இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — காமத்துப்பால். இயல் — கற்பியல். தலைப்பு - ௱௨௰௧. நினைந்தவர் புலம்பல். பிரிந்ததை நினைப்பவர் வருந்திச்சொல்வது.

குறள் – ௲௨௱௧ (அச்சில் உள்ளவாறு).

“உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காம மினிது.”

உள்ளினும் = நினைத்தாலும்.
தீரா = குறையா(த).
பெருமகிழ் = மிக்க இன்பம்.
காமம் = காதல்.
இனிது = இன்பமானது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“நினைத்தாலும் குறையாத மிக்க இன்பத்தைத்தருதலால் கள்ளினும் காதல் இன்பமானது” என்பதாம்.

‘செய்தலால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘செய்தல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து அதனைபொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘உள்ளினும்’, ‘கள்ளினும்’ என்பன உயர்வுச்சிறப்பும்மைச்சொற்கள். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘காமம்’ என்பது வேறுபடுத்தப்படாத இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எழுவாயும் ஆகும். இருநிலையிலும் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.”

 

குறள் – ௲௨௱௨ (அச்சில் உள்ளவாறு).

“எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.”

எனைத்தொன்று → எனைத்தொன்றும் = எத்துணையளவாயினும், எவ்வளவாயினும் (உம்மை தொக்கது).
இனிதேகாண் = இன்பமானதே. ‘காண்’ என்பது முன்னிலையசைச்சொல்.
வீழ்வார் = விரும்புவார்.
நினைப்ப = நினைக்க.
ஒன்று = துன்பம் (இடப்பொருள்).
இல் = இல்லை.

“எனைத்தொன்று காமம் இனிதேகாண் தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன்று இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எத்துணையளவாயினும் காமம் இனிதே. தாம் விரும்புவாரை நினைக்க பிரிவினால் வருவதோர் துன்பம் இல்லை” என்பதாம்.

‘எனைத்தொன்றும்’ என்றவாறு உம்மை தொக்குவரும் சொல் முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘காமந்தாம்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. இப்புணர்ச்சியால் ‘தாம்’ என்னும் எழுவாயாகும் மறுபெயர்ச்சொல் இடைச்சொல்லாகவும் மயங்கும்.

‘ஒன்றில்’ என்பதன்கண் வந்த ‘இல் (இல்லை)’ என்பது ‌ எதிர்மறைக்குறிப்புவினைமுற்று. இப்பொருந்தாப்புணர்ச்சியில் வினைமுற்று வேற்றுமைவுருபாகவும் மயங்கும்.

செம்மைவடிவம் —
“எனைத்தொன்று* இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று* இல்.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௱௩ (அச்சில் உள்ளவாறு).

“நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல்
சினைப்பது போன்று கெடும்.”

நினையார்கொல் = நினையாரோ.
சினைப்பது = அரும்புவது, தோன்றுவது.
கெடும் = நீங்கும்.

“தும்மல் சினைப்பது போன்று கெடும் நினைப்பவர் போன்று நினையார்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தும்மல் எழுவதுபோன்று எழுந்து அடங்கியது. எம்மை நினைக்க விரும்பி நினையாது‌ இருந்தாரோ” என்பதாம்.

‘கொல்’ என்னும் ஐயக்குறிப்புச்சொல் ‘நினையார்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து ஐயப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.”

 

குறள் – ௲௨௱௪ (அச்சில் உள்ளவாறு).

“யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ வுளரே யவர்.”

உளேங்கொல் = உள்ளேமோ.
ஓஒ → ஓ = வியப்பிடைச்சொல்.
உளரே = உள்ளாரே.
அவர் = கணவர்.

“எம்நெஞ்சத்து அவர் உளரே அவர்நெஞ்சத்து ஓஒ யாமும் உளேங்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எமது நெஞ்சத்தில் அவர் உள்ளாரே. அவ்வாறே அவர் நெஞ்சத்தில் யானும் உள்ளேனோ” என்பதாம்.

