
குறள் – ௯௮௰௧ (அச்சில் உள்ளவாறு).
“கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.”
கடன் = கடமை.
கடனறிந்து = பொறுப்பறிந்து.
சான்றாண்மை = நற்குணங்களால் நிறைதலும் அவற்றை ஆளுதலும்.
“கடனறிந்து
சான்றாண்மைமேற்கொள்பவர்க்கு நல்லவையெல்லாம் கடனென்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பொறுப்பறிந்து சான்றாண்மையை மேற்கொள்பவர்க்கு நல்லவையெல்லாம் கடமை என்பர்” என்பதாம்.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.”
குறள் – ௯௮௰௨ (அச்சில் உள்ளவாறு).
“குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூஉ மன்று.”
குணநலம் = பண்புநலம்.
“குணநலனே சான்றோர் நலம். பிறநலம் எந்நலத்துள்ளதூஉமன்று.” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நற்பண்புகளால் விளையும் நலன்களே சான்றோரது நலம். அந்நலம் இல்லாதவிடத்து அவரிடமுள்ள எந்நலன்களும் உள்ளவையாகா” என்பதாம்.
‘குணநலம்’, ’பிறநலம்’ என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘எந்நலத்துள்ளதூஉம்’ என்று அளபெடுத்து வந்தது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று.”
குறள் – ௯௮௰௩ (அச்சில் உள்ளவாறு).
“அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
டைந்துசால் பூன்றிய தூண்.”
நாண் = நாணம், பழிக்கு அஞ்சுதல்.
ஒப்புரவு = உதவுதல்.
கண்ணோட்டம் = உயிரிரக்கம்.
சால்பு = சான்றாண்மை.
ஊன்றிய = நிலைநிறுத்தும்.
“அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய தூண்” எனப்பிரித்து ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“அன்பு, பழிக்கு அஞ்சுதல், உதவுதல், உயிரிரக்கம், வாய்மை ஆகிய ஐந்தும் சான்றாண்மையை நிலைநிறுத்தும் தூண்கள்” என்பதாம்.
இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் புணராது தனித்துநின்று தத்தம் பொருளை உணர்த்தும். ‘நாணொப்புரவு’ எனப்புணராது பிரிந்து நிற்கும்.
செம்மைவடிவம் —
“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு*
ஐந்துசால்பு* ஊன்றிய தூண்.”
*குற்றியலுகரங்களாகிய டுகரமும் புகரமும் அலகுபெறா.
குறள் – ௯௮௰௪ (அச்சில் உள்ளவாறு).
“கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.”
கொல்லா = உயிர்கொல்லா.
நலத்தது = நன்மையுடையது. நோன்மை = நோன்பு, தவம்.
சால்பு = சான்றாண்மை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உயிர்கொல்லாமையென்னும் நன்மையுடையது தவம். (அதுபோல) பிறரது தீமையைச்சொல்லாத நன்மையுடையது சான்றாண்மை” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௯௮௰௫ (அச்சில் உள்ளவாறு).
“ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.”
ஆற்றுவார் = வினைமுடிப்பார்.
ஆற்றல் = வலிமை.
பணிதல் = ஏற்றல்.
மாற்றாரை = மாறுபட்டாரை.
படை = கருவி.
“ஆற்றுவாராற்றல் சான்றோர் பணிதல் அது மாற்றாரை மாற்றும் படை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வினைமுடிப்பாரது வலிமையை சான்றோரை ஏற்றல் அது தம்முடன் மாறுபட்டாரையும் உடன்படுத்தும் படைக்கலன்” என்பதாம்.
செய்யுளில் ‘பணிதல்’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
இயல்புப்பொருள்தரும் ‘அது’ என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாகி புணராது.
செம்மைவடிவம் —
“ஆற்றுவா ராற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.”
குறள் – ௯௮௰௬ (அச்சில் உள்ளவாறு).
“சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி
துலையல்லார் கண்ணுங் கொளல்.”
