
குறள் – ௲௪௰௧ (அச்சில் உள்ளவாறு).
“இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது.”
இன்மையின் = இல்லாமையின்.
இன்னாதது = துன்பமானது, கொடியது.
யாதெனின் = யாதென்றால்.
இன்மையே = இல்லாமையே.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இல்லாமையின் துன்பமானது யாதென்றால் இல்லாமையின் இல்லாமையே துன்பமானது” என்பதாம்.
‘இன்மையின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘இன்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இன்னாதது’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எனின்’ என்னும் இணைப்பிடைச்சொல் ‘யாது’ என்னும் வினாப்பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இன்மையே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இன்மையின் இன்னாத(து)* யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௪௰௨ (அச்சில் உள்ளவாறு).
“இன்மை யெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும்.”
இன்மை = இல்லாமை.
பாவி = கொடியவன்.
மறுமையும் = மறுபிறப்பும்.
இம்மையும் = இப்பிறப்பும்.
இன்றி = ஒழிக்க.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இல்லாமையென்னும் ஒருபாவி மறுபிறப்பையும் இப்பிறப்பையும் ஒழிக்க வரும்” என்பதாம்.
‘என’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘இன்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘இம்மையும்’ என்பது புணராது.
செம்மைவடிவம் —
“இன்மை யெனஒரு பாவி மறுமையு
மிம்மையும் இன்றி வரும்.”
குறள் – ௲௪௰௩ (அச்சில் உள்ளவாறு).
“தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னு நசை.”
தொல்வரவு = பண்பட்ட மரபு.
தோல் = புகழ்.
கெடுக்கும் = அழிக்கும்.
தொகையாக = ஒன்றாக.
நல்குரவு = இல்லாமை.
நசை = குற்றம்.
“நல்குரவென்னும் நசை தொல்வரவும் தோலும் தொகையாக கெடுக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இல்லாமையென்னும் குற்றம் பண்பட்ட மரபினையும் அதன்வழிவந்த புகழையும் ஒன்றாக அழிக்கும்“ என்பதாம்.
எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ’தோலும்’ என்பது புணராது.
‘கெடுக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நல்குரவு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“தொல்வரவுந் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை.”
குறள் – ௲௪௰௧௪ (அச்சில் உள்ளவாறு).
“இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.”
இற்பிறந்தார் = நற்குடியில் பிறந்தார்.
கண்ணேயும் = இடத்தும்.
இன்மை = இல்லாமை.
இளி வந்த = இழிவான.
சோர்வு = தளர்வு.
“இன்மை இற்பிறந்தார்கண்ணேயும் இளிவந்த
சொற்பிறக்குஞ்சோர்வுதரும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நற்குடியில் பிறந்தாரிடத்தும் இழிவான சொற்களைப்பேசும் தளர்வினை இல்லாமை தரும்” என்பதாம்.
‘இற்பிறந்தார்கண்ணேயும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘இன்மை’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘சொற்பிறக்கும் சோர்வு’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.”
குறள் – ௲௪௰௫ (அச்சில் உள்ளவாறு).
“நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.”
நல்குரவு = இல்லாமை.
இடும்பையுள் = துன்பத்துள்.
பல்குரை = பல. ‘குரை’ என்பது அசைச்சொல்.
படும் = சேரும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இல்லாமை என்னும் துன்பத்துள் பல துன்பங்கள் சென்று சேரும்” என்பதாம்.
‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நல்குரவு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இடும்பையுள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இடும்பை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘குரை’ என்னும் அசைச்சொல் ‘பல் (பல)’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரை
துன்பங்கள் சென்று படும்.”
குறள் – ௲௪௰௬ (அச்சில் உள்ளவாறு).
“நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.”
நற்பொருள் = தன்மைதரும் கருத்து, செம்பொருள்.
நன்குணர்ந்து = நன்காராய்ந்து, தெளிய அறிந்து.
நல்கூர்ந்தார் = இல்லாதார்.
