னும் சுட்டுப்பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘திறமால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘திறம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“உள்ளுவன் மன்யான் உரைப்பது* அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௱௮௰௫ (அச்சில் உள்ளவாறு).

“உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென்
மேனி பசப்பூர் வது.”

உவக்காண் = உங்கே. ‘காண்’ என்பது முன்னிலையசைச்சொல். உகரம் அண்மைக்கும் சேய்மைக்கும் இடைப்பட்ட நிலையைச்சுட்டும் இடைச்சட்டு. சிறுதொலைவென்பது பொருள்.
காதலர் = அன்பிற்குரியர்.
இவக்காண் = இங்கே. ‘காண்’ என்பது முன்னிலையசைச்சொல்.
பசப்பூர்வது = பசலையடைவது.

“எனது அன்பிற்குரியர் சிறுதொலைவே செல்கிறார்காண். இங்கே என்மேனி பசலைநிறமடைவதைக்காண்” என்பதாம்.

‘உவக்காண்’ என்பதன்கண் வந்த காண் என்னும் முன்னிலையசைச்சொல் உகரச்சுட்டுச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘செல்வார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘இவக்காண்’ என்பதன்கண் வந்த காண் என்னும் முன்னிலையசைச்சொல் இகரச்சுட்டுச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“உவக்காண்எங் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.”

 

குறள் – ௲௱௮௰௬ (அச்சில் உள்ளவாறு).

“விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.”

அற்றம் = மெலிதல், அணைதல்.
கொண்கன் = கணவன்.
முயக்கற்றம் = தழுவலை நீங்கல், புணர்ச்சியை நீங்கல்.
பசப்பு = பசலைநோய்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“விளக்கு அணைவதற்கு காத்திருந்து பரவும் இருள் போன்றே கணவனின் தழுவல் நீங்க காத்திருந்து படரும் பசலைநோய்” என்பதாம்.

‘பார்க்கும் இருள்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

‘போல்’ என்னும் உவமவுருபு ‘இருள்’ என்னும் பெயரைச்சார்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.”

 

குறள் – ௲௱௮௰௭ (அச்சில் உள்ளவாறு).

“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி
லள்ளிக்கொள் வற்றே பசப்பு.”

புல்லி = தழுவி.
புடைபெயர்ந்தேன் = நீங்கினேன்.
அவ்வளவில் = அந்த இடைப்பொழுதில்.
அள்ளிக்கொள்வ(து) = முழுதும் ஆட்கொள்வது. ‘கொள்வது’ என்பது கடைக்குறைந்து வந்தது.
அற்றே = போன்றே
பசப்பு = பசலைநோய்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தழுவிக்கிடந்தேன். சற்றே நீங்கினேன். அந்த இடைப்பொழுதில் முழுதும் ஆட்கொள்வது போன்றே பசலைநோய் வந்து செறிந்தது” என்பதாம்.

‘புடைபெயர்ந்தேன்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அவ்வளவில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அளவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.”

 

குறள் – ௲௱௮௰௮ (அச்சில் உள்ளவாறு).

“பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்
துறந்தா ரவரென்பா ரில்.”

பசந்தாள் = பசலைநோயுற்றாள்.
அல்லால் = அல்லது.
துறந்தார் = நீங்கினார்.
அவர் = கணவர்.
இல் = இல்லை.

“இவள் பசந்தாளென்பது அல்லால் இவளை அவர் துறந்தாரென்பார் இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“இவள் பிரிவால் பசலைநோயுற்றாளென சொல்வதல்லது இவளை கணவர் நீங்கினாரென சொல்வார் இல்லை” என்பதாம்.

‘பசந்தாள்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘இவள்’ என்பது எழுவாயாகுதம் சுட்டுப்பெயர். எழுவாய் எதனுடனும் புணராது.

‘என்பது’ என்ற விளக்கயிடைச்சொல் கொண்டுகூட்டில் ‘பசந்தாள்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘இவளை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘துரந்தார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘அவர்’ என்பது எழுவாயாகும் சுட்டுப்பெயர். எழுவாய் எதனுடனும் புணராது.

கொண்டகூட்டில் ‘என்பார்’ என்னும் வினைமுற்று துறந்தார் என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து வினையாலணையும்பெயராகி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“பசந்தாள் இவள்என்பது* அல்லால் இவளை
துறந்தார் அவர்என்பார் இல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௱௮௰௯ (அச்சில் உள்ளவாறு).

“பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலைய ராவ ரெனின்.”

பசக்கமன் = பசலை படர்க. ‘மன்’ என்பது அசைநிலை.
பட்டாங்கு = பசந்தவாறு.
நயப்பித்தவர் = நயந்துகூறி பிரிந்தவர்.
நன்னிலையர் = மேன்மையர்.

“நயப்பித்தார் நன்னிலையராவரெனின் என்மேனி பட்டாங்கு பசக்கமன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நயந்துகூறி பிரிந்தவர் பிரிவதற்குக்கூறிய செயல்களில் மேனிலையை அடைவாரெனின் எனது மேனி பசந்தவாறு பசலையுறுக” என்பதாம்.

‘பசக்கமன்’ என்பதன்கண் வந்த ‘மன்’ என்னும் அசைநிலை ‘பசக்க’ என்னும் வியங்கோள்வினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பட்டாங்கென்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘என்’ என்பது ‘மேனி’ என்னும் சொல்லுடன் ஒட்டி ‘என்மேனி’யென தொகைச்சொல்லாகும்.

செம்மைவடிவம் —
“பசக்கமன் பட்டாங்கு*என் மேனி நயப்பித்தார்
நன்னிலைய ராவ ரெனின்.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௱௯௰ (அச்சில் உள்ளவாறு).

“பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றா ரெனின்.”

பசப்பென = பசலைநோயென.
பேர்பெறுதல் = பேசப்படுதல்.
நன்றே = இனிதே.
நயப்பித்தார் = நயந்துகூறி பிரிந்தவர்.
நல்காமை = அன்புசெய்யாமை.
தூற்றார் = பழித்துப்பேசார்.
எனின் = என்றால்.

“நயப்பித்தார் நல்காமைதூற்றாரெனின் பசப்பென பேர்பெறுதல் நன்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நயந்துகூறி பிரிந்தவர் அன்புசெய்யாமையை ஊரார் பழித்துப்பேசாரெனின் இந்நோய் பசலைநோயென பேர்பெறுதல் இனிதே” என்பதாம். கணவர்க்கு பழி நேராதாயின் பசலையும் இனிதே என்பதாம்.

‘பசப்பென’ என்பதன்கண் வந்த ‘என’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘பசப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘பெறுதல்’ என்னும் தொழிற்பெயர் ‘நன்றே’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணராது. ‘பெறுதனன்றே’ என்னும் புணர்மொழியில் எதுவும் தொகவில்லை.

செம்மைவடிவம் —
“பசப்பென பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றா ரெனின்.”

தொகுத்தெழுதியவர்:முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button