சால்பு = சான்றாண்மை.
கட்டளை = உரைகல்.
துலை = நிறை.
துலையல்லார் = நிறையில்லார், தாழ்ந்தோர்.
கொளல் = ஒப்பல், ஏற்றல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“சான்றாண்மைக்கு உரைகல் எதுவென்றால் தானுற்ற தோல்வியை தாழ்ந்தோரிடமும் ஒப்புக்கொளல்” என்பதாம்.
‘சால்பிற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘கட்டளை’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘எனின் (எனில்)’ என்னும் இடைச்சொல் ‘யாது’ என்னும் வினாப்பெயருடன் புணர்ந்து அதன்முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘துலையல்லார்கண்ணும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“சால்பிற்கு கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.”
குறள் – ௯௮௰௭ (அச்சில் உள்ளவாறு).
“இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு.”
இன்னா = துன்பம்.
இனியவே = நன்மையே.
செய்யாக்கால் = செய்யாவிடில்.
பயத்ததோ = பயனுடைத்தோ.
சால்பு = சான்றாண்மை.
“இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் சால்பு என்ன பயத்ததோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“துன்பத்தை செய்தார்க்கும் நன்மையே செய்யாவிடில் சான்றாண்மை என்ன பயனுடைத்தோ” என்பதாம்.
‘இன்னாசெய்தார்க்கும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘செய்யாக்கால்’ என்னும் வினையெச்சம் ‘என்ன’ என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.”
குறள் – ௯௱௯௰௯ (அச்சில் உள்ளவாறு).
“இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.”
இன்மை = இல்லாமை, வறுமை.
இளிவன்று = இழிவு ஆகாது.
சால்பு = சான்றாண்மை.
திண்மை = செறிவு, வலிமை.
பெறின் = பெற்றால்.
“சால்பென்னுந்திண்மை உண்டாக பெறின் இன்மை ஒருவற்கு இளிவன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சான்றாண்மையெனப்படும் திண்மை உண்டானால் வறுமை இழிவு ஆகாது” என்பதாம்.
‘இன்மை’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘ஒருவற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘இளி (இழிவு)’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
என்னும் என்ற விளக்கயிடைச்சொல் ‘சால்பு’ என்ற பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உண்டாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இன்மை ஒருவற்கு* இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாக பெறின்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௯௮௰௯(அச்சில் உள்ளவாறு).
“ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்.”
ஊழி = காலம்.
பெயரினும் = நிலைமாறினும்.
பெயரார் = நிலைமாறார்.
ஆழி = பெருங்கடல்.
“சான்றாண்மைக்கு ஆழியெனப்படுவார் ஊழி பெயரினும் தாம் பெயரார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சான்றாண்மையின் பெருங்கடல் எனப்படுவார் காலம் நிலைமாறினும் தம்நிலையில் மாறார்” என்பதாம்.
‘பெயரினும்’ என்பது ‘பெயராது’ என்னும் பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘சான்றாண்மைக்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘ஆழி’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு*
ஆழி யெனப்படு வார்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௯௱௯௰ (அச்சில் உள்ளவாறு).
“சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.”
சான்றவர் = சால்பினோர், உயர்ந்தோர்.
குன்றின் = தாழ்ந்தால், குறைந்தால்.
இருநிலம் = பெரிய நிலம், பூவுலகு.
மன் = ஒழியிசை. ஓ = அசைநிலை.
மன்னோ = அசைச்சொல்.
பொறை = சுமை.
“சான்றவர் சான்றாண்மைகுன்றின் இருநிலந்தான் பொறை தாங்காது மன்னோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உயர்ந்தோர் சான்றாண்மையில் குறைந்தால் பெரிய நிலமான இவ்வுலகு சுமையைத்தாங்காது” என்பதாம்.
‘குன்றின்’ என்னும் வினையெச்சம் ‘இருநிலம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.