‘யாமும்’ என்னும் உயர்வுச்சிறப்பும்மைச்சொல் புணரின் சிறப்பும்மையினது செறிவு குன்றும். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

‘கொல்’ என்னும் ஐயயிடைச்சொல் ‘உளேம்’ என்னும் வினைச்சொல்லுடன் புணர்ந்து ஐயப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நெஞ்சத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஓஒ’ என்னும் அளபெடுத்த வியப்பிடைச்சொல் புணராது தனித்துநின்று வியப்பினை உணர்த்தும்.

‘உளரே’ என்னும் அறுதியிடும் தேற்றேகாரச்சொல் புணரின் அறுதி குன்றும். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து* எந்நெஞ்சத்து*
ஓஒ உளரே அவர்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௱௫ (அச்சில் உள்ளவாறு).

“தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ லெந்நெஞ்சத் தோவா வரல்.”

கடிகொண்டர் = காத்துக்கொண்டார்.
நாணார்கொல் ‌= நாணாரோ.
ஓவா = இடைவிடாது.
வரல் = வருவது.

“தந்நெஞ்சத்து எம்மைக்கடிகொண்டார் எம்நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தமது நெஞ்சத்தில் ‌யான் வாராவண்ணம் காத்துக்கொண்டவர் எமது நெஞ்சத்தில் இடைவிடாது வருதற்கு நாணாரோ” என்பதாம்.

‘நெஞ்சத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நாணார்கொல்’ என்பதன்கண் வந்த ‘கொல்’ என்னும் ஐயயிடைச்சொல் ‘நாணார்’ என்னும் வினைச்சொல்லுடன் புணர்ந்து ஐயப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“தந்நெஞ்சத்து* எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத்து* ஓவா வரல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௲௨௱௬ (அச்சில் உள்ளவாறு).

“மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா
னுற்றநா ளுள்ள வுளேன்.”

மற்று+யான் → மற்றியான் குற்றியலிகரப்புணர்ச்சி . மற்று என்பது வினைமாற்றுப்பொருளில் வந்த இடைச்சொல்.
என் + உளேன் → என்னுளேன் = எதனால் உயிர்வாழ்கிறேன்.
மன்னோ = ‘மன்’ என்பது நினைப்பதனால் அன்றி பிற காரணங்களால் அல்லயெனும் பொருள்தரும் ஒழியிசையிடைச்சொல். ‘ஓ’ என்பது அசைநிலை.
அவரொடு = கணவரொடு.
உற்ற = பொருந்திய.
உள்ள = நினைக்க.
உளேன் = உயிர்வாழ்கிறேன்.

“அவரொடு பொருந்திய நாள்களை நினைக்க யான் உயிர்வாழ்கிறேன். வேறு எதனால் உயிர்வாழ்கிறேன்; வேறு காரணங்களால் அல்ல” என்பதாம்.

‘மற்றியான்’ என்னும் குற்றியலிகரப்புணர்ச்சி ‘யான்’ என்னும் எழுவாயாகும் மறுபெயர்ச்சொல் யாப்பின்பொருட்டு புணர்ந்தது.

ஓகாரம் அசைநிலையாகி ‘மன்’ என்னும் ஒழியிசையிடைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

அவரொடு+யான் → அவரொடியான் என்பது குற்றியலிகரப்புணர்ச்சி. இவ்விடத்து குற்றியலிகரப்புணர்ச்சி நிகழாவிடத்தும் யாப்பு கெடாது.

செம்மைவடிவம் —
“மற்றியான் என்உளேன் மன்னோ அவரொடியான்
உற்றநா ளுள்ள வுளேன்.”

குறள் – ௲௨௱௭ (அச்சில் உள்ளவாறு).

“மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே
னுள்ளினு முள்ளஞ் சுடும்.”

மறப்பின் = மறந்தால்.
எவனாவன் = யாது ஆவேன்.
மன்+கொல் →மற்கொல் = ‘மன்’ என்பது ‘மறவேன்’ என்னும் ஒழியிசைப்பொருளில் வந்த இடைச்சொல். ‘கொல்’ என்பது அசைச்சொல்.
உள்ளினும் = நினைத்தாலும்.
சுடும் = ஆறாத்துன்பத்தைத்தரும்.