சோர்வு = குற்றம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“செம்பொருளைத்தெளிந்து சொல்லினும் இல்லாதார் சொல்லிய கருத்து குற்றப்படும்” என்பதாம்.
‘சொல்லினும்’ என்பது உம்மையொடு புணர்ந்த ‘செய்யின்’ என்னும் வாய்பாட்டுவினையெச்சம் ‘நல்கூர்ந்தார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.”
குறள் – ௲௪௰௭ (அச்சில் உள்ளவாறு).
“அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.”
அறஞ்சாரா = முறைதவறிய, தீய நெறி.
நல்குரவு = இல்லாமை.
ஈன்ற தாயானும் = பெற்ற அன்னையாலும்.
பிறன் = அயலார், உறவிலார்.
நோக்கப்படும் = கருதப்படும்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தீய நெறியால் இல்லாமையை அடைந்த மகன் பெற்ற அன்னையாலும் அயலார் போல கருதப்படும். தாய் மகனை மகனாக கருதாள்” என்பதாம்.
‘நல்குரவு’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறஞ்சாரா நல்குரவு* ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.”
* இவ்விடத்து முற்றுகரமாகிய வுகரம் குற்றியலுகரம்போல அலகுபெறாது.
குறள் – ௲௪௰௮ (அச்சில் உள்ளவாறு).
“இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
கொன்றது போலு நிரப்பு.”
வருவது கொல்லோ = வருமோ. (கொல் = அசைச்சொல்).
நெருநலும் = நேற்றும்.
நிரப்பு = வறுமை.
“நெருநலும் கொன்றது போலும் நிரப்பு இன்றும் வருவது கொல்லோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நேற்றும் இறப்புக்கு ஒப்பான துன்பந்தந்த வறுமை இன்றும் வருமோ” என்பதாம்.
‘நெருநலும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘போலும்’ என்னும் உவமவுருபு ‘கொன்றது’ என்னும் வினைச்சொல்லுடன் புணர்ந்து ஒப்புப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.”
குறள் – ௲௪௰௯ (அச்சில் உள்ளவாறு).
“நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது.”
துஞ்சலும் = உறங்குவதும்.
நிரப்பினுள் = வறுமையில்.
யாதொன்றும் = எவ்வகையிலும்.
கண்பாடு = உறங்குவது.
அரிது = இயலாது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“நெருப்பினுள் உறங்குவதும் இயலும். ஆனால் வறுமையில் உறங்குவது எவ்வகையிலும் இயலாது” என்பதாம்.
‘நெருப்பினுள்’’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘நெருப்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘துஞ்சலும்’ என்பது ‘துஞ்சமுடியாது’ என்னும் எதிர்மறைப்பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘கண்பாடு’ என்பது ‘உறக்கம்’ என்னும் இயல்புப்பொருள்தரும் சொல். இயல்புப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது.”
குறள் – ௲௫௰ (அச்சில் உள்ளவாறு).
“துப்புர வில்லார் துவரத் துறவாமை
யுப்பிற்குங் காடிக்குங் கூற்று.”
துப்புரவு = நுகர்ச்சி ( உணவு).
துவரத்துறவாமை = முற்றும் துறவாதது.
காடி = புளித்த பழங்கஞ்சி.
கூற்று = கூற்றுவன் (உண்போர்).
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“நுகரும் பொருள்களிலில்லாதார் (உண்பதற்கு உணவில்லாதார்) முற்றும் துறவாதது பிறர் வீட்டிலுள்ள உப்பிற்கும் புளித்த பழங்கஞ்சிக்கும் கூற்றுவன் (உண்போர்) ஆவர்” என்பதாம்.
‘துறவாமை’ என்னும் தொழிற்பெயர் உம்மைத்தொடருடன் புணராது விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது.
உம்மைத்தொகை தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணராது. இறுதியெண்ணும்மையான ‘காடிக்கும்’ என்பது புணராது.
செம்மைவடிவம் —
“துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்கும் கூற்று.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