“கணவரொடு கூடிவாழ்ந்த இன்பத்தை மறவாதிருக்கும்போதே அவர் பிரிவு உள்ளத்திற்கு ஆறாத்துன்பத்தைத்தருகிறது. மறந்தால் என்னாவேன்; உயிர்நீங்கும்” என்பதாம்.

‘மறப்பின்’ என்னும் வினையெச்சம் ‘எவன்’ என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘மற்கொல் என்பது வலிந்த புணர்ச்சி. மன்’ என்னும் இடைச்சொல் ஒழியிசைப்பொருளிலும் ‘கொல்’ என்னும் இடைச்சொல் அசைநிலையிலும் வேறுவேறு பொருளில் வந்ததால் புணராதிருத்தல் நேர்ப்பொருளைத்தரும்.

‘மறப்பறியேன்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘உள்ளினும்’ என்பது உள்ளேன் என்னும் பொருளைத்தரும் எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.

‘உள்ளம்’ என்பது வேறுபடுத்தப்படாத எழுவாயாகும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மறப்பின் எவனாவன் மன்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.”

 

குறள் – ௲௨௱௮ (அச்சில் உள்ளவாறு).

“எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ
காதலர் செய்யுஞ் சிறப்பு.”

எனைத்து = எத்துணையளவு, அளவின்றி.
காயார் = சினங்கொள்ளார். அனைத்தன்றோ = அத்துணையளவன்றோ.
காதலர் = அன்புடையார்.
செய்யும் = தரும்.
சிறப்பு = இன்பம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“யான் அளவின்றி நினைப்பினும் சினங்கொள்ளார். அத்துணையளவன்றோ அன்புடையார் எமக்கு தரும் இன்பம்” என்பதாம்.

‘எனைத்துநினைப்பினும்’ என்னும் முற்றும்மைச்சொல் புணரின் முற்றுமையினது செறிவு குன்றும். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘காயார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘செய்யும் சிறப்பு’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

செம்மைவடிவம் —
“எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.”

 

குறள் – ௲௨௱௯ (அச்சில் உள்ளவாறு).

“விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா
ரளியின்மை யாற்ற நினைந்து.”

விளியும் = தேயும்.
இன்னுயிர் = ஆருயிர்.
அளியின்மை = அன்பின்மை.
ஆற்ற = மிகவும்.

“வேறல்லம் என்பாரளியின்மையாற்ற நினைத்து என் இன்னுயிர் விளியும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“நாம் இருவரும் வேறல்லமென்று கூறியாரது அன்பின்மையை மிகவும் நினைத்து எனது ஆருயிர் தேயும்” என்பதாம்.

‘விளியும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘அல்லம்’ என்னும் குறிப்புவினைமுற்று ‘என்பார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“விளியும்என் னின்னுயிர் வேறல்லம் என்பா
ரளியின்மை யாற்ற நினைந்து.”

 

குறள் – ௲௨௰ (அச்சில் உள்ளவாறு).

“விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்
படாஅதி வாழி மதி.”

விடாஅது → விடாது = தடுத்தும் நில்லாது.
படாஅதி → படாதி = கண்ணில் படாதே, தோன்றாதே.
வாழி = வாழ்வாயாக.
மதி = நிலவு.

“விடாஅது சென்றாரை கண்ணினால் காண மதியே படாஅதி (நீ) வாழி” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. விளிவுருபு (மதியே) மறைந்து நின்றது. ‘நீ’ என்பது சொல்லெச்சம்.

“தடுத்தும் நில்லாது பிரிந்து சென்றவரை கண்ணகளால் காணும்வரை மதியே என் கண்ணில் படாதே. நீ வாழ்வாயாக” என்பதாம்.

‘சென்றாரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘கண்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

‘கண்ணினால்’ என்பதன்கண் ‘இன்’ என்னும் சாரியைபெற்று வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘காணுதல்’ மனையாளின் வினை, ‘படாதி’ மதியின் வினை. இருவேறு வினைமுதல்களின் வினைகள் புணரா.

செம்மைவடிவம் —
“விடாஅது சென்றாரை கண்ணினால் காண
படாஅதி வாழி மதி.”

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button